இருவர் வீட்டிலும் எதிர்ப்பு; கண்டிப்பு; கொலை மிரட்டல்!
“விஷம் குடித்துச் செத்துப் போகலாம்” என்றாள் அவள்.
“என்னுடைய முடிவும் அதுதான்” என்றான் அவன்.
நகரின் ஒதுக்குப்புறமான ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்கள்.
“அடுத்த பிறவியிலாவது எங்களை இணைத்து வைத்திடு ஆண்டவனே” என்று இருவரும் கண்ணீர் சிந்தித் தேம்பி அழுதார்கள்.
சாவதற்கு முன் அவன் அவளை ஆசைதீரப் பார்த்தான்; அவளும் பார்த்தாள்.
ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கிக்கொண்டே இருந்தார்கள்.
இருவர் கண்களிலும் வற்றாத அருவியாய்க் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
அவள் கண்ணீரை இவனும் இவன் கண்ணீரை அவளும் துடைத்தபோது இருவருக்குமே மேனி சிலிர்த்தது; தணியாத தாபத்துடன் இறுக அணைத்துக் கொண்டார்கள்.
வெறி கொண்டு அழுத்தமான முத்தங்களைப் பரிமாறினார்கள்.
உருண்டார்கள்; புரண்டார்கள்; பின்னிப் பிணைந்தார்கள்.
ஈருடல் ஓருடல் ஆயிற்று. திட்டமிடல் இன்றியே ‘புணர்தல்' செய்து உச்ச சுகம் தேடினார்கள். மெய்மறந்து துய்த்தார்கள்.
'எல்லாமே’ ஒரு சில நிமிடங்கள்தான். இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.
விலகிய நிலையில் படுக்கையில் அமர்ந்தார்கள். இருவர் பார்வையும் எதிரெதிர்த் திசையில்.
“இந்தச் சொற்ப நேர அற்ப சுகத்துக்காகவா பெத்து வளர்த்தவங்களை வெறுத்தாய்? சொந்தபந்தங்களைப் பகைத்தாய்? காதல் காதல்னு பித்துப் பிடித்து அலைந்தாய்?” என்று அவன் மனசாட்சி கேள்விக் கணைகள் தொடுத்து அவனை வாட்டி வதைத்தது.
அவள் பக்கம் திரும்பிக் குனிந்த தலையுடன், “என்னை மன்னிச்சுடு” என்றான்.
“ஏன்? எதற்கு?” என்றெல்லாம் அவள் கேள்வி எழுப்பவில்லை.
அவளுக்குத் தெரிந்திருந்தது, ‘அந்தச் சில நிமிடங்கள்’ கழிந்ததும், அவன் தன் மீது கொண்டிருந்த காதல் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று.
“போகலாம்” என்று எழுந்து நடந்தான் அவன். இடைவெளிவிட்டு அவள் அவனைப் பின்தொடர்ந்தாள்.
விடுதியைவிட்டு வெளியேறியதும், அவன் ஒரு திசையில் நடந்தான். அவள் அதற்கு நேர் எதிர்த் திசையில் நடக்கலானாள்.
அவர்கள் வாங்கிவந்திருந்த 'விஷப்புட்டி' திறக்கப்படாமலே, அவர்கள் தங்கியிருந்த அறையின் ஒரு மூலையில் சீந்துவாரற்றுக் கிடந்தது!
==========================================================================*****2015 வெளியீட்டின் திருத்திய பதிப்பு.