இதுதான் காந்தியடிகளின் ஜாதகம்.
அடிகள் உயிர்வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த, ஜோதிடக்கலை வித்தகர் திருத்தணி வி.கே.கிருஷ்ணமாச்சாரி என்பவர், 'பாரததேவி' என்னும் ஜோதிட இதழில்[15.08.1947] எழுதியது:
'காந்தியடிகள் பிறந்தது சிம்ஹ[சிம்மம்] லக்கினம்; மக நட்சத்திரம். மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு[ஜனித்தல்-பிறத்தல்] தீர்க்காயுசு யோகம் உண்டு.
மேலும், ஜன்ம லக்னம் சிம்ஹமாகவும், அதில் சந்திரன் தனித்து இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியான குருபகவான் தசம கேந்திரத்தில் நின்று, லக்னாதிபதியான சூரியனையும் ஆயுஷ்காரகனான சனியையும் பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற கணக்கான 120 வருஷம் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு[காந்தியே ஒருமுறை "நான் 120 ஆண்டுகள் வாழ்வேன்" என்று சொல்லியிருக்கிறார். அதை வைத்து அடித்துவிட்டிருக்கிறார் ஜோதிடர்].
முன்காலத்தில், தபஸ்ரேஷ்டர்களான ரிஷீஸ்வரர்கள் தமது தபோ வலிமையாலும், யோகாசன அனுஷ்டான ஆகார நியமங்களினாலும் தமது ஆயுளைப் பெருக்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஜீவித்திருந்ததாக[???] நமது புராணங்கள் சொல்லுகின்றன.
அவர்களின் வழியில், மகாத்மாவும் தன் ஆயுளை விருத்தி செய்துகொண்டுள்ளதால் அவர் 120 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பார் என்பது எனது திடமான அபிப்ராயம்.'
மேற்கண்டது ஜோதிடரின் கணிப்பு. நடந்தது என்ன?
02.10.1869இல் பிறந்த காந்தியடிகள் 30.01.1948இல் மதவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்படியொரு கோர மரணம் மகாத்மாவுக்கு நேரும் என்பதை இந்த ஜோதிடரால் கணிக்க முடியாமல்போனது ஏன்?[இவர் கணித்தது 120 ஆண்டுகள்; காந்தி வாழ்ந்தது எழுபத்தெட்டரை ஆண்டுகள் மட்டுமே].
"காலதேவனின் கணக்கு வேறாக இருக்கையில், அற்ப ஜோதிடனின் கணிப்பு பலிக்குமா என்ன?" என்று கூறிச் சமாளித்திருப்பாரோ கிருஷ்ணமாச்சாரியார்?!
==========================================================================
ஆதார நூல்:
'காந்தியாருடன் நாத்திகப் பெரியார் 'கோரா' சந்திப்பு'; குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர். டிசம்பர் 1989.