அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 14 அக்டோபர், 2013

இத்தனை கடுமையானதா இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டம்!?!?!?

கற்பழித்தவனைக் கல்லால் அடித்துக் கொல்வது; களவு செய்தவனின் கை கால் வெட்டுவது; கொலை செய்தவனை நாற்சந்தியில் தூக்கில் போடுவது...இவை, இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டத்தை அமல்படுத்தும் நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் என்பது நீங்கள் அறிந்ததே. நீங்கள் அறியாத ஓரிரு “ஐயய்யய்யோ...”க்கள் கீழே.....


இந்திய நாட்டை வெள்ளையர் ஆளத் தொடங்கிய காலக்கட்டத்தில், கி.பி.1771இல்தான் உரிமையியல், குற்றவியல் தொடர்பான வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதுவரை குற்றச் செயல்களுக்கு, இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன.

குற்றவாளிகளுக்கு, கைகால் துண்டித்தல்; கல்லால் அடித்தல்; சவுக்கால் விளாசுதல் முதலானவை தவிரக் குலை நடுங்க வைக்கும் தண்டனைகளும் வழங்கப்பட்டன.

உதாரணத்துக்கு, கல்கத்தா கிரானிக்கில்’ [Calcutta Chronicle] என்னும் இதழ், 19.02.1789இல் ஒரு வழிப்பறிக் கொள்ளைக் கூட்டத்தினர்க்குத் தண்டனை விதிக்கப்பட்ட முறை பற்றி  விவரித்திருப்பதைக் கீழே படியுங்கள். [சிந்தனையாளர் வே. ஆனைமுத்து அவர்கள் எழுதிய ‘தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி’{பெரியார் நூல் வெளியீட்டகம், இராயப்பேட்டை, சென்னை}என்னும் நூலிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டன]

‘வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 14 பேரும் அன்று மதியம் ஒரு மணிக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்ட முறை, காணப் பொறுக்காத கொடுமை[என்கிறது கல்கத்தா கிரானிக்கில்].

அவர்களில் ஒருவனை மல்லாத்திப் படுக்க வைத்தனர். அவனது வாயை இறுகக் கட்டிவிட்டனர். உறுப்புகளை வெட்டும்போது திமிராமல் இருப்பதற்காக, அவனது வலது கையையும் இடது காலையும் விட்டுவிட்டு, மற்ற உறுப்புகளை நீண்ட பெரிய ஊசிகளால் நிலத்தோடு இறுகத் தைத்தனர். அவ்வாறு செய்த பின் அவனது இடது கை வெட்டப்பட்டது. அவ்வாறு வெட்டுவதற்கு வளைவான கத்தி பயன்படுத்தப்பட்டது. ஒரே வெட்டாக அவன் கை வெட்டப்படவில்லை. அதற்குப் பதிலாக....

[வாசக நண்பரே, உடம்பெல்லாம் வேர்த்து வெடவெடக்கிறதா? வேர்வையைத் துடைத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே படியுங்கள்]

.....முதலில் மணிக்கட்டு வெட்டப்பட்டது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அவன் கை துண்டிக்கப்பட்டது. அவனது வலது கணுக்காலும் காலும் இதே போல் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுக்கப்பட்டது. ......

.....இவ்வாறு கையும் காலும் வெட்டப்பட்ட பிறகு, வெட்டுக் காயங்கள் உள்ள உடல் பகுதிகள் கொதிக்கும் நெய்யில் தோய்க்கப்பட்டன. அந்நிலையில் அவன் சாக அனுமதிக்கப்பட்டான்.

மீதியிருந்த பதின்மூன்று பேரும் அவ்வாறே கைகால்கள் துண்டிக்கப்பட்டனர். காயங்கள் கொதி நெய்யில் தோய்க்கப்பட்டன......

.....இதில் வியப்பூட்டக் கூடியது என்னவென்றால், அவர்களுள் ஒருவரும் உடனே சாகவில்லை என்பதுதான்.

அப்புறம், வெட்டப்பட்ட கைகளும் கால்களும் ஆற்றில் எறியப்பட்டன. வெய்யிலின் கொடுமை தாங்க மாட்டாமல் அவர்களுள் நால்வர் இறந்தனர்.’

கிரானிக்கில் விவரித்த இந்தக் கொடூர நிகழ்ச்சி ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி, குற்றவாளிகளை மட்டுமல்லாமல், காண்போரையும் துடிதுடிக்க வைக்கும் வகையில் வழங்கப்பட்ட தண்டனைகள் எத்தனை எத்தனையோ!

'இம்மாதிரி, கொடூரமான தண்டனைகளைக் காணச் சகிக்காத வெள்ளையர்கள், 1793இல், ஒழுங்குமுறைச் சட்டம் என்ற பெயரால் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்தார்கள்' என்கிறார் நூலாசிரியர்.

குற்றவாளிகளுக்கு, இ.கு சட்டங்கள் வழங்கிய தண்டனைகளையெல்லாம் ‘ஜுஜுபி’ ஆக்கும் வகையில் தனி மனிதர்கள் சிலர் வழங்கும் தண்டனைகள் அமைந்துவிடுவதுண்டு.

தன் மனைவியைக் கற்பழித்துக் கொன்றவனைக் கட்டிப் போட்டு, அவனின் பிறப்புறுப்பைச் சித்திரவதை செய்து செய்து செய்து, துண்டித்து அவன் வாயில் திணித்து...அப்புறமும் வெறி தணியாமல், துண்டித்த தலையுடன் ஊர்வலம் சென்று காவல் நிலையத்தில் சரணடையும் ஆண்மகன்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்கள் எந்தவொரு குற்றவியல் சட்டத்தையும் அறியாதவர்கள். தன்மானத்துடன் வாழ மட்டுமே ஆசைப்படுபவர்கள்.

####################################################################################

இன்று காலைதான் இந்நூலைப் படிக்க நேர்ந்தது. அரிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

இன்றிரவு, கைகால் வெட்டுதல்; கொதிக்கும் நெய்யில் தோய்த்தல் போன்ற பயங்கரக் கனவுகளால் உங்கள் உறக்கம் கெட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!

#####################################################################################