தேடல்!


Apr 16, 2013

எச்சரிக்கை! இது ஒரு ’மரண மொக்கை’ப் பதிவு! தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம்!!

என் அண்மைப் பதிவொன்றுக்குப் பின்னூட்டம் இட்ட ஒரு 'unknown', என்னைப் பற்றி, ‘ஹிட்ஸ் வெறியன்’ என்று குறிப்பிட்டிருந்தார்! அவரைத் திருப்திபடுத்தவே இந்தப் பதிவு!!

[`0`ஹிட்ஸ் பெற்றுச் சாதனை படைக்கவிருக்கும் பதிவு இது!!!]

கதைத் தலைப்பு:                        உணர்தல்

லட்சோபலட்சம் மக்களால், ‘கடவுள் அவதாரம்’ என்று போற்றப்படும் அந்த மகான், அலங்கரிக்கப்பட்ட அரியணையில் வீற்றிருந்தார்.

அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்தது போல அவரின் முரட்டு சீடர்கள்.

அருளாசி பெறக் காத்திருந்த மக்கள் வெள்ளம் அரங்கில் நிரம்பி வழிந்தது.

மகான் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை; யாருடைய வரவுக்காகவோ காத்திருப்பதுபோல் தெரிந்தது.

மக்கள் வெள்ளத்தை ஊடுருவிக்கொண்டு உள்ளே நுழைந்தான் அந்த மனிதன். பலமுறை வேண்டுகோள் வைத்து, மகானைச் சந்திக்கச் சிறப்பு அனுமதி பெற்றவன் அவன்.

நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை மகானின் திருப்பாதங்களில் விழுந்து எழுந்தான்.

சொன்னான்: “தங்களைப் போன்ற மகான்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். அந்தக் கடவுளை அற்ப ஜீவிகளான என் போன்றவர்களுக்குக் காட்ட முடியுமா?” என்றான்.

“காட்ட முடியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது. ஆறாவது அறிவால் உணர மட்டுமே முடியும்” என்றார் மகான்.

“கடவுளின் ஒரு கூறான ஆன்மாவை...?”

“உணர மட்டுமே முடியும்.”

“கடவுளை உணரத்தான் முடியும் என்கிறீர்கள். தங்களைப் போன்ற மகான்களால்கூடவா பிறருக்கு உணர்த்த முடியாது?”

“யாரும் யாருக்கும் உணர்த்த முடியாது. அவரவர் ஊணர்வது மட்டுமே சாத்தியம்.”

“கடைசியாக ஒரு கேள்வி. தாங்கள் கடவுள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?”

“நிச்சயமாக.”

“தாங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் உணர்ந்து நம்புவது எப்படி மகானே? நம்பினால்தானே தங்களை மகான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றான் அந்த மனிதன் வெகு பவ்வியமாக.

மகானின் வதனம் சிவந்தது; உதடுகள் துடித்தன.

“நீ ஒரு குதர்க்கன்...கசடன்...நாத்திகன்...சாத்தானின் வாரிசு. கடவுள் உன்னைத் தண்டிப்பார்.”

அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, பக்த கோடிகள் அந்த மனிதனின் மீது பாய்ந்தார்கள்.

ஆக்ரோஷமாய்த் தாக்கினார்கள்; ஆடை கிழித்துத் தரையில் தள்ளிப் புரட்டியெடுத்தார்கள்; அவனின் உடம்பெங்கும் வீக்கங்கள்; ரத்தக் காயங்கள்.

“தொலையட்டும்... அவனை உயிர் பிழைத்துப் போக விடுங்கள்” என்றார் மகான்.

பிறந்த மேனியாய்த் தள்ளாடியபடியே வெளியேறினான் அந்த மனிதன்!

##############################################################################################################################

‘மரண மொக்கை’ என்பதற்கு என்னால் விளக்கம் தர இயலாது. அது unknown' க்கு மட்டுமே சாத்தியம்.

###################################################################################