வியாழன், 18 ஏப்ரல், 2013

நான், ‘பசி’பரமசிவம்! இது என் வாழ்வில் நடந்த 100% உண்மைக் கதை!!

நம் பலவீனங்களை நினைத்து வருத்தப்படுகிற நாம், அதே பலவீனங்கள் பிறரிடமும் இருப்பதை அறியும்போது ஆறுதல் அடைகிறோம். இந்த என் சுய அனுபவக் கதை உங்களுக்கு ஆறுதல் தருமா, இல்லை, என்னைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுமா? கதையைப் படியுங்கள்.

கதை:                நாய் கடித்தால்.....

“சேலம் போய் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்க. சொல்லுங்க, என்ன நடந்தது?” என்றாள் என் மனைவி மங்கை.

“எதுவும் நடக்கல. இயல்பாதானே இருக்கேன்.” சிரித்தேன். அது அசட்டுச் சிரிப்பாக வெளிப்பட.....

“முகம், கறுத்துச் சுண்டிப் போயிருக்கு. நாலு நாளா என்கிட்ட சிரிச்சிப் பேசவே இல்ல. எதையோ தீவிரமா யோசிக்கிறீங்க. ஏதோ விபரீதம் நடந்திருக்கு. மறைக்காம சொல்லுங்க.” என் தாடையைப் பற்றி நிமிர்த்திப் பரிவுடன் முன் நெற்றி தடவினாள் மங்கை.

“சொல்றேன். சேலம் போன வேலை முடிஞ்சி, நாமக்கல் வர பஸ் ஸ்டாண்டு போயிட்டிருந்தேன். என் பின்னால பைக்கில் வந்த ஒருத்தன் என் மேல மோதிட்டான்.  கீழே விழுந்தேன். அவன் போதையில் இருந்தான். ’நான் ஓராமாத்தானே நடந்து வந்தேன். கண்ணை மூடிட்டா வண்டி ஓட்டினே?’ன்னு கேட்டேன். ’எடமா இல்ல? இன்னும் ஓரமா போக வேண்டியதுதானே’ன்னான்.”

குறுக்கிட்ட என்னவள், “அவனுக்கு ரொம்பத்தான் திமிர்...கொழுப்பு...” என்றாள் உதடு துடிக்க.

“இடிச்சதும் இல்லாம ரொம்பத் திமிர் பேசுறேன்னு சொன்னேன். ’ஆமா, திமிர்தான் பேசுறேன். என்னடா பண்ணுவே’ன்னு வண்டியை ஸ்டேண்டு போட்டுட்டு வந்தான்.......”

“ஐயோ...அப்புறம்.....”

“கூட்டம் கூடிச்சி. எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. ’என்னடா, ‘டா’ போட்டுப் பேசுறே. மரியாதையாப் பேசு’ன்னேன். ’மரியாதையாவா?’ன்னு நக்கலா கேட்டுட்டு, அசிங்கமா கொச்சை கொச்சையாத் திட்டினான். என்னால, அவனளவுக்குத் தரம் தாழ்ந்து பேச முடியல. பன்றி...நாய்...கழுதைன்னு ஏதோ உளறினேன்.........”

“என்னங்க ஆச்சு? சீக்கிரம் சொல்லி முடிங்க.”

“”வாய்ச் சண்டையோட விவகாரம் முடிஞ்சிடும்னு நம்பி அவனை விட்டு விலகி நடக்க நினைச்சேன். என்னை அவன் போக விடல. சரமாரியா என் நெஞ்சில் குத்தினான். எட்டி உதைச்சான். தரையில் மல்லாக்க விழுந்து உருண்டேன். நான் அடிக்கு அடி கொடுக்கத்தான் ஆசைப்பட்டேன். அதுக்குள்ள ஆயிரம் யோசனை. ரெண்டு பேரும் கட்டிப்புரண்டு, ரத்த காயம் பட்டு, போலீஸ், நீதிமன்றம்னு.....இப்படி மனசுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள அவன் இடத்தைக் காலி பண்ணிட்டுப் போய்ட்டான். ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் நான் கூனிக்குறுகி ஒடுங்கி நின்னேன். அப்புறம் எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன்.”

“தெருவில் திரியற ஒரு சொறி நாய் நம்மைக் கடிச்சுடுது. அதை நாம திருப்பிக் கடிக்கலையேன்னு வருத்தப்படுறோமா? அது அவமானம்னு நினைக்கிறோமா? அது மாதிரிதாங்க இதுவும். ஒரு கனவா நினைச்சி மறந்துடுங்க” என்றாள் மங்கை.

“முடியலையேடா.”

கண் மூடி மவுனத்தில் ஆழ்ந்தேன்.

நாட்கள் சில கழிந்தன.

அன்றைய செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது, ‘பிரபல ரவுடி கைது’ என்று ஒரு செய்தியின் தலைப்பு கண்ணில் பட்டது. ரவுடியின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.

‘தங்கச் சங்கிலி பறிப்பு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கலிவரதன். காவல்துறையால் தேடப்பட்டு வந்த இவன், தான் களவாடிய பைக்கில் போன போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரால் கைது செய்யப்பட்டான். இவன் மூன்று கொலை, ஏழு கொள்ளை, பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவன். இவனால் வெட்டிக் கொல்லப்பட்டவர்களில், காவல்துறை ஆய்வாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.’

மங்கையை அழைத்து, அந்தச் செய்தியைப் படிக்கச் சொன்னேன்.

“ஐயய்யோ.....இன்ஸ்பெக்டரையே வெட்டிக் கொன்னவனா? இவனோடவா நீங்க சண்டை போட்டீங்க?”

“நல்லா ஞாபகம் இருக்கு. இவனோடதான்.”

“பதிலடி கொடுக்கலையேன்னு வருத்தப்பட்டீங்களே. உங்க கை அவன் மேல பட்டிருந்தா உங்களை வெட்டிப் போட்டிருப்பான். நம்ம குல தெய்வம்தான் உங்களைக் காப்பாத்தியிருக்கு.” மாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் என்னவள்.

மனதைக் குத்திப் புண்படுத்திக் கொண்டிருந்த வருத்தமெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

====================================================================================================================





      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக