வெள்ளி, 14 ஜனவரி, 2022

வாருங்கள், அந்த அறிவுஜீவி அழகியைத் தேடுவோம்!!!

டாக்டர் 'ராபர்ட் கிரகாம்' என்பவர் 1980ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவிலுள்ள 'கலிபோர்னியா'வில் 'உயிரணு வங்கி'யை உருவாக்கினார் என்பது உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பழைய செய்தி.

உயிரணுக்கள் கெட்டுப்போகாமலும் அழிந்துவிடாமலும் இருக்க அவர் திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தினாராம்.

அந்த உயிரணு வங்கியில் பல்துறை அறிஞர்களின் உயிரணுக்களைச் சேமிப்பதன்[தானம் அளிப்பவர் இறந்து 100 ஆண்டுகள் ஆனாலும் உயிரணு கெடாமலிருக்கும்] மூலம், அறிவுக்கூர்மை உள்ள குழந்தைகளை எதிர்காலத்தில் உருவாக்கிட முடியும் என்பது அவரின் நம்பிக்கை.

உயிரணு வங்கி உருவாக்கப்பட்ட செய்தியறிந்து, நோபல் பரிசு பெற்றவர்களும், உலகப் புகழ் பெற்ற அறிஞர்களும் தங்களின் உயிரணுக்களை அனுப்பியுதவினார்கள். 

அவை சேமித்து வைக்கப்பட்டன.

டாக்டர் ராபர்ட் கிரகாம், ஒரு சோதனை முயற்சியாக, அறிவுக்கூர்மை வாய்ந்த ஒரு பெண்ணை, நோபல் பரிசு பெற்ற ஒருவரின் உயிரணுக்கள் மூலம் கருத்தரிக்கச் செய்தார்.

அந்தப் பெண்ணுக்கு, 1983 ஏப்ரல் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அது, 4 கிலோகிராம் எடையுடனும், நல்ல உடல்நலத்துடன் இருந்ததாம்.

6 வயதான அந்தக் குட்டிப் பெண் பேரறிவும் பேரழகும் வாய்க்கப்பெற்றவளாக இருக்கிறாள் என்பது 1990 ஆம் ஆண்டுச் செய்தி.

இப்போது அவளுக்கு 37 வயது[நடுத்தர வயதில்தான் பெண்களின் அறிவாற்றலும் கவர்ச்சியும் உச்சத்தைத் தொடுகிறதாம்!].

அறிவும் அழகும் பன்மடங்கு வளர்ச்சி பெற்று ஆகச் சிறந்த அறிவுஜீவியாக அவள் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும் என்றெண்ணியதால், அவளை ஒரு முறையேனும் பார்த்து மகிழ்ந்திட வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது அடியேனுக்கு.

இணையத்தில் அவளைத் தேடினேன்; பல முறை தேடினேன். ஏமாற்றமே மிஞ்சியது.

நீங்களும் தேடுங்கள். அவளின் புகைப்படத்தைப் பார்க்கவோ, இருப்பிடத்தை அறியவோ இயலுமாயின் தவறாமல் ஒரு பதிவு எழுதிப் பகிருங்கள்; பதிவர்களின் பாராட்டைப் பெற்றிடுங்கள்!
==========================================================================
நன்றி: 
'மணிமேகலைப் பிரசுரம்['விஞ்ஞான விந்தைகள்'], தியாகராய நகர், சென்னை.