திங்கள், 29 ஏப்ரல், 2013

இது, சுடுகாட்டில் சுட்ட கதை!!! பயப்படாமல் படியுங்கள்.

இறந்துபோன என் நண்பர், முந்தாநாள் எரிக்கப்பட்டார். இன்று ஈமச் சடங்கு. சடங்கு நிகழ்த்த வேண்டிய அவரின் ஒரே மகன், மொட்டை அடித்துக்கொண்டான்; தாடி மழிக்க மறுத்துவிட்டான்! 

“இது ‘காதல் யுகம்’. இதுவும் நடக்கும்...இன்னும் என்னவெல்லாமோ நடக்கும்” என்று பேசிக்கொண்டு போனார்கள் ஈமச்சடங்கில் கலந்துகொண்டவர்கள்!

கதை:                               காதல் யுகம்

“தாடி வளர்க்கிறியே, உடம்பு சுகமில்லையா?” என்று கேட்டான் குமார்.

“இல்ல” என்றான் கீர்த்தி.

“ஸ்டைலுக்கா?”

“இல்ல.”

“வேண்டுதலா?”

“இல்ல.”

“கேட்கிறதுக்கெல்லாம் இல்ல நொள்ளைங்கிற. காரணத்தை சொல்லப் போறியா இல்லையா?” கோபத்தின் எல்லையைத் தீண்டிவிட்டிருந்தான் குமார்.

“சர்மிளாகிட்டப் பல தடவை ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன். அவ மவுனம் சாதிக்கிறா. ’உன் பதில் கிடைச்சப்புறம்தான் தாடி எடுப்பேன்’னு  சொல்லிட்டேன். இன்னிக்கி வரைக்கும் பதில் இல்ல” என்றான் கீர்த்தி, வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால்.

“காதலிக்க வேற பெண்ணா இல்ல. அவளை மறந்துடு.”

“முடியாதுடா.”

து நடந்து சில நாட்களில், கீர்த்தியின் அப்பா மாரடைப்பில் காலமானார்.

சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.

இன்று ’காரியம்’.

”மொட்டை போடணும் , வா கீர்த்தி.” காரியம் செய்பவர் கீர்த்தியை ஒரு மர நிழலுக்கு அழைத்துச் சென்றார்.

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்; “தாடியை எடுக்க வேண்டாம்.”

“எடுக்காம சடங்கு செய்யக் கூடாது.”

“செஞ்சா என்ன?”

கூடியிருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்தான் கீர்த்தி.

வேறு வழியில்லாமல், இறந்துபோன நண்பருக்கு ’மகன் முறை’ ஆகும் ஒருவரை வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.

கீர்த்தி, தாடி மழிக்க மறுத்ததற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

சுடுகாட்டில் குழுமியிருந்த கும்பல் களையத் தொடங்கியபோது, “கலியுகம் முடிஞ்சி போச்சி. இது காதல் யுகம்” என்று அடங்கிய குரலில் ஒருவர் சொன்னார், அருகில் இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக. துக்ககரமான அந்த நேரத்திலும் அவர்கள் ஒப்புக்குச் சிரித்து வைத்தார்கள்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சடங்கில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். வீடு திரும்பிக் குளித்து முடித்தவுடன், நேற்று [ஞாயிறு] எழுதிய கதை இது.]

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக