வியாழன், 2 ஆகஸ்ட், 2018

தக தகக்கும் 'தங்கச் சாமியார்'!!!

கழுத்தில் 20 கிலோ தங்க நகைகளுடனும்,  கையில் 27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்துடனும்  திரிகிற ஒரு சாமியாரைப் 'பாபா' ஆக்கியிருக்கிறார்கள் நம் மக்கள்! சொகுசுக் கார்களில்[இவரிடம் பிஎம்டபிள்யூ கார் 1, பார்ச்சூனர் 3, ஆடி 2  என 6 கார்களுக்கு மேல் உள்ளன] பயணிக்கிற இந்த ஆசாமிக்குப் போகிற இடமெல்லாம் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு! என்னவெல்லாம் நடக்கிறது இந்த நாட்டில்!!

பக்தகோடிகளால், 'சுதிர் மக்கார்' என்று அழைக்கப்படும் இந்த நபர், சிறு வயதில் சாலையோரங்களில் ஜெப மாலை, துணிகள் போன்ற விலை மலிவான பொருள்களை விற்று வயிறு வளர்த்தவர்; பின்னர், பெரிய அளவில் துணி வணிகமும் வீட்டுமனைத் தரகர் தொழிலும் செய்து செல்வந்தர் ஆனவர்.
நன்றி: 'இந்து தமிழ்'; தலைப்புப்படம்: 'தினமலர்'
கங்கையிலிருந்து புனித நீர் எடுத்துவந்து சிவ ஆலயங்களில் அபிசேகம் செய்வதற்காகப் பக்தர்கள் மேற்கொள்ளும் வழக்கமானதொரு யாத்திரையில், கடவுளின் அருளால் தான் பணக்காரன் ஆனதாக நம்பும் இந்தச் சுதிர் மக்காரும் கலந்துகொள்வது வழக்கம்.

ஹரித்வாரிலிருந்து டெல்லிக்கு யாத்திரை செல்லும் இவரை மக்கள் வியப்போடு பார்ப்பார்களாம். ஏராளமான தங்க நகைகளை அணிந்துகொண்டு, காரின் மேல் நின்றவாறு மக்களைப் பார்த்துக் கையசைத்தபடி இவர் செல்வாராம்.

2016 ஆம் ஆண்டு, இவர் சுமந்து திரிந்தது 12 கிலோ நகைகள். 2017இல், கழுத்தில் 21 தங்கச் செயின்கள்; கைகளில் தங்கத் தகடுகள்; விரல்களில் தங்க மோதிரங்கள் என மொத்தம 14.05 கிலோ எடையுள்ள நகைகள்.

25 ஆண்டுகளாக, பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பக்தர்களுடன் புனிதமான[?] கங்கை நீருக்காக யாத்திரை செல்லும் இவர், ''எனக்கு 'நகை ஆசையும் கார் ஆசையும் சாகும்வரை போகாது. இந்த ஆண்டு யாத்திரைக்காக ரூ1.25 கோடி செலவழித்துள்ளேன். என்னுடன் 300 பேர்வரை யாத்திரை வருகிறார்கள். அவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி போன்றவற்றைச் செய்துள்ளேன்'' என்கிறார்[இந்து தமிழ், 02.08.2018] இந்தக் கோடீசுவரச் சாமியார்

கங்கையிலிருந்து புனிதநீர் எடுத்துவந்து கோயில்களுக்கு அபிசேகம் செய்பவர்கள் பக்தர்கள். ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அரசு அவர்களுக்குக் காவல்துறைப் பாதுகாப்புத் தருவதில் தவறேதும் இல்லை.

நகைப்பித்து தலைக்கேறிய ஒரு சொகுசுச் சாமியாருக்கு[பெருமளவில் பணம் செலவு செய்து பக்தர்களை அழைத்துப்போவதால் 'பாபா' ஆக்கப்பட்டுவிட்டார் போலும்!] அரசாங்கம் துப்பாக்கி ஏந்திய காவலர்களைப் பாதுகாப்புக்காக அனுப்புவது ஏன்? 

கணக்கு வழக்கில்லாமல், கோயில் நகைகள் கொள்ளை போகின்றன; சிலைகள் களவாடப்படுகின்றன. நாடெங்கும், வீதிகளில் நடந்துசெல்லும் பெண்களின் ஒன்றிரண்டு கழுத்து நகைகளும் தாலிக்கொடிகளும் பறிக்கப்படுகின்றன.  இது விசயங்களில் பெரிதும் அலட்டிக்கொள்ளாத அரசு[மத்திய, மாநில அரசுகள்], தன் பொறுப்பில் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்துகொள்ளும் வசதி படைத்த பணக்காரச் சாமியாரின் நகைகளைப் பாதுகாப்பதில் காட்டும் விசேட அக்கறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது!

ஆள்வோரைத் திருத்தும் கடமை மக்களுக்கானது. மக்களோ சாமியார்கள் மீதான அதீத பயபக்தியில் தம்நிலை இழந்து மயங்கிக் கிடக்கிறார்கள்.

மக்களுக்கான  கடமையை வேறு யார்தான் செய்வது?!
------------------------------------------------------------------------------------------------------------------








9 கருத்துகள்:

  1. ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் இந்த மக்கள்மீது கோபம்தான் வருகிறது.

    "இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப்போகட்டும்" என்று பி.எஸ்.வீரப்பா அவர்கள் சொன்னது பலித்துதான் போகுமோ ?

    பதிலளிநீக்கு
  2. இப்போதுள்ள நிலைமை நீடித்தால் நிச்சயம் பலிக்கும்.

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. தலைப்பைப் பார்த்துட்டுத் தங்கப்பஸ்பம் சாப்பிடுற சாமியாரோன்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடுறவங்க இருக்காங்க. இவரைப் பார்த்தா அப்படித் தெரியல.

      நன்றி புதுமுகம்.

      நீக்கு
  4. வேதனை
    இவர்களை எல்லாம் நம்பும் மனிதர்களை என்னவென்று சொல்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலிகளை நம்புவதில்லை சுகம் காண்பவர்கள்.

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  5. தவறு அவர் மீது இல்லை... மக்களே காரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. இம்மாதிரியான சாமியார்கள் உருவாவதற்கு மக்களே முக்கிய காரணம்.

      நன்றி தனபாலன்.

      நீக்கு