செவ்வாய், 18 ஜனவரி, 2022

பதின்பருவப் பையன்களும் அப்பாவி அம்மாக்களும்!!

ரிய வயதில் கல்யாணம் ஆகியிருந்தால் பெரிய குடும்பஸ்தன் ஆகியிருப்பான் குழந்தைசாமி. அம்மாவுக்கும் அவனுக்குமான அன்றாடச் செலவுக்கே வருமானம் கட்டுபடி ஆகாத நிலையில் கல்யாண நினைப்பு அவனுக்கு எப்படி வரும்? 

வெறும் பட்டதாரியான அவன், மேற்படிப்பெல்லாம் படித்து, "நல்ல சம்பளத்தில் வேலை தேடிக்கொண்ட பிறகுதான் கல்யாணம்" என்று சபதம் எடுத்திருந்தான்.

சபதம் எடுத்திருந்தானே தவிர, சபலங்களைக் கட்டுப்படுத்தும் வகையறியாத காரணத்தால், வரக்கூடாத 'அந்த' நினைப்பு கண்ட கண்ட நேரத்தில் வந்து அவனைப் பாடாய்ப்படுத்தியது.

'அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுவது எப்படின்னு புத்தகம் எழுதறானுக; யூடியூபில் காணொலி இணைச்சி ஆலோசனை வழங்குறானுக. ஆனா, எவனும் இந்தக் காமப் பிசாசை அண்டவிடாம தடுக்க  உருப்படியா யோசனை சொன்னதில்லை. கசமாலங்கள்' என்று அறிமுகம் இல்லாத ஆட்களையெல்லாம் மனம்போனபடி திட்டித் தீர்த்தான்.

பொதுநூலகத்தில் வேறு எதையோ தேடியபோது காந்தியடிகள் எழுதிய 'பிரமச்சரியம்' என்னும் நூல் கண்ணில் பட்டது. எடுத்துவந்தான்; படித்தான்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் காந்தி சொல்லியிருந்த வழிமுறைகளைக் கையாள்வதென்று உறுதி பூண்டான்.

அதிகாலையிலும், உறங்கச் செல்வதற்கு முன்னரும் தியானம் செய்தான். அதில் அவன் அறிந்துவைத்திருந்த அத்தனைக் கடவுள்களும் வந்துபோனார்கள்.

அடிமனதில் பதுங்கியிருந்த 'அந்த நினைப்பு' தலைதூக்கும்போதெல்லாம், நாடிநரம்புகளில் ஊடுருவியிருந்த 'தினவு' அடங்கும்வரை வேர்க்க விறுவிறுக்க ஓடினான்.

குளுகுளு நீரில் மட்டுமே குளித்தான்.

இவ்வாறு, காந்தி சொல்லியிருந்த வழிமுறைகளைக் கையாள்வதோடு குழந்தைசாமி திருப்தியடையவில்லை.

காந்தியின் உருவத்தைக் கையில் பச்சை குத்தினான். கூடவே, பிரமச்சரியக் கடவுளான ஆஞ்சநேயரின் அருள்பாலிக்கும் கோலத்தையும் பதிவு செய்தான்.

"ஆஞ்சநேயரைப் பச்சை குத்தியிருக்கே. அந்த அநுமார் சாமிதான் உனக்கு நல்ல புத்தியைக் குடுத்திருக்கு" என்று அவனின் கன்னம் வருடி அம்மா தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது, பதில் சொல்லும் வகையறியாது அசடு வழிந்தான் முன்னாள் நாத்திகனான குழந்தைசாமி.

என்ன செய்தும் அந்த உணர்ச்சியை அவனால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவ்வப்போது, அண்டை வீட்டுக் குமரிகள் நைட்டியில் நடமாடும் காட்சி சன்னல் வழியாகக் கண்ணில் பட்டதால், கட்டுக்குள் இருந்த காம உணர்ச்சி கட்டவிழ்த்துக்கொண்டு குத்தாட்டம் போடத் தொடங்கியது.

ஓர் இரவு முழுக்க யோசித்தான் குழந்தைசாமி. 

தூங்கி விழித்ததும் முதல் வேலையாக, எப்போதும் திறந்தே இருக்கும் சன்னல் கதவுகளை இழுத்து மூடி, நிறைய ஆணிகள் அடித்தான்.

என்னதான் சன்னலை இழுத்துச் சாத்தினாலும், கண்ணயர நினைத்துக் கண் மூடும்போதெல்லாம் அந்த அழகு ராணிகள் அவனின் கண் முன்னால் வரிசை கட்டி நின்று கண் சிமிட்டிக் கமுக்கமாய்ச் சிரித்து அவனை உசுப்பேற்றினார்கள்.

உறக்கம் தடைப்படுவதோடு, உடம்பெங்கும் பரவும் சூட்டைத் தணிப்பதற்காக, அர்த்த ராத்திரி என்றுகூடப் பாராமல், குளியலறைக்குச் சென்று நேரம் போவது தெரியாமல் குளிர்ந்த நீரில் குளித்தான் குழந்தைசாமி.

இந்த நடுநிசி நீராடல் தொடரவே, அதுவும் ஆணியடிக்கப்பட்ட சன்னல் கதவுகளும் குழந்தைசாமியின் அம்மாவை வெகுவாக மிரளச் செய்தன.

"என் புள்ளைக்கு யாரோ பில்லிசூனியம் வைச்சுட்டாங்க" என்று அக்கம்பக்கத்தாரிடம் புலம்ப ஆரம்பித்தார்.

யாரோ சொன்ன ஆலோசனையின்பேரில், ஒரு மாந்திரீகனைக் கூட்டிவந்து குழந்தைசாமியின் கையில் மந்திரித்த கறுப்புக் கயிற்றைக் கட்டச் செய்தார்.

பாவம் குழந்தைசாமி, காம இச்சையைக் கட்டுப்படுத்துவதில் சற்றே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் அம்மாவின் தவறான புரிதல் அவனைக் கவலைக்குள்ளாக்கியது.

"அம்மா ரொம்பவே அப்பாவி. எத்தனைப் பொய் சொன்னாலும் நம்பிடும். சமாளிச்சுடலாம்" என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ளவும் செய்தான்!

==========================================================================