சனி, 23 பிப்ரவரி, 2019

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் அற நெஞ்சம்!

'சமரசம்'[1-15 பிப்ரவரி, 2019] என்னும் இதழுக்கு சாகித்திய அகாடமிப் பரிசு பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து.....

''.....அடிப்படை அறங்கள் கைவிடப்படும்போது அது நம் மனதில் ஆழமான வருத்தத்தை உருவாக்குகிறது. ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

இது வடநாட்டில் நடந்தது.  சாலையோரத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை நான்கு பேர் தூக்கிச்சென்று  ஒரு வயல்வெளியில் பாலியல் பலாத்காரம் செய்ய முயலுகிறார்கள்.

அப்போது, கிராமத்து விவசாயிகள் சிலர் கைகளில் தடிகளுடன் ஓடிவர, பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் ஓடிவிடுகிறார்கள்.

அப்புறம் நடந்ததுதான் நம்மைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

பெண்ணைக் காப்பாற்றியவர்கள் என்று நினைக்கப்பட்ட விவசாயிகளே அந்தப் பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள். 50, 60 வயதுகளைக் கடந்த, அன்றாடம் நாம் காணுகிற சாதாரணத் தோற்றத்தில் இருப்பவர்கள் அவர்கள்.

இத்தனை ஆண்டுகள் இந்திய விவசாயிகள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வண்ணம் அவர்கள் நடந்துகொண்டார்களே, ஏன்?

எது அவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது?

தம் மகள்களின் வயதில், அல்லது பேத்திகளின் வயதிலுள்ள ஒரு பெண்ணை எப்படி அவர்களால் வன்புணர்வு செய்ய முடிந்தது?

பாலியல் வறட்சிதான் இதற்கெல்லாம் காரணமா? இப்படிச் செய்தால் என்ன நடந்துவிடப்போகிறது என்று நினைப்பது காரணமா?

காலங்காலமாய் நாம் போற்றிவந்த அறவுணர்வு எங்கே போனது?

இந்தியச் சமூகத்தின் அடிப்படை அறவுணர்ச்சிகள் நொறுங்குவதை இப்போது நாம் காண்கிறோம். இனி எந்த நம்பிக்கையில் இம்மாதிரி அவலத்துக்குள்ளாகும் பெண்களை நாம் காப்பாற்றப் போகிறோம்?''

'சமரசம்' இதழுக்கும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நம் நன்றி.