கண்களை மூடிக்கொண்டு, ஏதேனும் ஒரு கடவுள் பெயரையோ, மந்திரங்கள் என்னும் பெயரால் சிலர் சொல்லிவிட்டுப்போன சுலோகங்களையோ திரும்பத் திரும்ப, நிமிடக் கணக்கிலோ மணிக் கணக்கிலோ முணுமுணுப்பது தியானமா?[மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ‘யோகா’ என்பது வேறு]
எனக்கு இதைக் கொடு; அதைக் கொடு என்று தான் வழிபடும் சாமியிடம் புலன்களை வருத்திப் புலம்புவது தியானமா?
தியானம் குறித்தும் அதனால் விளையும் பயன்கள் குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கிச் சொன்னவர் எவருமில்லை.
முக்தி, சொர்க்கம் என்றெல்லாம ஆன்மிக வாதிகள் காலம் காலமாகச் சொல்லிவருகிறார்களே தவிர, அவற்றிற்கு முறையான விளக்கங்கள் தந்தவர் எவருமிலர். அது போலத்தான் இதுவும். வார்த்தைகளின் பொருள் புரியாமலே மக்கள் முணுமுணுக்கவும் புலம்பவும் பழகிக் கொண்டார்கள்.
மேலே குறிப்பிட்டது போல, முணுமுணுப்பதும் புலம்புவதும்தான் தியானம் என்றால், இந்தத் தியானத்தைத் தன்னிச்சையாய்த் தாம் இருக்கும் இடத்திலேயே ஒருவர் செய்துகொள்ளலாம். சத்குரு ஜக்கி வாசுதேவ்களும் ரஜனீஷ்[“உடலுறவின்போது பெறும் இன்பத்தின் கால அளவைத் தியானத்தின் மூலம் நீட்டிக்க முடியும்”] என்னும் செக்ஸ் சாமியார்களும் தேவையில்லை. இவர்கள் சொல்லும் தியானத்திற்குப் பதிலாக.....
‘வீண் கவலைகளுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன்.’
‘இயன்றவரை பிறருக்கு உதவிகரமாக இருப்பேன்.’
‘தோல்விகளால் மனம் தளர மாட்டேன்; கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன்; சாதிப்பேன்.’
‘மூடநம்பிக்கைகளை அடியோடு விட்டொழிப்பேன்.’
என்றிவை போன்ற நல்லெண்ணங்களை அசைபோட்டு உள் மனதில் பதிய வைக்கும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமான இன்றியமையாத் தேவை இப்பயிற்சிதான்; தியானம் அல்ல.