ஒரு சாமிக்கு ரெண்டு மனைவிமார்கள். ரெண்டு பேரும் எப்பவும் அவர்கூடவே இருப்பாங்க.
அப்படி இருந்தும் அவர்களின் முன்னிலையிலேயே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறதில் அதிக நேரம் செலவழிச்சாராம் அவர்.
ரெண்டு பேரும் கடும் கோபத்துக்கு உள்ளானாங்க.
பொதுவா, மனித இனத்தில், பெண்டாட்டிமார்களுக்குக் கோபம் வந்தா என்ன செய்வாங்க?
கணவன்கிட்டே முகம் காட்டிப் பேசமாட்டாங்க. அவர் ரொம்பப் பிரியமா நெருங்கி நெருங்கிப் பேசினாலும், இவங்க பிகு பண்ணிட்டு விலகி விலகிப் போவாங்க. அந்தி சாய்ந்த அப்புறமும் அண்டவிடமாட்டாங்க. இதுக்குப் பேரு 'ஊடல்'னு இலக்கியங்கள் சொல்லுது.
மனுசப் பொம்மணாட்டிகள் மட்டுமில்ல, கல்யாணம் ஆன பெண் கடவுள்களும்கூடப் புருஷக் கடவுள்களோடு ஊடல் கொண்டு விலகி விலகிப் போறதுண்டு.
அந்த வகையில்தான், மேற்கண்ட ரெண்டு பெண் சாமிகளும் கணவனோடு ஊடி, அவரைவிட்டு விலகி விலகி விலகிப் போனாங்களாம்.
கணவன் சாமி, சமாதானம் பண்ணி ரெண்டு பேரையும் தனக்கான இருப்பிடத்துக்கு அழைச்சுட்டுப் போனாராம்.
இந்தச் சுவாரசியமான ஊடல் நிகழ்ச்சி எந்த யுகத்தில் நடந்ததுன்னு கேட்க நினைக்கிறீங்கதானே?
தப்பு. சிந்தனையை நெடு நெடுந் தொலைவுக்கு நீளவிட்டுட்டீங்க.
இது நடந்தது, ரெண்டு நாள் முன்பு நம்ம திருப்பதி ஏழுமலையான் கோயிலில்[நாளிதழ்ச் செய்தி].
பயன்.....
"சாமிகளே ரெண்டு மூனுன்னு கல்யாணம் கட்டிக்குதுக. அற்ப மனுசப் பிறவிகளான நாமும் அப்படிக் கட்டிக்கிறதில் தப்பென்ன?"ன்னு ஒருத்தன் கேட்பான்.
"நான் நாலு கட்டிக்குவேன்"னு இன்னொருத்தன் அடம்பிடிப்பான். வசதியுள்ளவன் எத்தனையும் கட்டிக்கலாம்னு வேறொருத்தன் வாதம் பண்ணுவான்.
நாம் ஆச்சரியப்பட்டுக் கேட்க நினைப்பது.....
ஊடல் கதைகளையெல்லாம் உற்சவம் ஆக்குகிறவர்கள், விரும்பத்தகாத 'ஒரு மாதிரி'யான புராணக் கதைகளுக்கும் உற்சவம் நடத்திப் புத்துயிர் ஊட்டுவார்களோ?
'நந்தனார் கதை'[சைவ சமயக் கதை] போல, பக்தியைப் போதித்து, ஓரளவுக்கேனும் பகுத்தறிவையும் வளர்க்கிற கதைகளே புராணங்களில் இல்லையா?
தேடிக் கண்டறிந்து, உரிய முறையில் வடிவமைத்து விழா எடுக்கலாமே?
இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தால், "நீ நாத்திகன். இது விசயத்தில் தலையிட உனக்கு யோக்கியதை இல்லை" என்று கடுமையாகச் சாடுவதோடு, "இஸ்லாம் மதத்தில் இம்மாதிரிக் கதைகள் இல்லையா? கிறித்தவ மதத்தில் இல்லையா? அவர்களிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் உனக்கு ஏன் இல்லை?" என்று எதிர்க்கணை தொடுப்பார்கள்.
நம் பதில்.....
"நீங்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படுபவர்கள், இப்போதும் இந்துக்களாக இருக்கிற எம்போன்றவர்களின் வாரிசுகளும் சொந்தபந்தங்களும்தான். எனவே, நீங்கள் முதலில் திருந்துங்கள். அவர்கள் தவறு செய்தால் திருத்துவதற்கு அவர்களுக்குள்ளேயே ஆட்கள் தோன்றுவார்கள்" என்பதுதான்.
==========================================================================