செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

'அது’ விசயத்தில் பலவீனமானவர்களுக்கு.....

‘தோசம்’ இல்லாத ஜாதகம் இல்லை[பெரும்பாலும்] என்பார்கள் சோதிடர்கள். அவர்களின் கணிப்பின்படி நம்மைப் பாதிக்கும் தோசங்கள் மிகப் பலவாக உள்ளன.
ராகு-கேது தோசம், சர்ப்ப தோசம், செவ்வாய் தோசம், சனி தோசம், பித்ரு தோசம் என்று வெகுவாக நீளுகிறது இந்தத் தோசங்களின் பட்டியல்.

நமக்கான தோசத்தைக் கணித்துச் சொல்வதோடு அதற்கான பரிகாரத்தையும் சொல்லி நம்மை ஆற்றுப்படுத்துகிறார்கள் சோதிடர்கள்.

தோசங்களால் விளையும் தீங்குகள் மிகப் பல.

எடுத்துக்காட்டாகச் சில:

சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்களாம்[இதுக்கு ஜோதிடம் பார்க்கணுமா என்ன!]. ரகசிய உறவுகளுக்கும் கள்ளக்காதல்களுக்கும் இவர்கள் சித்தமாகிவிடுவார்களாம். இவர்கள் நிலை இருபுறம் எரியூட்டப்பட்ட மெழுகு வர்த்தி போன்றது. சீக்கிரமே அதில் ஆர்வமிழந்து இழந்த சக்தியை மீட்க வைத்தியர்கள் பின்னால் திரிய வேண்டி வரும்.

இதற்கு என்ன பரிகாரம்? ராகு, கேதுக்களை வழிபட்டால் போதுமாம்[அப்பாடா, கவலை தீர்ந்தது].

சந்திரனும் சுக்கிரனும் சேர்க்கை[?!] கொள்வதான ஜாதகப்பலன் கொண்ட பெண்கள் ரொம்பவே பாவப்பட்டவர்கள். ஏனென்றால், இவர்களை மிக எளிதாக வசியம் செய்துவிட முடியுமாம். வளைத்துப்போட முயலும் ஆடவர்களிடமிருந்து அவர்களால் தப்ப முடியுமா?

முடியும். நெற்றியில் குங்குமம்[நாள் தவறாமல் குங்குமம் வைத்துக்கொள்ளும் பெண்கள் புத்திசாலிகளோ!] வைத்துக்கொண்டால் போதும் என்கிறார்கள் சோதிடக்கலை வல்லுநர்கள். சிவப்பு நிறம் அதிக அலைநீளம்[?] கொண்டதாம்.

உங்களுக்கு ராகு-கேது தோசம் இருந்தா, ஒரு நடை திருப்பாம்புரம்[கும்பகோணம் பக்கம்] போகும்படி பரிந்துரைக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.

‘பிதுர் தோசம்’[பித்ரு தோசம்னும் சொல்வாங்க] பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? வயதான பெற்றோர்களை உபசரிக்கத் தவறினால் வரும் தோசம் இது. இதற்கும் பரிகாரம் உண்டு. மகாளய பட்சத்தின்[அமாவாசை] 15 நாட்களில், பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்தத் தர்ப்பணத்தைப் பித்ருக்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தோசம் நீங்கும் என்கிறதாம் சாஸ்திரம்.

தோசம் மிகக் கடுமையாக இருந்தால் இராமேசுவரம் சென்று ‘திலா ஹோமம்’[?] செய்ய வேண்டும். இந்த ஹோமத்தை வேதம் கற்ற பண்டிதர்களால்தான் செய்ய முடியும் என்கிறார்கள்.

சனி தோசம் ரொம்பவே பொல்லாதது என்கிறார்கள் ஜோதிடக்கலை ஏந்தல்கள். பரிகாரம் தேட மிகவும் சிரமப்பட வேண்டும். கீழே ஒரு பட்டியல[எந்தவித ஆதாரமும் இல்லாதது] காத்திருக்கிறது.

சனி தோசம் நீங்க.....

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2.சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

3.கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்குத் தொடர்ந்து அர்ச்சனை செய்யவும்.

4.வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

5.சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது[மற்ற நாட்களில் எவ்வளவும் வெட்டலாம்].

6.சனிக்கிழமைதோறும் நல்லெண்ணைக் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7.ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. கோமாதா பூஜை செய்யணும்

பட்டியல் நீளுகிறது.

பிரமஹத்தி தோசம் தெரியும்தானே?

பிராமணனைக் கொன்றால் வருவது. அதென்ன பிரமஹத்தி?

திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப்புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து  முழங்கால் மேல்  முகத்தை வைத்துக் கொண்டு, காத்திருப்பது தான் பிரம்மஹெத்தி.

இந்தத் தோசம் நீங்க.....

பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை  செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல்,மகாலிங்க சுவாமி சன்னதி சென்று,நெய் தீபம் ஏற்றிக் குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாபிடக் கூடாது. காற்று,உப்பு,நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் எல்லாம் பிரம்மஹெத்தியிடம் போய்ச் சேர்கின்றனவாம்.

நீங்கள் சோதிடத்தை நம்பாதவர் எனின், மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் உங்களை வெகுவாகச் சினம் கொள்ளச் செய்திருக்கும்.

31.08.2017 நாளிட்ட ‘தி இந்து’ நாளிதழின் இணைப்பாக, 12 ராசிகளுக்கான பலன்களும் தோசங்களும் பரிகாரங்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பலன்களையும் தோசங்களையும் ஒதுக்கி, பரிகாரங்களை மட்டும் கீழே தந்திருக்கிறேன். அவற்றை வாசித்தால் உங்களின் சினம் சற்றே தணியும் என்பது என் நம்பிக்கை.

12 ராசிகளுக்கான பரிகாரங்கள்:
மேசம்: வேர்க்கடலை தானம் [மக்களுக்குச் செய்தல்].
ரிசபம்: பச்சரிசி தானம்.
மிதுனம்: ரோஸ் நிறத் துணிகள்.
கடகம்: துவரம் பருப்பு.
சிம்மம்: கோதுமை.
கன்னி: கண் தானம்.
துலாம்: ஊனமுற்றோருக்கு உதவி.
விருச்சிகம்: திருநங்கைகளுக்கு உதவி.
தனுசு: புற்றுநோயாளிகளுக்கு உதவி.
மகரம்: ரத்ததானம்.
கும்பம்: ஆதரவற்ற முதியோருக்கு உதவி.
மீனம்: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி.

இல்லாத தோசங்களைப் பட்டியலிட்டு, தொலைதூரக் கோயில்களுக்குச் சென்று, கற்பனையான சனி முதலான சாமிகளுக்கு நெய் விளக்கு ஏற்று, நல்லெண்ணெய் விளக்கேற்று, தர்ப்பணம் பண்ணு, ஹோமம் நடத்து, வடைமாலை சாத்து என்றிப்படிப் பொழுதையும் பணத்தையும் வீணடிக்கத் தூண்டும் சோதிடர்களுக்கிடையே.....

கண் தானம் செய், உணவுப் பொருள்களைத் தானம் செய், ஊனமுற்றோருக்கு உதவு, ரத்ததானம் செய் என்றெல்லாம் மக்களுக்கு நல்லன செய்யத் தூண்டுகிற ஒரு சோதிடரைக் கொஞ்சமே கொஞ்சமேனும் பாராட்டலாம்தானே?
======================================================================
சோதிடக் கருத்துகளுக்கான ஆதாரங்கள் உள்ளன; தரப்படவில்லை. இப்பதிவு 06.09.2016இல் எழுதியது.