புதன், 8 பிப்ரவரி, 2023

பிரதமர் மோடி ‘ஜக்கி’யின் உண்மைப் பக்தராக இருந்தால்.....

மோடி அவர்கள் ‘ஜக்கி’யின் பக்தர் என்பதற்குக் கீழ்க்காணும் படமே ஆதாரம்.

ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாலும், கொஞ்சமும் ஆஞ்சாமல், தான் ஒரு ஞானி, அவதாரம் என்று மக்களை நம்ப வைக்கும் தந்திர உத்திகளையும் உபாயங்களையும் ஜக்கி தொடர்ந்து கையாள்கிறார் என்பது அறிஞருலகம் அறிந்த உண்மை[இவரின்  ‘ஆதியோகி ரதம்’ தமிழ்நாடு முழுவதற்குமான யாத்திரையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது].

இவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பாடாமலிருப்பதற்கு மோடி அவர்கள் தரும் மறைமுக ஆதரவுதான் காரணம் என்றும் அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

அவர்களின் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், உண்மையில் ஜக்கி ஓர் அவதாரப்புருசன்தான் என்றும் நம் பிரதமர் அவர்கள் நம்பினால்.....

அதி பயங்கர நிலநடுக்கங்களால் உருக்குலைந்து, வாழ்வாதாரங்கள் சிதைந்து ஏராளமானோர்[10,000க்கும் மேல் இருக்கலாம் என்பது இன்றையக் காலைச் செய்தி] உயிரிழந்திருக்க, எஞ்சியோர் உயிர்பிழைக்கப் போராடிக்கொண்டிருக்கும் பரிதாப நிலையில்[அங்கு மக்கள் படும் துன்பங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை], துருக்கிக்கு உதவிப் பொருட்களையும், மருத்துவர் குழுக்களையும் அனுப்பியுள்ள அவர், கடவுளின் அவதாரமாகத் தன்னை உருவகப்படுத்திக்கொள்வதில் முனைப்புக் காட்டும் ஜக்கியை உடனடியாக அங்கு அனுப்பிவைத்திடல் வேண்டும் என்பது நம் மனப்பூர்வமான வேண்டுகோள்.

[இந்த வேண்டுகோள், ஜக்கியையோ, அவருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சொல்லப்படும் பிரதமரையோ கிண்டலடிப்பதற்காக முன்வைக்கப்படவில்லை என்று உளமார உறுதியளிக்கிறோம்].

‘சத்குரு’ எனப்படும் ஜக்கியின் திருப்பாதம் பட்டால், அடுத்தடுத்து துருக்கியையும் சிரியாவையும் கிடுகிடுக்கச் செய்யும் நிலநடுக்கங்கள் முற்றிலுமாய் அடங்கிப்போகும் என்பது உறுதி[மண் பாதுகாப்புக்காக ஒட்டுமொத்த உலகையே சுற்றிவந்த ஜக்கிக்குத் துருக்கி[+சிரியா] செல்வது ஒரு பொருட்டல்ல].

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி&சிரியா மக்களுக்குத் தக்க தருணத்தில் பிரதமர் உற்றுழி உதவுவதை உளமாரப் பாராட்டும் அதே மனநிலையில்தான் இந்த வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.

ஜக்கியின் அருட்பார்வையால், பாதிக்கப்பட்ட நாடுகளில் நிலநடுக்கம் நின்றுபோனால்.....

ஜக்கியை மிகக் கடுமையா விமர்சிப்பவர்கள் ‘ஜக்கி உண்மையில் சத்குருதான்; அவதாரம்தான்’ என்று நம்புவார்கள்; அவரைப் போற்றுவார்கள்; உலகெங்கும் அவர் புகழ் பரப்புவார்கள்!

==============================================================================