ஓய்வு பெறுவதற்கு முன்பு, அன்றாட அலுவலகப் பணியும், குறையாத குடும்பக் கவலைகளும் அதன் தாக்குதலை வெகுவாகக் குறைத்திருந்தன.
பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி, குடும்பிகளாகவும் ஆகி, அவரவர் சுமையை அவரவரே தாங்கி வாழ ஆரம்பித்தபோது இவரும் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அன்றிலிருந்து, எப்போதாவது வந்துபோய்க்கொண்டிருந்த 'மரணபயம்' அடிக்கடி அவரின் அனுமதி இல்லாமலே மூளையின் ஒரு மூலைக்குள் பதுங்கிக்கொண்டு பயமுறுத்தத் தொடங்கியது.
சதாசிவம் அடிக்கடி கோயிலுக்குப் போக ஆரம்பித்தார்; மரணபயத்தைப் போக்குமாறு மனம் உருக இறைவனைப் பிரார்த்தித்தார்.
காலை மாலை என்றில்லாமல் இரவில் உறக்கம் வராமல் தவித்தபோதெல்லாம் தியானத்தில் மூழ்கினார்.
நண்பர்களைச் சந்தித்தார்; நூலகம் செல்வதை வழக்கமாக்கினார்.
பேரப் பிள்ளைகள் பள்ளிகளுக்கும், மகனும் மருமகளும் அலுவலகங்களுக்கும் சென்ற பிறகு நெடுநேரம் தொ.கா. பார்த்தார்.
என்ன செய்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
ஓய்வாகச் சாய்வு நாற்காலியில் சரிந்து கிடந்தபோதும், இரவில் உறங்க நினைத்துப் படுக்கையில் கண்மூடும்போதும், வழக்கத்தைவிடவும் ஆக்ரோசமாகச் சதாசிவத்தின் நினைவகத்தைத் தாக்கி உறங்க விடாமல் இடையூறு செய்தது மரணபயம்.
'அந்திமக் காலத்தில் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமே இல்லை; அதன் தாக்கத்தைக் குறைப்பதும்கூட அத்தனை எளிதல்ல. சாகும்வரை பயந்து பயந்தே வாழ்ந்து தொலைப்போம்' என்று முடிவெடுத்திருந்த அவர், வழக்கம்போல அன்று உறங்கச் சென்றார்.
கண்மூடி, தியானத்தில் ஆழ்ந்துவிட முயன்றபோது, அவருடைய மருமகள் அவளின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. பேச்சின் நடு நடுவே 'கிழம்' என்னும் வார்த்தை வதைபடுவதைக் கேட்டறிந்து, தன் அறைக் கதவின் சாவித் துவாரத்தில் காதைப் பதித்தார்.
"விடிகாலையில் எழுந்திரிச்சி, சமையலை முடிச்ச கையோடு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி, அவருக்கும் மதிய உணவு கொடுத்து அனுப்பிட்டு, இந்தக் கிழத்துக்குச் சாப்பாடு பரிமாறித் தின்னு முடிக்கிறவரை காத்திருந்து, குளிச்சி உடையுடுத்துட்டுச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஆபீசுக்குக் கிளம்புறேன்.....
கிழத்துக்குப் பளிச்சின்னு விடிஞ்சதும் ஸ்ட்ராங்கா காப்பி போட்டுக் கொடுத்துடணும். இது அவுத்துப்போடுற அழுக்குத் துணிகளையும் துவைச்சிக் காயப்போட்டு மடிச்சி வைக்கணும். எல்லாம் உன் மருமகன் போட்ட உத்தரவு. இந்தக் கிழவன் சுடுகாடு போனாத்தான் எனக்கும் கொஞ்சம் விடிவு பிறக்கும்....."
மருமகள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
சதாசிவம் படுக்கையில் சாய்ந்தார்; தியானத்தைத் தொடரவில்லை. அதன் தேவையை அவர் அறவே மறந்திருந்தார்.
மருமகளின் பேச்சு விடியற்காலைவரை அவருடைய செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது; சற்றே உறங்கி எழுந்த பிறகும் செவிப்புலனைத் தாக்கி அதிரவைத்துக் கொண்டிருந்தது.
பேரப் பிள்ளைகள் பள்ளிகளுக்கும், மகனும் மருமகளும் அலுவலகங்களுக்கும் புறப்பட்டுப் போகும்வரை காத்திருந்தார் சதாசிவம். சம்பந்திக்காரியும் விடைபெற்றுக் கிளம்பிப்போனது அவருக்குத் திருப்தியளித்தது.
வீட்டின் கதவைத் தாளிட்டுவிட்டு, கயிறு தேடியெடுத்து, மின்விசிறியில் சுருக்கு வைத்துத் தொங்கினார்.
நீண்ட நாட்களாக அவரை மிரட்டி நிம்மதி இழந்து தவிக்கச் செய்த 'மரணபயம்' போன இடம் தெரியவில்லை!
==========================================================================