அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 11 அக்டோபர், 2013

நம்பர்: 1 குமுதம் இதழுக்கு நம் வாழ்த்துகளும் வேண்டுகோளும்!

“இறைவா, பாவி ஆத்மா ஒன்னு தவறிடிச்சி. சொர்க்கத்துக்குத்தான் அது வந்துகிட்டிருக்கு. கதவைக் கொஞ்சம் திறந்து வைன்னு சொல்றதுக்குத்தான் நாங்க இந்தச் சங்கை ஊதுறோம். சங்கு விஷ்ணு பகவானுக்குச் சொந்தமானது. சேமகலம் [சேகண்டி] சிவபெருமானுக்குச் சொந்தம். இதைப் போயிக் கேவலமா நினைச்சிக் கிண்டலடிக்கிறாங்களேன்னுதான் வருத்தமா இருக்கு.”

இப்படிச் சொல்வது யார் தெரியுங்களா?

திருவண்ணாமலையைச் சேர்ந்த இரு பள்ளிச் சிறுவர்கள்! சகோதரர்களும்கூட.

இழவு வீடுகளில் சங்கு ஊதும் இவர்களில் ஒருவனுக்கு வக்கீலாக ஆசை. ஏன் இந்த ஆசை? மக்களுக்குச் சேவை செய்யணுமாம்.

இன்னொருத்தன் ஆசைப்படுவது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய.

இத்தனை பெரிய ஆசைகளைச் சுமந்துகொண்டு இவர்கள் இழவு வாசல்களில் சங்கு ஊதுகிறார்களே, இது ஏன்?

ஏழ்மை.

கதிர்வேலுவும் பார்த்தசாரதியுமான இந்தச் சிறுவர்கள், யாரும் இறந்துபோனால், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் சங்கு ஊதப் போவார்களாம். “ஒரு நாள் காரியத்துக்குப் போனா இருநூறு ரூபா குடுப்பாங்க. அதைக் கொண்டுவந்து அப்பாகிட்டே குடுத்துடுவேன். அந்தப் பணத்தில் ஒன்னு ரெண்டு டிரஸ் எடுத்துக்குவேன். பள்ளிக்கூட ஃபீஸ் கட்டுறதுக்குப் பயன்படுத்திக்குவேன்” என்கிறான் கதிர்வேலு.

கதிர்வேலுக்குப் பதினான்கு வயதுதான். ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறான். பார்த்தசாரதிக்குப் பதினொரு வயது. ஆறாவது படிக்கிறான். இந்தச் சின்ன வயதில் இழவுக்குச் சங்கு ஊதிச் சம்பாதித்துப் படிக்கிறார்கள் இவர்கள்.

இவர்களின் அப்பாவுக்குப் பூ வியாபாரம். அண்ணன் ஆட்டோ ஓட்டுகிறார். சின்ன ஓட்டு வீடு. பக்கத்திலுள்ள அண்ணாமலையார் பள்ளியில் இருவரும் படிக்கிறார்கள்.

“மூனு வருஷமா சங்கு ஊதிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இழவு வீட்டுக்குப் போய்ச் சங்கு ஊதப் பயமா இருந்திச்சி” என்கிறார்கள் இருவரும்.

பார்த்தசாரதிக்குத் துக்கம் என்பது அவ்வளவாகப் புரிவதில்லை. எங்கு அழைத்தாலும் ஜாலியாகப் போய் சங்கு ஊதிவிட்டு வருவான்.

கதிர்வேல் அவனுக்கு நேர் எதிர். குறும்பான பேச்சும் சிரிப்பும் அவனிடமிருந்து எப்போதாவதுதான் வெளிப்படுகிறது. “சாவைப் பார்த்துப் பார்த்து எனக்கு சகஜம் ஆயிடிச்சி. வயசான கெழங்கள் செத்தா அந்த வீட்டில் ஒருவிதமான சந்தோசம் இருக்கும். வயசுக்காரங்க செத்தா எல்லாரும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. எதுவும் என்னைப் பாதிக்கிறதில்லை. யார் செத்தாங்க, ஏன் செத்தாங்க என்பதையெல்லாம் நான் விசாரிக்க மாட்டேன். என் வேலையை முடிச்சுட்டு வந்துட்டே இருப்பேன்.” பிதாமகன் விக்ரம் மாதிரி பேசுகிறான் கதிர்வேலு.

“சங்கு ஊதுவதால் உங்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லையா?”

இந்தக் கேள்வியைப் புரிந்துகொண்டு பதில் சொல்கிறான் கதிர்வேலு: “சங்கடந்தான். ஸ்கூல்ல கேலி பண்ணுவாங்க. நான் அதுக்காகக் கவலைப்படுறதில்ல. படிக்கிறப்பவே சம்பாதிக்கிறேன்னு பெருமையா இருக்கு. இதுவும் ஒரு வகையான ஆத்ம சேவைதான். இல்லீங்களா?” என்கிறான்.

                              *                                *                                    *

வணக்கம் அன்பரே. தங்கள் வருகைக்கு நன்றி.

இப்படியொரு பதிவு , சினிமாக்காரிகளின் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் வார இதழ்களில் முதன்மை இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் குமுதம் இதழில் வெளியானது என்றால் நம்ப முடியாதுதான்.

நம்புங்கள். 29.12.2003 குமுதம் [பொங்கல் மலர்-1] இதழில் இது வெளியானது.

குமுதத்துக்கு ஒரு வேண்டுகோள்........................

குமுதத்தில் இக்கட்டுரை வெளியாகிப் பத்து ஆண்டுகள் போல் ஆகிவிட்டன.

இப்போது, கதிர்வேலுக்கு வயது இருபத்தி நான்கு.

வக்கீலாகி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவனுடைய ஆசை நிறைவேறியதா? அல்லது, நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

இருபத்தொரு வயதான பார்த்தசாரதியின், ராணுவத்தில் சேரவேண்டும் என்னும் ஆசை என்ன ஆயிற்று?

இக்கேள்விகளுக்கான விடைகளை அறியும் பேராவல் குமுதத்தின் ஆயுட்கால வாசகர்களாகிய எங்களுக்கு இருக்கிறது.

குமுதம் மனம் வைத்தால், இந்த இரு லட்சிய இளைஞர்களைப் பற்றி விசாரித்து அறிவிக்க முடியும்.

குமுதத்துக்கு நம் வாழ்த்துகள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@