அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 22 ஜனவரி, 2022

கை மேல் பலன்![பக்திக் கதை]

கொரோனா இரண்டாம் அலையின் தொடக்கத்தில் குமரேசனுக்குக் கொரோனா தொற்றியது. கோவை மருத்துவமனை ஒன்றில் பத்து நாட்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினான்.

நாடெங்கும் தொற்றின் வேகம் குறைந்த நிலையில், அவன் மனைவி அன்புமலர், "நீங்க சீக்கிரம் குணமாகித் திரும்பணும்னு நம் குலதெய்வத்தை நேர்ந்துகிட்டேன். நாளை கோயிலுக்குப் போய், நேர்ந்துகிட்டபடி உண்டியலில் ஆயிரம் ரூபாய் போட்டுட்டு வந்துடலாம். இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னாலும் எனக்காக வரணும்" என்றாள்.

"வர்றேன். அதுக்கு முன்னாடி உங்கிட்டே கொஞ்சம் பேசணும்."

"நேர்த்திக்கடன் விசயமாத்தானே? பேசுங்க." -சிக்கனமாய்க் கொஞ்சம் சிரிப்பை உதிர்த்துவிட்டுக் கணவனின் முகம் பார்த்துக் காத்திருந்தாள் அன்புமலர்.

"நாம் உண்டியலில் காணிக்கை செலுத்தும் விவரம் சாமிக்குப் போய்ச் சேரும்னு நினைக்கிறியா?"

"எல்லாம் நம்பிக்கைதான். எந்த அடிப்படையில் நீ நம்புறேன்னு கேட்டா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது."

"சாமிக்காக உண்டியலில் போடுற ரூபாயை மனுசங்கதான் எண்ணி எடுத்துட்டுப் போய் வங்கியில் போடுறாங்க. சில பணக்காரச் சாமி கோயில்களில், பக்தர்களுக்கு உணவு கொடுக்கிறது, மருத்துவமனை கட்டியோ கல்வி நிறுவனங்களை உருவாக்கியோ மக்களுக்கு உதவி செய்யுறதுன்னு நல்ல காரியங்களும் செய்யுறாங்க. இதைச் செய்யுறவங்க, அவ்வளவு உண்டியல் பணத்தையும் நல்ல வழியில்தான் செலவு பண்ணுறாங்கன்னு எப்படி நம்புறது? தப்பான வழிகளில் செலவு பண்ணுற சுயநலவாதிகளும் இருக்கலாம் இல்லையா?" -கேட்டான் குமரேசன்.

"இருக்கலாம். நல்லதே நடக்கும்கிற நம்பிக்கையில்தான் உண்டியலில் பணம் போடுறோம்" என்றாள் அன்புமலர்.

"இந்த நம்பிக்கைதான் பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்களையும் செய்யத் தூண்டுது. அதிருக்கட்டும். ஏழைபாழைகளுக்குத் தர்மம் பண்ணினா புண்ணியம் கிடைக்கும்கிறதும் இப்படியான ஒரு நம்பிக்கைதான். நீ நம்புறியா?"

"நம்புறேங்க."

"சாமியைக் கும்பிடுறதால கிடைக்கிற புண்ணியம், பார்வையிழப்பு, கைகால் முடக்கம், நிராதரவான நிலை, முதுமை போன்ற காரணங்களால் பிச்சை எடுக்கிறவங்களுக்கு உதவுறதாலயும் கிடைக்கும்னு சொல்லலாமா?"

"தாராளமா."

"நல்லது. நாம் நினக்கிற மாதிரியான பிச்சைக்காரங்களைத் தேடிக் கண்டுபிடிச்சி, இந்த ஆயிரம் ரூபாயைப் பகிர்ந்து கொடுத்தா 'மவராசர் நீங்க நல்லா இருக்கணும்'னோ, 'தீர்க்காயுசா இருங்கோ'ன்னோ, 'உங்க தலைமுறை தழைக்கட்டும்'னோ மனசார வாழ்த்துவாங்க. இம்மாதிரியான வாழ்த்தை நாம் காதாரக் கேட்போம்; வாழ்த்துறவங்களைக் கண்ணாரப் பார்ப்போம்.....

.....இப்படிக் கேட்டும் பார்த்தும் அடையுற சந்தோசம் உண்டியலில் பணம் போடுறதில் கிடைக்காது. நேர்ந்துகொண்டபடி உண்டியலில் பணம் போடலைன்னு சாமி கோபித்துக்கொள்ளாது. அதனால....."

குறுக்கிட்ட அன்புமலர், "நல்ல யோசனை. நாளைக்கே நடத்தி முடிச்சுடுவோம்" என்றாள். அவள் மனப்பூர்வமாகத்தான் இப்படிச் சொன்னாள் என்பதை அவளின் முகத்தில் பரவியிருந்த மலர்ச்சி உறுதிப்படுத்தியது.

==========================================================================