வெள்ளி, 15 ஏப்ரல், 2022

ஒரு குப்பை ஆங்கில நாவலுக்கு இத்தனைக் கோலாகல வரவேற்பா?!?!

'விக்ரம் சேத்' ஆங்கிலத்தில் கவிதைகளும் கதைகளும் எழுதி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், அரசியல், தத்துவம், பொருளாதாரம் எல்லாம் படித்துப் பட்டம் பெற்றவராம்.

இவர் எட்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து எழுதி முடித்த ஒரு நாவலின் பெயர் 'A Suitable Boy' என்பது. 

இந்தப் புதினத்தை வெளியிட்ட'பெங்குவின்' பதிப்பகம் இவருக்குக் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?

"ஆ....." என்று வாயைப் பிளக்காதீர்கள். 

கொடுத்த முன்பணம் மட்டுமே 2.6 கோடி[இதெல்லாம் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு]!

இதன் உரிமை ஏலம் விடப்பட்டதில், அமெரிக்காவில் 6,00,000 டாலருக்கும், இங்கிலாந்தில் கால் மில்லியன் பவுண்டுக்கும் விலைபோனதாம்! 1400 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை அமெரிக்காவில் ரூ900; இங்கிலாந்தில் ரூ1000.

இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால்.....

இந்நூலில் புரட்சிகரமான கருத்து என்று எதுவுமே இல்லை என்கிறார்களாம் புனைகதை விமர்சகர்கள்.

மெஹ்ரா, கபூர், தாண்டன், சட்டர்ஜி முதலான கதைமாந்தர்களின் குடும்ப நிகழ்வுகள் இதில் காட்சிப்படுத்தப்படுகிறது. மெஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்த 'லதா' என்னும் பெண்ணுக்குத் தகுதியான மாப்பிள்ளைப் பையனைத் தேடுவதுதான் இதன் மையச் சரடாக உள்ளதாம்.

ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் பாணியில் கதை சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே கொஞ்சம் பாராட்டுக்குரிய அம்சமாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மேற்கண்ட தகவல்களை எமக்கு['பசி'பரமசிவம்]த் தானமாக வழங்கியவர், 'உலகக் கவிஞர்களின் வாழ்க்கைக் கதைகள்' என்னும் நூலின் ஆசிரியர் 'வான்முகில்' ஆவார்[உலக அளவில் ஆங்கிலம் தெரிந்தவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், ஆங்கில மொழிக் கதைகள் படிப்பதைக் கவுரவமாகக் கருதுவோர் எண்ணிக்கை குறையாமல் இருப்பதும் இம்மாதிரி நாவல்களின் அமோக விற்பனைக்கான காரணங்கள் என்று குறிப்பிடுகிறார் இவர்].

'இந்த நூலில் புரட்சிகரமான கருத்துகளே இல்லை' என்று நூலாசிரியர் சொல்லியிருப்பதைச் சாக்காக வைத்து, 'குப்பை'யைத் தலைப்பில் சேர்த்திருக்கிறேன். 

மற்றபடி, 44 நூல்களின் ஆசிரியனான எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுக்க எந்தவொரு பதிப்பாளரும் முன்வந்ததில்லை என்னும் ஆற்றமையோ,  'விக்ரம் சேத்' மீதான பொறாமையோ காரணம் அல்ல.

ஹி...ஹி... ஹி!!!

==========================================================================