ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னரும் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தபோது, "தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுப்போச்சு" என்று பேசி, தூய்மையான ஆட்சியை விரும்பும் நேர்மையாளனாகத் தன்னைக் காட்டிக்கொண்டார்.
2017 டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்[ஊடகங்கள் இவரின் இந்த அறிவிப்பை ஊதிப் பெருக்கின].
அதற்கான எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
இவர் கட்சி தொடங்கி, தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகாவிட்டால், தமிழக மக்கள் நாதியற்றுப் போவார்கள் என்று நினைத்தோ என்னவோ, தமிழ்த் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும், அவ்வப்போது, 'ரஜினி கட்சி தொடங்குவாரா? தேர்தலில் போட்டியிடுவாரா?' என்பதாகச் செய்தி வெளியிட்டு, 'உச்ச நடிகர்' என்று பெயர் பெற்ற இவரை உச்ச அரசியல்வாதி ஆக்குவதில் தீவிரம் காட்டின.
இந்நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதாக அறிவித்தார் நடிகர்.
இதற்காகவே தவம் கிடந்தவர்கள் போல, ஊடகக்காரர்கள், கையில் புகைப்படக் கருவியும் குறிப்பேடுமாக இவரைத் தேடி ஓடினார்கள்.
ஏமாற்றமே மிஞ்சியது.
"என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்தச் சந்திப்பு" என்று அறிவித்ததன் மூலம், அரசியக் கட்சி தொடங்குவாரா ரஜினி என்று மக்களை எதிர்பார்க்கத் தூண்டிவிட்டு, தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்படும்போதுதான் அரசியலுக்கு வருவேன்" என்று அறிவித்து 'அந்தர் பல்டி' அடித்தார் 'உச்சம்'.
இதன் பின்னர், கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது.
இவரின் ஊடக அடிமைகளால் சும்மா இருக்க முடியவில்லை. இவரின் ரசிகர்களைச்[சினிமா பார்ப்பதைத் தவிர, படிப்பறிவோ பகுத்தறிவோ பட்டறிவோ இல்லாத ஒரு சிறு கூட்டம்] சந்தித்துப் பேட்டி கண்டும், வேறு வேலை வெட்டி இல்லாத நாலு பேச்சாளர்களைத் தேடிப் பிடித்துக் கலந்துரையாடச் செய்தும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தான கருத்துகளை வெளியிட்டு ஆத்ம திருப்தி கண்டார்கள்.
நடிகருக்குப் பைசா செலவில்லாமல் விளம்பரம் கிடைத்துக்கொண்டே இருந்தது.
கொரோனா காலத்தில் தமது உடல்நிலை, வெளியே வந்து மக்களைச் சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக நடிகரே தெரிவிப்பது போல் சமூக ஊடகங்களில் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் பரவின.
இது குறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றித் தகுந்த நேரத்தில் என் 'ரஜினி மக்கள் மன்ற' நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று அறிவித்திருந்தார். இதன் மூலம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கித் தான் ஒரு 'பிரபலம்' என்பதைப் பறைசாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில்தான் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டார். 'இந்தக் கூட்டத்தின் இறுதியில் தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை ரஜினிகாந்த் அறிவிப்பாரா?' என்று கேள்வி எழுப்பிப் பெரும் பரபரப்பை உண்டுபண்ணினார்கள் ஊடகக்காரர்கள்.