அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இந்துமத அழிவிற்கு இனி எதிரிகள் தேவையில்லை!!!

#இந்துக் கோவில்கள் பலவற்றிலும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்திருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே[எனக்குத் தெரியாதய்யா!]. அப்படி நீங்கள் கொஞ்சமும் யோசித்துப் பார்க்காத மர்மம் நிறைந்த கோவிலான கேதரேஸ்வரர் குகைக் கோவில் பற்றித்தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு சிவன் கோவிலுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில். இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த மர்மங்கள் நிறைந்த குகைக் கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது; ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் மட்டுமல்ல, இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது.

இந்தக் குகை மற்றக் குகைகளைப் போல அல்ல; தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இந்தத் தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். குறிப்பாக, மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

இந்தக் குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம்.

சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத்தான் இந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு யுகம் முடிவடையும்போதும், ஒவ்வொரு தூணாகக் கீழே விழும் என்பதுதான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்துவிட்டனவாம். இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. இந்த நான்காம் தூண்தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். ந்தத் தூண்தான் இந்தப் பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம். இந்தத் தூண் விழும் நாள்தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம். அதாவது உலகம் அழியும் நாள்[https://tamil.samayam.com/religion/temples/kaliyuga-suspense-the-mysterious-kedareshwar-cave-temple-in-tamil/articleshow/72477236.cms?story=2]#

                                      *   *   *   *   *

ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மண்டபத்தின் தூண்கள் காலப்போக்கில் சிதைந்து அழிந்துவிடுவது என்பது இயற்கையான நிகழ்வு. இந்த நியதியின்படிதான் மூன்று தூண்கள் உடைந்து சிதறியிருக்கின்றன.

நான்காவது தூணின் நிலைப்பாட்டைப் பழம்பொருட்கள் குறித்த அறிவியல் ஆய்வாளர்களால் மிக எளிதில் கணித்துவிட முடியும். கலியுகம் முடியும்போது உடையும் என்பது அப்பட்டமான பொய்.

இந்தச் சிதைந்த தூண்களைப் படம் பிடித்துப் பதிவு செய்து ஊடகச் செய்தியாக்கியதோடு, நான்காவது தூண்தான் பிரபஞ்சத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறது என்று 'புருடா' விடுவது பொறுத்துக்கொள்ளவே இயலாத பொல்லாங்குத்தனம்.

இந்துமதத்தை அழித்தொழிப்பதற்கு எதிரிகள் வேண்டாம். அதைச் செய்வதற்குத்தான், வரிந்துகட்டிக்கொண்டு இம்மாதிரியான பல கும்பல்கள்  களமிறங்கியிருக்கின்றன.

கலியுக முடிவில் எஞ்சியிருக்கும் இந்த ஒற்றைத் தூண் தானாக உடைவது இருக்கட்டும், தற்செயலாக இடிமின்னல் தாக்கியோ, நிலநடுக்கம் காரணமாகவோ இந்தத் தூண் உடைந்து நொறுங்கி விழுந்தாலும் இந்த உலகம் அழியுமா?

ஏற்கனவே, சொன்னதைத்தான் மீண்டும் சொல்கிறோம், உடம்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் மட்டுமல்ல,  மனதுக்கு ஊறு விளைவிப்பவர்களும் தண்டிக்கப்படுதற்குரிய குற்றவாளிகளே.

இம்மாதிரிப் பொய்க் கதைகளை இட்டுக்கட்டுபவர்கள் மீதும், பகிர்பவர்கள் மீதும், பரப்புபவர்கள் மீதும் நாட்டை ஆளுகிறவர்கள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்!

==========================================================================