ஒருவன் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம். ஆனாலும், குறையக் குறைய வாய்க்கு ருசியாய்த் தின்றுகொண்டே இருந்தால் அற்ப ஆயுளில் அவன் கதையை அது முடித்துவிடும்.
மகான், அவதாரம் என்றும் சொல்லித் திரிகிற ஆசாமிகளை நமக்குத் தெரியும். அடிக்கடி விரதம் நோன்பு எல்லாம் இருப்பதாக அலட்டிக்கொள்வார்கள். அதுவே வாரக்கணக்கில் மாதக்கணக்கில் என்றால் இயற்கை அனுமதிக்காது; பரலோகம் அனுப்பிவிடும்.
“நான் கடவுள்களுக்கெல்லாம் குரு” என்று சொல்லி ஊரை ஏமாற்றலாம்; உலகையும் நம்ப வைக்கலாம். மூளையில் ரத்தக் கசிவோ, மூச்சுக் குழலில் கட்டியோ வந்தால் மருத்துவரைத் தேடிப்போய்ச் சிகிச்சை பெறுதல் வேண்டும். மறுத்தால் எமலோகப் பயணம்தான்.
“நான் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவன்” என்று பீற்றிக்கொள்வர்கள் இங்கே உண்டு. அவர்களை அனுப்பியவர் கடவுளோ சாத்தானோ எதுவாகவோ இருந்து தொலைக்கட்டும். இயற்கையாகவோ செயற்கையாகவோ பக்தி செலுத்தவும் ஓர் எல்லை உண்டு. கடமைகளைப் புறக்கணித்து, கண்ட கண்ட கோயில்களுக்குப் போய், குனிந்து குனிந்து கும்பிடுவதும், தரையில் விழுந்து விழுந்து புரளுவதுமாக இருந்தால் இயற்கை அவர்களைப் ‘பைத்தியம்’ ஆக்கிவிடும்.
ஆடிப்பாடி குதூகளிப்பதோ, ஓடியாடிக் கும்மாளம் போடுவதோ, உடலுறவுச் சுகத்தில் மூழ்க்கிக் கிடப்பதோ எதுவாயினும் அதற்கு ஒரு வரன்முறை உண்டு. அதை மீறினால், ஆணோ பெண்ணோ இயற்கை வேடிக்கை பார்க்காது; ஏதோ ஒருவகையில் தண்டித்துவிடும்.
ஆகவே மானிடர்களே,
கடவுளுக்குக்[இருந்தால்] காணிக்கை செலுத்தியோ, கண்ணீர்விட்டு கதறிக் கதறி அழுது புலம்பியோ செய்த குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். இயற்கையிடம் அவை செல்லுபடி ஆகாது என்பதை அறிவீராக!