“90 சதவீதம் தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது; தமிழும் அரைகுறை; இந்தி பூஜ்யம். விமானம் ஏறக்கூடத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசா நிதிகூட இவர்களால் பெற்று வர முடியாது.”['பாலிமர்’ செய்தி, பிற்பகல் 02.45.]
இன்னும் ஏதேதோ உளறியிருக்கிறார் இந்த மும்மொழி அறிஞர்.
ஓர் அரசியல்வாதிக்குரிய முக்கியத் தகுதி மக்களின் மனங்களைப் படிப்பதும், அவர்களின் குறையறிந்து செயல்படுவதும்தான்.
அவர்களுக்குத் தாய்மொழியான தமிழ் தெரியும், தமிழ் மக்களுடன் கலந்துரையாடுவதற்குத் தேவையான அளவுக்கு.
அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிடத்தக்க அதிகாரங்களைப் பெற்றவர்கள். தேவை ஏற்படும்போதெல்லாம் ஆங்கிலம் அறிந்த உதவியாளர்களைப் பயன்படுத்துவார்கள்[உலகம் சுற்றும் வாலிபரான நம் பிரதமர் ‘மோடி’ அவர்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?]; செல்லும் இடங்களுக்கெல்லாம் அவர்களை உடன் அழைத்துச் செல்வார்கள்.
“ஆங்கிலம் தெரியாது, தமிழ் அரைகுறை” என்று சொன்னது ஒரு புறம் இருக்க, ‘இந்தி பூஜ்யம்’ என்றும் சொல்லியிருக்கிறாரே அது எதற்கு?
இவரைப் போலவே, ‘இந்தி’யனிடம் “நான் உங்களின் அடிமை” என்று சொல்லி அடிபணிந்து சேவகம் புரியவா?
இந்தியா வேறு வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட பல இனத்தவர் வாழும் நாடு. இந்தியா ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள் அவர்கள்.
அனைத்து இனத்தவரின் தேவைகளை அதிகாரிகளின்[ஆங்கிலம் அறிந்தவர்கள்] கவனத்தில் கொண்டு அவர்களுக்கான நிதி உதவியைச் செய்வது ஒன்றிய அரசின் கடமை.
நடைமுறை இதுவாக இருக்க, இந்தி தெரிந்துகொண்டு, தமிழன் பைசாவுக்குக் கையேந்த வேண்டியதன் அவசியம் என்ன?
ஓர் அரசியல்வாதிக்குரிய குறைந்தபட்சப் பொது அறிவுகூட அண்ணாமலைக்கு இல்லாதது அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் அவமானம்.
இப்படியெல்லாம், இங்கு ஆட்சிபுரிவோரைக் காட்டுத்தனமாய்த் தாக்கிப் பேசினால்தான் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் பதவியைத் தக்க வைக்க முடியுமா?
ஆராயும் அறிவே இல்லாமல் அரசியல் செய்யும் அதிசயங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
இது தமிழ்நாட்டின் நலனுக்கு[இந்தியாவிற்கும்தான்]க் கொஞ்சமும் உகந்தது அல்ல!
* * * * *