ரஜினி | அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி | அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 நவம்பர், 2020

தொடரும் 'ரஜினி தொற்று'!!!

1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று சொல்லித் தமிழக அரசியலில் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தினார் உச்ச நடிகர் ரஜினிகாந்த்.

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னரும் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தபோது, "தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுப்போச்சு" என்று பேசி,  தூய்மையான ஆட்சியை விரும்பும் நேர்மையாளனாகத் தன்னைக் காட்டிக்கொண்டார்.

2017 டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.

"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்[ஊடகங்கள் இவரின் இந்த அறிவிப்பை ஊதிப் பெருக்கின].

அதற்கான எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

இவர் கட்சி தொடங்கி, தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகாவிட்டால், தமிழக மக்கள் நாதியற்றுப் போவார்கள் என்று நினைத்தோ என்னவோ, தமிழ்த் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும், அவ்வப்போது, 'ரஜினி கட்சி தொடங்குவாரா? தேர்தலில் போட்டியிடுவாரா?' என்பதாகச் செய்தி வெளியிட்டு, 'உச்ச நடிகர்' என்று பெயர் பெற்ற இவரை உச்ச அரசியல்வாதி ஆக்குவதில் தீவிரம் காட்டின.  

இந்நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதாக அறிவித்தார் நடிகர்.

இதற்காகவே தவம் கிடந்தவர்கள் போல, ஊடகக்காரர்கள், கையில் புகைப்படக் கருவியும் குறிப்பேடுமாக இவரைத் தேடி ஓடினார்கள். 

ஏமாற்றமே மிஞ்சியது.  

"என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்தச் சந்திப்பு" என்று அறிவித்ததன் மூலம், அரசியக் கட்சி தொடங்குவாரா ரஜினி என்று மக்களை எதிர்பார்க்கத் தூண்டிவிட்டு,  தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்படும்போதுதான் அரசியலுக்கு வருவேன்" என்று அறிவித்து 'அந்தர் பல்டி' அடித்தார் 'உச்சம்'.

இதன் பின்னர், கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. 

இவரின் ஊடக அடிமைகளால் சும்மா இருக்க முடியவில்லை. இவரின் ரசிகர்களைச்[சினிமா பார்ப்பதைத் தவிர, படிப்பறிவோ பகுத்தறிவோ பட்டறிவோ இல்லாத ஒரு சிறு கூட்டம்] சந்தித்துப் பேட்டி கண்டும், வேறு வேலை வெட்டி இல்லாத நாலு பேச்சாளர்களைத் தேடிப் பிடித்துக் கலந்துரையாடச் செய்தும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தான கருத்துகளை வெளியிட்டு ஆத்ம திருப்தி கண்டார்கள்.

நடிகருக்குப் பைசா செலவில்லாமல் விளம்பரம் கிடைத்துக்கொண்டே இருந்தது.

கொரோனா காலத்தில் தமது உடல்நிலை, வெளியே வந்து மக்களைச் சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக நடிகரே தெரிவிப்பது போல் சமூக ஊடகங்களில் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் பரவின.

இது குறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றித் தகுந்த நேரத்தில் என் 'ரஜினி மக்கள் மன்ற' நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று அறிவித்திருந்தார். இதன் மூலம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கித் தான் ஒரு 'பிரபலம்' என்பதைப் பறைசாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில்தான் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டார். 'இந்தக் கூட்டத்தின் இறுதியில் தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை ரஜினிகாந்த் அறிவிப்பாரா?' என்று கேள்வி எழுப்பிப் பெரும் பரபரப்பை உண்டுபண்ணினார்கள் ஊடகக்காரர்கள். 

ரஜினி, 37 மாவட்டச் செயலாளர்களிடமும் தனித்தனியே கருத்து கேட்டாராம். இந்த ஆலோசனையின் போது சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ரஜினி அதிருப்தி தெரிவித்தாராம். 'என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர். பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சிலரின் தவறான செயல்பாடுகளில் மாற்றம் இல்லை. அதனாலேயே சிலரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லியிருக்கிறாராம்[பல்வேறு ஊடகச் செய்திகளை ஆதாரமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்தப் பதிவு].

கட்சியே ஆரம்பிக்கவில்லை. ரஜினி மன்றப் பொறுப்பாளராக இருக்கும் ஒருவர் அப்படி என்ன பெரிய தவற்றைச் செய்துவிட முடியும்? 

இவர் பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார்களாம். கட்சி தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சிறிது காலமாவது ஆண்டால்தானே இவர் நேர்மையானவரா, களங்கமுற்றவரா என்பது தெரியும்!

இப்போதே எதற்கு இம்மாதிரிப் பேச்செல்லாம்?

இவர் மாதிரியான பிரபலங்கள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் தற்பெருமை பேசலாம். எதைப் பேசினாலும் நம்புவதற்கு இங்கே ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கிடக்கிறது!!!
===============================================================

வியாழன், 12 மார்ச், 2020

‘சூப்பர் ஸ்டார்' சூப்பர் அரசியல்வாதி ஆவது எப்போது?

’நடிகர் ரஜினிகாந்து இன்று[12.03.2020] தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்’ என்று நேற்று முதல் பரபரப்புச் செய்தி வெளியிட்டன சில தமிழ்  தொ.கா.களும் பத்திரிகைகளும்.

கடந்த காலங்களில் அவ்வப்போது அவர் வெளியிட்ட தன் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகளின் தொகுப்பை ஊடகக்காரர்களுக்குச் சிறப்புச் செய்தி[10.30 மணிக்கு] என்னும் பெயரில் வழங்கி, அவர்களின் முகங்களில் கரி பூசியிருக்கிறார்; நடைமுறையில் பெரும் குழப்பம் ஏற்படுத்தும் சில திட்டங்களையும் அறிவித்திருக்கிறார்.

ரஜினிக்குத் தீவிர அரசியலில் இறங்குவதற்கான மன வலிமை இல்லை. களத்தில் தனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்களையோ, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்களையோ, வாக்களிக்கும் மக்களையோ அவர் அரைகுறையாகக்கூட நம்பத் தயாராயில்லை. சக மனிதர்கள் மீது அத்தனை அவநம்பிக்கை.

அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடவும் அவரால் இயலவில்லை. உச்ச நடிகராக நீடிப்பது இனி சாத்தியம்[வயது 71] இல்லை என்ற நிலையில், முதலமைச்சராகும் அதிர்ஷ்டம் அடித்தால் எஞ்சிய வாழ்நாளை சூப்பர் அரசியல்வாதியாகக் கழிக்கலாம் என்னும் நப்பாசை காரணம்.

ஆக, ரெண்டுங்கெட்டான் மனநிலையில் உள்ள இவர் கட்சி தொடங்கமாட்டார் என்பது உறுதி. ஆனாலும், பதவி ஆசையைத் துறக்க இயலாமல் அவ்வப்போது பேட்டி என்னும் பெயரில் எதையாவது உளறிக்கொண்டுதான் இருப்பார். இந்நிலை நீடித்தால்.....

‘சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர் ரஜினிகாந்து ‘சூப்பர் அரசியல்வாதி’ ஆவது எப்போதும் இல்லை!
========================================================================


//ரஜினி பேச்சு

நேற்று முதல் ரஜினி முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார், கட்சி பெயரை அறிவிக்கிறார் என பயங்கரமாக பில்ட்-அப்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று ரஜினி செய்தியாளர்கள் மத்தியில் பேசியது அவரது ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் முதல்வர் பதவியை கனவிலும் நினைத்து பார்த்ததில்லை எனக் கூறி அந்தப் பதவிக்கான போட்டியில் இருந்து அவர் பின்வாங்கியது தான். கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என ரஜினி கூறியிருப்பது நடைமுறைக்கு சாத்தியமா என்றால் அது சந்தேகமே. -tamil.oneindia.com //
மாநிலக் கட்சிகள்
தமிழருவி மணியன் தலையில் கைக்கான பட முடிவுகள்

========================================================================


வியாழன், 28 டிசம்பர், 2017

'சூப்பர் ஸ்டார்' ரஜினியிடம் ஒரு கேள்வி!

'ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பல தடவை சுற்றிவந்து கும்பிட்டு, "நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அங்கு கூடியிருந்த ஏராள ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்' என்பது இன்றைய நாளிதழ்ச்[தினத்தந்தி, 28.12.2017] செய்தி.
'ரஜினி ஒருகட்சி தொடங்க வேண்டும். தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும்' என்பது அவருடைய ரசிகர்களின் நீண்ட கால ஆசை.

"தலைவா வா!... தலைமை ஏற்க நீ வா!!" என்று மனம் சலிக்காமல் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

ரஜினியோ, "போர் தொடங்கட்டும்", "ஆண்டவன் கட்டளையிடட்டும்", "காலம் கனிய வேண்டும்; வியூகம் வகுக்க வேண்டும்" என்றெல்லாம் ஏதேதோ சொல்லிக் காலம் கடத்தினார். 

பொறுமை இழந்த ரசிகர்கள், "சூப்பர் ஸ்டார் வாழ்க! தன்னேரில்லாத தலைவன் வாழ்க!!" என்றெல்லாம் அவ்வப்போது முழக்கமிட்டு, ரஜினியின் மனதில் பதவி ஆசையைத் தூண்டிவிட முயன்றார்கள். முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

நேற்று[28.12.2017] தம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை ரஜினி தொடங்கி வைத்தபோது, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் திரண்டு, "சூப்பர் ஸ்டார் வாழ்க! தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் வாழ்க!!" என்று முழக்கமிட்டு, ரஜினி இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் ஓர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்னும் தங்களின் ஆழ்மன விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின் உச்சமாக, பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பல தடவை சுற்றிவந்து கும்பிட்டு, "நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அங்கு கூடியிருந்த ஏராள ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.

இருமுடி சுமந்து சென்று சபரிமலை ஐயப்ப சுவாமியை வழிபடவிருந்த ஒரு ஐயப்ப பக்தர்[கடவுள்களை மட்டுமே வணங்கி வழிபடவேண்டியவர்] ரஜினி என்னும் மனிதரைப் பலமுறை வலம்வந்து வணங்கி வழிபட்டிருக்கிறார்.

ரஜினி நாத்திகரல்ல; சிறந்த கடவுள் பக்தர். இச்செயலை அவர் கண்டித்திருக்க வேண்டும். செய்தாரில்லை[ஐயப்ப பக்தர்களும் கண்டித்ததாகத் தெரியவில்லை]. ஏன்?!
=====================================================================================