பக்கங்கள்

ஞாயிறு, 28 ஜூலை, 2019

“தமிழைப் புறக்கணிக்க இந்தியாவால் முடியாது. இந்தியாவைப் புறக்கணிக்கத் தமிழால் முடியும்; தமிழரால் முடியும்”

மிழ்நாட்டில் தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்காக, தமிழர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் பாடநூலில்(பிளஸ்-2) தமிழின் தொன்மையை மறைத்தும் குறைத்தும் எழுதப்பட்டுள்ளது. வட மொழியின் தோற்றம் கி.மு.2000 என்றும் தமிழின் தொன்மை கி.மு. 300 தான் என்றும் பொய்யிலும் பொய்யாக ஒரு புலனாய்வு செய்யப்பட்டுள்ளதைக் கவிஞர் மு.மேத்தா மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார். 
#மாணவர்களுக்கான கல்வியில் கலப்படக்காரர்கள் மறைந்து கிடப்பதையும் ஆதிக்கம் செலுத்துவதையும்  நாம் அனுமதிக்க முடியாது.

மறைந்து கிடப்பதை, மறைக்கப்பட்டதை அறிந்து கொள்வதும், அறிவித்துக்கொள்வதும் தான் அறிவு. அறிவை வளர்க்கும் கல்விக்கூடங்களிலேயே மெய்யைப் புதைத்து, பொய்யை விதைத்துத் தங்கள் குலதர்மக்கொடியேற்றப் பார்க்கும் கொடியவர்களை மட்டுமல்ல அவர்கள் கூடாரங்களைக் கொளுத்தி முடிக்கும் வரை எங்கள் குரலும் ஓயாது; கூட்டமும் கலையாது.

தமிழர்கள் உறுமி எழ வேண்டிய நேரம் இது. வடமொழிக்கு வால் பிடித்துத் தங்கள் வக்கிரக் கொள்கைக்கு ஆள் பிடிக்கும் கூட்டத்தின் வாயாடித்தனத்தை இன்னும்  அணுவளவு நேரம் கூட நாம் அனுமதிக்க முடியாது.

பாடப்புத்தகத்தின் பகுதிகளை மாற்றினால் மட்டும் போதாது. இதற்குக் காரணமானவர்களையும், கண்டுபிடித்துத் தமிழில்... இன்னும் தமிழ்நாட்டில் இருந்தும் மாற்றவேண்டும். இல்லையென்றால் முன்னர் நடந்தது போல் மற்றும் ஒரு மொழிப்போரை இந்தியா சந்திக்க வேண்டியது இருக்கும்.


ஒன்றாக இருக்கும் உள்ளங்களை மட்டும் அல்ல; தேசத்தையும் உடைத்துவிடல் ஆகாது. கல்விக் களத்தில்தான் பலவிதமான கொடூரங்கள் நடந்து வருகின்றன. தேர்வுக்கு மேலும் தேர்வு. தேர்வின் மேலும் தேர்வு என்று நீட் கொள்கையின் நீசர்கள் தமிழகத்தை நாசப்படுத்தி வருவதை எரிமலையாய்க் குமுறிக்கொண்டிருக்கும் தமிழ் இதயங்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றன என்று எச்சரிக்கிறேன்.

ஆங்கிலத்துக்கும், வடமொழிக்கும் இடமுண்டு. தமிழுக்கு இடம் இல்லை. என்று அஞ்சல் தேர்வில் அஞ்சாமல் செயல்படுத்தி இருக்க கூடியவர்களைக் காலம் ஒரு காலத்திலும் மன்னிக்காது. தமிழைப் புறக்கணிக்க இந்தியாவால் முடியாது. இந்தியாவைப் புறக்கணிக்கத் தமிழால் முடியும்; தமிழரால் முடியும்.

‘இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ என்று தமிழைத் தலையில் தூக்கிக்கொண்டு கூத்தாடியவன் பாரதி. அதைக் காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்று கயவர்கள் நினைத்தால் அவர்கள் கருகிப் போகக் கூடும் என்பதை மனம் உருகிச் சொல்லிக் கொள்கிறேன்.

குறைந்தபட்சம் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாது இந்தியாவின் அதி மேதாவிகள் இறங்கி வர வேண்டும். இல்லையென்றால் அவர்களின் உயரங்கள் நொறுக்கப்படும்.

உலகம் அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடும். மீண்டும் ஒரு மொழிப்போர் தமிழ்நாட்டில் இருந்து புறப்படுமேயானால்....

இது ஒரு பிரிவினைவாதியின் பிதற்றல் அல்ல; ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று உண்மையாக நினைக்கிற ஒரு கவிஞனின் உரத்த குரல்.

கவிஞர் மு.மேத்தா#
====================================================================================
நன்றி: தினத்தந்தி[28.07.2019] நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக