வெள்ளி, 26 ஏப்ரல், 2013

காணாமல் போன புதுப் பெண்டாட்டி! [ஒரு பக்கக் குடும்பக் கதை]

கனமான ‘கதைக்கரு’! ‘super fast' நடை!! இது............... பத்தாயிரத்தில் ஒரு படைப்பு!!! படியுங்கள் தவறாமல்.

கதை:                                                காணாமல் போனவள்

படைத்தவர்:                                  கிருஷ்ணகாந்த்

இதழ்:                                                 குங்குமம்

வெளீயான தேதி:                        செல்லரித்துவிட்டது!




ராஜி.....என் பிரிய ராஜி.....!

ராஜிக்கண்ணு.....!

என் ராஜுக்குட்டீ.....!

எங்கே போய்விட்டாய் நீ?

திருமணமான ஆரேழு வருஷத்தில் எங்கே காணாமல் போனாய்?

உன்னைப் பெண் பார்த்த அனுபவத்தை மறக்க முடியுமா?

முதன் முதலில் என்னை ஏறிட்ட உன் விழிகளில் எத்தனை குளிர்ச்சி!

நீண்ட கூந்தல்; மெல்லிய தேகம்; தெத்துப்பல்; அதில் உனக்கு ஒரு காம்ப்ளெக்ஸ்; ஆனால், அதை எனக்குப் பிடிக்கும்.

தெத்துப்பல் தெரிய நீ சிரிப்பதே என்னை மயக்கும்!

உன் காதோரப் பூனை முடி; கழுத்தோர செம்பட்டை கேசம்; அப்பாவித்தனமான முகம்!

புதிய வீட்டில், எல்லோரையும் பார்த்து மிரண்ட உன் விழிகள்!

ஆஹா...நீ மிரள்வது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

இருட்டில்...தனியறையில்...நீ மிரண்டு புரள்கையில்.....

உன் இடுப்பும், சரேலென்று வழியும் கூந்தலும், முதுகின் செழுமையும்.....அடடா!

பணிவோடும் அன்போடும் நீ எனக்குச் செய்த பணிவிடைகளை மறக்க முடியுமா?

என் ஒரு அதட்டலில் அடங்கிவிடும் உன் பயந்த சுபாவம்!

எழுந்தவுடன் என் கால் தொட்டுக் கும்பிடும் உன் பதிபக்தி!

படித்திருந்தும் ”எனக்கென்னங்க தெரியும்/?” என்று அடக்கத்தோடு பேசும் உன் அருங்குணம்!

கொடுத்து வைத்தவன் நான் என்று மனசுக்குள் பூரித்த என் தலை மேல் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாயே!

அந்த ராஜியை இனி பார்க்கவே முடியாதா?

ஏக்கத்துடன், கையிலிருந்த ’கல்யாண ஆல்பத்தை’ மெதுவாக மூடிவிட்டு நான் நிமிர்ந்த போது.....

எதிரே என் மனைவி!! என் ராஜி!!!

“காலையில கல்யாண ஆல்பத்தோட உட்கார்ந்தாச்சா? அதொண்ணுதான் குறைச்சல்.....க்கும்..... காஸ் தீர்ந்து போச்சு. மண்ணெண்ணை வாங்கிட்டு வரணும். கிரைண்டர் வாங்கிக் குடுங்கோ குடுங்கோன்னு கரடியாக் கத்தறேன். வாங்கித் தரல. உங்க வீட்ல இட்லிக்கு மாவு அரைச்சு அரைச்சே சாகப் போறேன்.....போறேன்.....போய்த் தொலையறேன்!.....அப்புறமாவது எல்லாரும் நிம்மதியா இருங்க..........”

வார்த்தைகளைக் கோபம் என்னும் எண்ணையில் பொரித்துச் சுடச்சுட வீசினாள் ராஜி!

உப்பிய அவளின் உடம்பு அருவருக்கும் வகையில் எசகுபிசகாய் ஆடியது; கோபித்துக் கோபித்தே கோணிய வாய் துடித்தது. சினத்தால் சிறுத்த கண்களில் ஒருவித உக்கிரம். நெறித்து நெறித்தே நிரந்தரமான வளைவில் நின்றுவிட்ட புருவ முடிச்சுகள்.

தெத்துப்பல் , பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

இருட்டில் துழாவுகிற மாதிரி, அவள் முகத்தில், உடம்பில், கண்களில்...இன்னும் எங்கெல்லாமோ தேடினேன்.....

ஊஹூம்.....

ஆரேழு  வருடங்களுக்கு முன்னர் என்னை மணந்த ராஜி முழுசாகக் காணாமல் போயிருந்தாள்!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக