அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 20 ஜனவரி, 2022

இவர்கள் 'அண்ட'ப் புளுகர்கள்!!!

ண்டம் என்றால் வானம் அல்லது, ஆகாயம் என்று பொருள்.

'நல்ல நேரம்', கெட்ட நேரம்' போன்றவற்றோடு நம் மக்களின் எதிர்காலம் பற்றியும் ஜோதிடர்கள் துல்லியமாகக் கணித்துச் சொல்கிறார்கள் என்று காலங்காலமாய் நம்பப்படுகிறது.

இந்த ஜோதிடர்கள், அண்டத்தில் உலவும் கோள்களின் நிலைப்பாட்டை வைத்துத்தான் பலன்களைக் கணிப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிற 09 கோள்களில் 'சூரியன்' ஒரு கோள் அல்ல; நட்சத்திரம்தான் என்று அறிவியல் படித்தவர்கள் சுட்டிக்காட்டியதை இவர்கள் அலட்சியம் செய்தார்கள். 

சூரியன் ஒரு நட்சத்திரமோ கிரகமோ, அதையும் கணக்கில் கொண்டுதான் முன்னோர்கள் பலன்களைக் கணித்தார்கள் என்று சமாளித்தார்கள். ஜோதிடப் பித்தர்களும் கண்டுகொள்ளவில்லை.

இவர்களின் பட்டியலில் ராகு, கேது என்னும் பெயர்களில் இரண்டு பாம்புக் கிரகங்களையும் சேர்த்துள்ளார்கள்.

அப்படியான இரண்டு கோள்கள் அண்டத்திலேயே இல்லை என்று அறிந்தவர்கள் சொன்னபோது, அவை நிழல் கிரகங்கள் என்று மழுப்பினார்கள்.

இவர்கள் சொல்வது போல் நிழல் கிரகங்கள் அண்டத்தில் உலவுகின்றனவா என்னும் கேள்விக்கு, அழுத்தம் திருத்தமாக அறிவியலாளர் சொல்லும் பதில்.....

//அமாவாசை தினத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில், ஒரு நேர்க்கோட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் சூரியன் மறைக்கப்படுகிறது. வேறு எந்தவொரு கோளும் அங்கே நிலைபெறவும் இல்லை; இயங்கிக்கொண்டிருக்கவும் இல்லை.

இதே போல, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்தால், பௌர்ணமி தினத்தன்று சந்திரன் மறைக்கப்படும். அவ்வளவுதான்

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும், பாம்பு விழுங்குகிறது, துப்புகிறது[கிரகணம்] என்று கதையளப்பதற்கோ, நிழல் வடிவில் ஏதோ இரண்டு கோள்கள் சுற்றுகின்றன என்று புளுகுவதற்கோ வாய்ப்பே இல்லை//[கலைப்பித்தனின் 'அறிவியல் உண்மைகளும் அரிய செய்திகளும்', மணிவண்ணன் பதிப்பகம், சென்னை].

அறிவியல் ஆதாரங்களுக்கிணங்க, 09 கோள்கள் இருப்பதாகச் சொல்லி, 06 கோள்களை[சூரியன், ராகு, கேது ஆகியவை நீங்கலாக] மட்டும் கணக்கில் கொண்டு பலன்களைக் கணிப்பதாகச் சொல்வது ஏமாற்று வேலை ஆகும்.

படிப்பறிவு உள்ளவர்களாயினும் இல்லாதவர்களாயினும் ஜோதிடப் பொய்யர்களை நம்பிப் பணத்தை இழப்பதோடு, அறிவையும் முடமாக்குபவர்கள் இங்கு நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் திருந்துவது எப்போது?

இவர்களைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எப்போதேனும் மேற்கொள்ளுமா?

எளிதில் விடை காண இயலாத கேள்விகள் இவை.

==========================================================================