வியாழன், 16 ஜூன், 2022

இத்தனைப் பலவீனர்களா இன்றைய 'மெத்தப் படித்த' பெண்கள்?!?!?!

இவன் பெயர் விக்ரம் வேதகிரி.

தினகரன்[16.06.2022] நாளிதழ் இவனை 'இணையதள ஆபாசத் தொடர் கதாநாயகன்' என்கிறது.

'இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் ஆவர்' என்றும் சொல்கிறது இந்த நாளிதழ். ஆனால், அது மிகப் பலவாக இருந்திடவும் வாய்ப்புள்ளது.

இவன் குறி வைப்பது, சமூக வலைத்தளங்களில் தங்களை அடையாளப்படுத்தும் இளம் பெண்களையும், கணவர்களால் கைவிடப்பட்டவர்களையும், மணவிலக்குப் பெற்றவர்களையும்தான். 

முகநூல் வழியாகத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நண்பனாகப் பழகுவான். அவர்களின் மனப்போக்கை எடைபோட்டு, இணையக் காணொலி உரையாடல்[Video Chat] மூலம் காதலிப்பதாகச் சொல்லிப் பின்னர் அடுத்த கட்டத்துக்கு நகர்வானாம்.

இவன் 'லவ்' சொல்ல, அதை ஏற்றுக்கொள்கிற பெண்களிடம்தான் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பேசிப் பேசித் தனிமையில் சந்திப்பதும், சுற்றுலாச் செல்வதும், விடுதிகளில் அறையெடுத்துத் தங்கி உடலுறவு கொள்வதும், அதை, மறைத்து வைத்த கருவி மூலம் படம் எடுத்துப் பணம் பறிப்பதுமான செயல்களில் ஈடுபடுகிறான்.

இங்கே நாம் முன்வைக்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான். அது.....

இவனால், அல்லது இவனைப் போன்றவர்களால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு, முகநூல், டிவிட்டர் போன்ற சமுக வலைத்தளங்களில், உண்மை முகவரிகளைத் தருபவர்களோ, உண்மை பேசுபவர்களோ மிக மிக மிக அரிது என்பது தெரியும்தானே?[அரிதாகச் சிறு வயதுப் பெண்கள் இருக்கலாம்].

இதனைப் பயன்படுத்துவதால் விளையும் சாதக பாதகங்களை இவர்கள் அறிந்திருப்பார்கள்தானே?

அடுத்தடுத்த வீடுகளிலும், அண்டை அயல் தெருக்களிலும் வசிப்பவர்களையே முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத இன்றையச் சூழலில், சமூக ஊடகங்கள் மூலமாக முற்றிலும் முகமறியாத ஆண்களை நம்பி இவர்கள் மனம் திறந்து உண்மை பேசுவதும், அவர்களை நம்புவதோடு  தனிமையில் சந்திப்பதும் ஏன்?

இம்மாதிரியான, பாலுணர்வு வேட்கையைத் தணித்துக்கொள்ள அலையும் ஆண்களின் தொடர்பை மனப்பூர்வமாக இவர்கள் விரும்புகிறார்கள் என்பதே காரணம்.

பணத்தை இழப்பது, தங்களின் கூடா ஒழுக்கம் பற்றியக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாவது போன்ற  அதிர்ச்சி தரும் சூழலில் அகப்படும்போதுதான் தாங்கள் செய்த தவற்றை உணர்கிறார்கள் இந்தப் பெண்கள்.

பெற்றோர்களிடம்கூட, செய்த தவற்றைப் பகிர இயலாத நிலையில் பலர் அடங்கிக் கிடக்க, சிலர் மட்டுமே துணிந்து காவல்நிலையங்களில் புகார் அளிக்கிறார்கள்.

அந்தச் சிலரில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த் அனிதா[உண்மைப் பெயரல்ல] என்பவர். இவர் அளித்த புகாரின் பேரில்தான் காவல்துறை இவனை[மேலே உள்ள படம்]க் கைது செய்து விசாரித்துக் கொஞ்சம் தகவல்களை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறது[அறியப்படாத பல தகவல்கள் இருக்கக்கூடும்].

இதற்கு முன்பும் இவனைப் போன்றவர்கள் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்கள்.

சிக்காத கேடிகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?

அது மிகப் பலவாக இருக்கலாம்.

அவர்கள் மிகப் பலர் என்றால், அவர்களின் தொடர்பை எதிர்பார்த்து வலிந்து அவர்கள் விரிக்கும் வலையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக மிக மிகப் பலவாக இருக்கவே வாய்ப்புள்ளது.

இந்நிலை பெரிதும் கவலை அளிப்பதாக உள்ளது.

பெண்கள் தவறு செய்வதற்குப் பெண்களைப் பெற்ற பெற்றோர்களும் காரணம் ஆவார்கள்.

செல்லம் கொடுத்து வளர்க்கிற அதே வேளையில், சமூக வலைத்தளப் பயன்பாட்டில் விளையும் பெரும் பெரும் கெடுதிகள் பற்றியும் சொல்லிக்கொடுத்து விழிப்புணர்வு ஊட்டாதது இவர்கள் செய்யும் குற்றம் ஆகும்.

கல்வி கற்கும் இடங்களிலும் வேலை பார்க்கும் சூழல்களிலும், இயன்றவரை நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து பழகும் முறைகளையும் அவர்களுக்குக் கற்றுத் தருதல் மிக மிக மிக மிக மிக அவசியம்!

======================================================================================