சனி, 29 ஆகஸ்ட், 2020

ஊடக அதர்மம்!!!

இன்று[29.08.2020] காலையில், தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் கீழ்வரும் செய்தி வெளியானது.

‘அருப்புக்கோட்டையில் [கடவுள்] சிவன் கண்  திறந்தார். தரிசனம் பண்ண அலைமோதியது பக்தர்கள் கூட்டம்’

இது தொடர்பான செய்தி வழக்கமாகக் காலையில் நான் வாசிக்கும் நாளிதழில் இல்லை. இணையத்தில் தேடினேன். ஒரு ‘காணொலி’ மட்டுமே கிடைத்தது. அதில், ஒரு சிவலிங்கத்தின் மீது  இடப்பட்ட சந்தனப் பொட்டுக்கு நடுவில் குங்குமம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அது, நெற்றிக்கண் திறந்திருப்பது போல்[பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது] காட்சியளித்தது. அவ்வளவுதான். சிவலிங்கம் கண் திறக்கவும் இல்லை; விழித்துப் பார்க்கவும் இல்லை


உண்மை இதுவாக இருக்கையில், ஊடகர்கள் ஏன் இவ்வாறெல்லாம் தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிடுகிறார்களோ தெரியவில்லை.

சிவலிங்கத்திற்கு[சிலைக்கு]க் கண் இருக்கிறதா? அது திறந்திருந்தது என்பது உண்மை நிகழ்வா? ஊடக நிருபர் அதை நேரில் கண்டாரா? 

இம்மாதிரிக் கேள்விகள் கேட்டால் இவர்களிடமிருந்து பதில் கிடைக்காது.

அம்மன் சிலையில் கண்ணீர் வழிந்ததாகவும் அடித்துவிடுகிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால், வழிந்த கண்ணீரை என் கைக்குட்டையால் துடைத்தேன் என்றுகூட எழுதுவார்கள் போலிருக்கிறது.

‘ஆண்டுதோறும், ஆண் பெண் சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைப்பது போல, சிவலிங்கத்திற்கு அல்லது, சிலைக்குச் சந்தனப் பொட்டின் நடுவே குங்குமம் வைத்து, கண் திறப்புச் செய்து[செயற்கையாக] விழாக் கொண்டாடுவது ஒரு வழக்கமான நிகழ்வு. நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே எழுதுவதுதானே ஊடக தர்மம்? இந்தத் தர்ம நெறியை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்?

கள்ளழகர் சிலையை வைகையில் இறக்குவதும் ஒரு வழக்கமான நிகழ்வுதான். சிலை ஆற்றில் இறக்கப்பட்டது என்று எழுதினால் கள்ளழகர் கோபிக்கமாட்டார். ‘கள்ளழகர் வைகையில் இறங்கினார்’ என்று எழுதுவதன் மூலம் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் இவர்கள்?

இம்மாதிரித்  ‘திரிப்பு’ வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்வதால்.....

“கண் திறந்த கடவுள் இமைகளை அசைத்தாரா? கண் சிமிட்டினாரா? எத்தனை தடவை? எப்போது மீண்டும் கண் மூடினார்? கண் திறந்த அவர் வாய் திறந்து பேசினாரா? கொரோனா பற்றி ஏதும் சொன்னாரா?” -இப்படியெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.

கேட்டால், மனம் புண்படுவதாகச் சொல்பவர்கள் பத்திரிகைக்காரர்கள்[ஊடகர்கள்] அல்ல; பக்தர்கள்தான். கேட்பவன் மீது வழக்குத் தொடுப்பவர்களும் அவர்கள்தான்; முடிந்தால் அடி உதை கொடுத்துத் தண்டனையும் வழங்குவார்கள்.

ஆக, பக்தர்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவதில் ஊடகர்களுக்கு முக்கிய பங்குண்டு என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆதலினால் ஊடகரே,

இனியேனும் திருந்துங்கள். ஊடக தர்மம் போற்றுங்கள்.

நும் பணி சிறக்க நம் வாழ்த்துகள்!!
=====================================================================