செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

‘அவர்’ அங்கெல்லாம் இல்லை. இங்கே வந்து தேடுங்கள்!

உலகிலுள்ள பக்தர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

மொட்டை போடுகிறார்கள்; எச்சிலையில் உருளுகிறார்கள்; உண்டியலில், பணத்தைக் கட்டுக்கட்டாய்ப் இட்டு நிரப்புகிறார்கள். அர்ச்சனை ஆராதனை, பண்டிகை, கொண்டாட்டம் என்று வேறு வேறு வழிமுறைகளையும் கையாள்கிறார்கள். இவர்கள் ஒரு தரப்பினர்.

மண்டியிட்டுத் தொழுபவர்கள். இரு கையேந்திக் கோரிக்கை வைப்பவர்கள், ஒருங்கிணைந்து கூட்டு வழிபாடு நடத்துபவர்கள் என்றிவர்கள் எல்லாம் இன்னொரு தரப்பினர். 

இவர்களில் எவருமே கடவுளைக் கண்டவரில்லை; கண்டதாகப் பிறரிடம் சொன்னவரும் இல்லை.

காரணம்.....

இவர்கள் தேடிச் செல்லும் கோயில்களில் அவர்[கடவுள்] இல்லை என்பதே.

கோயிலில் ‘இருந்து’ பக்தர்களுக்குக் காட்சியளிக்க அவருக்கு நேரமே இல்லை என்பதும் ஒரு காரணம்.

தான் படைத்த உயிர்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை மட்டுமே செய்பவர் கடவுள். நேர்மாறாக, உயிர்களுக்குத் தீமை செய்தலை மட்டுமே தொழிலாகக் கொண்டவன் சாத்தான். 

கடவுள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கும் வகையில், சுனாமி, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம் என்னும் படுபயங்கர நிகழ்வுகளை உண்டுபண்ணி, மக்களை[பிற உயிர்கள் உட்பட]க் கொத்துக் கொத்தாய், கூட்டம் கூட்டமாய், லட்சம் லட்சமாய்க் கொன்று குவிக்கிறான் சாத்தான்.

சாத்தான் நிகழ்த்தும் பேரழிவுகளிலிருந்து மக்களைக் கடவுள் காப்பாற்றுவதில்லை என்பதால், சுனாமியிலும், நிலநடுக்கத்தால் ஏற்படும் கட்டட இடிபாடுகளிலும் சிக்கிக் கடவுள் காணாமல்போகிறாரோ என்னும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அவ்வப்போது சாத்தான் நிகழ்த்தும் இந்தப் பேரழிவுகளிலிருந்து கடவுள் தப்பிப் பிழைத்திருந்தாலும்.....

சில நாட்களுக்குள் துருக்கியிலும் சிரியாவிலும் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் உடைந்து சிதறிய கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், உடலுறுப்புகள் சிதைந்து உயிருக்குப் போராடுபவர்களுக்கும் இடையே நம் கடவுளும் சிக்குண்டு தவிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

ஆகவே, கடவுளை நேரில் கண்டு தரிசிக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக அலைந்து திரியும் கோடி கோடிக் கணக்கான பக்தர்களிடம் நாம் சொல்லிக்கொள்வது.....

பக்தர்களே,

முடிந்தால் துருக்கிக்கும் சிரியாவுக்கும் செல்லுங்கள்.

சென்று, உருக்குலைந்து தாறுமாறாய்ச் சிதைந்து கிடக்கும் கட்டட இடிபாடுகளில் உங்கள் கடவுளைத் தேடுங்கள்.

கண்டுபிடித்தால், திருவடி தொழுது அவரின் ஆசியைப் பெறுவது உங்களுக்குச் சாத்தியமாகலாம்.

வாழ்த்துகள்!

எச்சரிக்கை!//துருக்கி - சிரியா நிலநடுக்க

ம்: "இடிபாடுகளில் குரல் கேட்கிறது.

காப்பாற்ற

யாரும் இல்லை" https://www.bbc.com/tamil/global-64550258 [5 மணி நேரங்களுக்கு முன்பு]//

பக்தர்களே, கேட்பது கடவுளின் குரலாகவும் இருக்கலாம்!

======================================