புதன், 19 ஜனவரி, 2022

தண்டனைக்குரியவர் 'தலை வெட்டும்' பூசாரி மட்டுமல்ல!!!

#ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வலசப்பள்ளியில் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற சங்கராந்தி விழாவின்போது நேர்த்திக்கடனாக ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆடு ஒன்றை நேர்த்திக்கடனாகச் செலுத்த வந்தார். அவர் தன்னுடைய ஆட்டைத் தலையைக் குனிந்தபடி பிடித்திருந்தபோது, குடிபோதையில் ஆடுகளை வெட்டிவந்த பூசாரி, ஆட்டுக்குப் பதிலாக அதைப் பிடித்திருந்த சுரேஷின் கழுத்தை அரிவாளால் வெட்டினார். இதில் சுரேஷின் கழுத்து வெட்டுண்டது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த சுரேஷை மீட்டு, ஊர்மக்கள், மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்துபோன சுரேஷுக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்# இது, நேற்றைய 'மாலை மலர்'ச் செய்தி.  [https://www.maalaimalar.com/news/topnews/2022/01/18145445/3401996/Drunk-man-slaughters-human-instead-of-goat-during.vpf     ஜனவரி 18, 2022].

                                           *   *   *   *   *

பூசாரி கைது செய்யப்பட்டது சரியே. ஆயினும், ஓர் உள்மன உறுத்தல்.

இந்த நிகழ்வில் பூசாரி மட்டுமே குற்றவாளியா?

"அல்ல" என்பதே என் எண்ணம். இந்தக் குற்றத்தில் நம் முன்னோடிகள் பலருக்கும் பங்குண்டு.

கடவுள் இருப்பதாக முதன் முதலில் கற்பனை செய்து சொன்னவர் முதல் குற்றவாளி.

அவரால் கற்பிக்கப்பட்ட கடவுளை, தொடர் பரப்புரையின் மூலம் மக்களைச் சென்றடையச் செய்தவர்கள் அவரின் வழிவந்த குற்றவாளிகள்.

கடவுளை மறுத்துப் பேசியவர்களிடம் கடுமையாக வாதம் புரிந்து, கடவுள் நம்பிக்கையை அழிந்துவிடாமல் காத்தவர்கள் அடுத்தடுத்து வந்த பரம்பரைக் குற்றவாளிகள்.

காலப்போக்கில், விதம் விதமான கடவுள்களைப் படைத்து, அவர்கள் அத்தனை பேருக்கும் கோயில்கள் கட்டி விழாக்கள் எடுக்குமாறு மக்களைத் தூண்டியவர்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான்.

ஆடு, மாடு, கோழி, பன்றி, எருமை என்று வேறு வேறான, ஏதுமறியா உயிர்களைப் பலி கொடுத்தால் நினைத்தது நிறைவேறும் என்று நம்ப வைத்தவர்கள் கடும் தண்டனைக்குரிய குற்றவாளிகளே.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கொடூரக் கொலைச் செயலுக்கென்றே கோயில் தோறும் பூசாரிகளை நியமனம் செய்தவர்கள்  குரூரமான தண்டனைக்குரிய குற்றவாளிகள்.

தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொலைபாதகச் செயலை ஒருபோதும் தடுக்க முன்வராதவர்களும், பெரும்பான்மையோரால் நம்பப்படுபவர்களுமான [அசைவக்]கடவுள்களும் குற்றம் புரிந்தவர்களே.

ஆடுகளை ஐம்பது, நூறு, இருநூறு என்று சளைக்காமல் வெட்டித் தள்ளுவதால் ஏற்படும் மன உளைச்சலைத் தணிப்பதற்காகத் தண்ணியடித்துப் போதை ஏற்றிக்கொள்ளும் பூசாரிகளை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நியாயம் அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

இனியேனும் இம்மாதிரிக் குற்றச் செயல்கள் நடைபெறாமலிருக்க, மக்கள் ஆழ்ந்து சிந்திக்கப் பழகுதல் மிக மிக மிக அவசியம்.

சிந்திப்பார்களா?

==========================================================================