ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

விகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது?!

’சாய்பாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயங்களை உங்கள் புகைப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்’ என்று பல வாரங்களுக்கு முன்பே தன் வாசகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது ஆனந்த விகடன்.

வாசகர்கள் எழுதியனுப்ப, அவற்றை வாரந்தோறும் வெளியிட்டது; வெளியிடுகிறது.

‘வெறும் பச்சை மண் குடத்தில் நீர் எடுத்துச் செடிகளுக்கு நீர் வார்த்தார் பாபா’ என்று ஒரு வாசகர் கதை விட்டிருந்தார்[இது குறித்து நான் ஒரு பதிவு எழுதியுள்ளேன் https://kadavulinkadavul.blogspot.com/2019/11/blog-post_12.html ].

பின்னர் நான் வாசித்த [அதிசய] நிகழ்வுகள் எல்லாம் கற்பனைக் கதைகளாகவே இருந்தன.

சினிமாப் பித்துப் பிடித்து அலைந்த ஒரு மாணவர், 05 அரியர்ஸ் பேப்பர் எழுதித் தேர்ச்சி பெற வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் சாய்பாபாவைச் சரண் அடைந்தாராம்; இரவில் விழுந்து விழுந்து படித்தாராம். வினாத்தாளில் இவர் படித்த கேள்விகளே கேட்கப்பட்டிருந்தனவாம். இது.....

பாபாவின் அருளால் இது நடந்தது[இப்படிக் கதைகள் எழுதி எழுதியே, மனிதராகப் பிறந்து, மனிதராக வாழ்ந்து மனிதராகவே செத்தொழிந்த பலரைக் கடவுளின் அவதாரம் ஆக்கியிருக்கிறார்கள் நம்மவர்கள்] என்று புளகாங்கிதப்படுகிறார் கதிரேசன் என்னும் அந்த மாணவர். 

இப்படிப் பொய்யுரைக்காமல், விடிய விடிய விழுந்து விழுந்து படித்தேன். எனக்கான ஒரு நல்ல வாய்ப்பாக நான் படித்த[எதிர்பார்த்த] கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன என்று சொல்லியிருந்தால் அது ஏற்கத்தக்கது. இது விகடனுக்குப் புரியாமல் போனது ஏன்?! 

அடுக்குமாடி வீட்டுக்காக ஒருவர் ஒப்பந்தம் போட்டாராம். ஒப்பந்ததாரர் ஒப்பந்தப்படி நடந்துகொள்ளவில்லையாம். இவர் சாயிபாபாவைச் சரணடைந்தாராம். அவருடைய கருணையால் பழைய ஒப்பந்ததாரருக்குப் பதிலாக வேறொருவர் பொறுப்பேற்கவே இவரின் பிரச்சினை தீர்ந்ததாம்.

காலந்தோறும், நம் மக்கள் கணக்கு வழக்கில்லாமல் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறார் பாபா? 

அறியாமையின் காரணமாக, தற்செயலாக நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளை, பாபா நிகழ்த்திய அதிசயங்களாக நினைக்கும் எவரோ சிலர் சொல்வதை விகடன் நம்புகிறதே, அது எப்படி?

‘என் அத்தை மகளை ரத்தப் புற்று நோய் தாக்கியது. என் அத்தை யார் சொல்லியும் மருத்துவமனையில் சேர்க்காமல், மகளுடன் சீரடி சென்று சாய்பாபாவை வழிபட்டார். நோய் குணமானது.’

‘கடந்த மாதம் எனக்குச்
சிக்குன்குனியா காய்ச்சல் கண்டது. என் வீட்டில் வைத்திருக்கிற சாய்பாபா படத்தின் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஒரு நாள் முழுக்கக் கண்ணீர் விட்டு அழுதேன். காய்ச்சல் போன இடம் தெரியவில்லை.’

‘யாரெல்லாம் பாபாவை வேண்டிக்கொண்டார்களோ தெரியவில்லை, பிறவிக் குருடான எங்கள் ஊர்ச் சிறுமிக்குப் பார்வை திரும்பியது.’

இவ்வாறான கற்பனைச் சம்பவங்களுக்குக் கட்டுரை வடிவம் தந்து விகடனுக்கு அனுப்பினால் அது வெளியிடுமா?

நான் விகடனின் நீண்ட நெடுங்கால வாசகன். இம்மாதிரி, தன் வாசகனை மூடனாக்கும் நிகழ்வுகளையோ படைப்புகளையோ அது ஒருபோதும் வெளியிட்டதில்லை.

இப்போது மட்டும் இந்த விகடனுக்கு என்ன நேர்ந்தது?

விற்பனை குறைந்ததால், இங்கு பெரும்பான்மையோராக உள்ள பக்திமான்களைக் கவர்ந்து சரிவை ஈடுகட்ட நினைக்கிறதா?

மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணித்துத் தம் மதம் வளர்த்திட[மற்ற மதங்களுக்குப் போட்டியாக] நினைக்கும் மத வெறியருக்குத் துணைபோகிறதா?

இவையும் இவை போன்ற பிறவும்தான் விகடனின் ‘உள்நோக்கம்’ எனின் சாய்பாபா என்னும் மனிதரின் புகழ் பாடுவதை அது தொடரட்டும். நாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்போம்.

=======================================================================