எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 5 ஜூன், 2025

‘இளிச்சவாயன்’ தமிழனும் ‘இனவெறியன்’ கன்னடனும்!!!

“தமிழே உலகின் மூத்த மொழி”, “உலகாண்டவன் தமிழன்” என்றெல்லாம் வாய் கிழியப் பேசியும் மேடை ஏறி முழங்கியும் தற்பெருமை பேசும் தமிழனுக்கு, ஓர் இனத்தவனுக்குத் தேவையான மொழிப் பற்றோ இனப் பற்றோ இல்லை.

மொழிப்பற்று இருந்திருந்தால்.....

இந்தியை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே, தமிழ் நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களிலும், அஞ்சலகம், ரயில் நிலையம், வங்கி போன்றவற்றிலும் இந்தியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்திருக்கமாட்டான்.

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்றவை[குறிப்பிடத்தக்கவை] குறித்த அறிவை ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழிலும் வளர்க்கத் தவறியிருக்கமாட்டான்.

இவனுக்குப் போதிய இனப்பற்றும் இல்லை.

இருந்திருந்தால்.....

பிற இனத்தவரை[குறிப்பாகக் கன்னடரை> பிற இனத்தவரைக் கொண்டாடியது தவிர்க்கப்படுகிறது] தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும் தவற்றைச் செய்திருக்கமாட்டான்.

எடுத்துக்காட்டாகச் சில நிகழ்வுகள்:

கர்னாடகத்தி ஜெயலலிதா{இவருடைய தாய் சந்தியா[வேதவல்லி] கர்னாடகத்தவர்; கர்னாடக ஜெயசாம்ராஜ உடையாரின்[ஜமீன்].....  குறிப்பிடத்தக்க முக்கியத் தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன] மைசூருவில் மாண்டியா எனும் ஊரில் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. இவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே தந்தையை இழந்தார். அதன் பிறகு பெங்களூரு சென்று பிஷப் காட்டன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் சிறிது காலம் படித்தார். பின்னர் அவரது தாய் வேதவல்லி அவரை சென்னைக்கு அழைத்து வந்தார்; நடிகை ஆனார்[https://yourstory.com/tamil/ammu-to-amma-jayalalithaa-life-journey-tamilnadu]இவரைத் தெய்வத்தாய் என்று போற்றிக் கடவுள் ஆக்கினான் தமிழன்; இன்றும் போற்றி வழிபடுகிறது ஒரு பெரிய மூடர் கூட்டம். 

நடிகர் ரஜினிகாந்த்[இவர் டிசம்பர் 12, 1950இல் பெங்களூருவில் பிறந்தார்[மராத்தி குடும்பம்]. ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். தந்தையின் பெயர் ராணோஜி ராவ்; தாயின் பெயர் ராம்பாய். இவருக்கு, ‘சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் சூட்டி இறும்பூது எய்தினான் தமிழன். இவர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகியிருப்பார். 

நடிகை சரோஜாதேவி[கன்னடத்துப் பைங்கிளி, கைபடாத ரோஜா என்றெல்லாம் இவருக்குச் செல்லப் பெயர்கள் சூட்டிக் கொஞ்சி மகிழ்ந்து புளகாங்கிதப்பட்டான் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது]: இவர் ஆசைப்பட்டிருந்தாலும் தமிழர் தலைவியாகித் தமிழ்நாட்டை ஆண்டிருக்கலாம்.

மேற்கண்டவர்களோடு, கன்னடர்களான நடிகர் பிரகாஷ்ராஜ், முரளி, பிரபுதேவா, சைந்தர்யா, சுமன் ரங்கநாதன், வித்யா பாலா போன்றவர்களையும் திரைப்படத் துறையில் பிரபலமாக்கியவன் தமிழன்.

இவர்கள் அனைவருக்கும் மேலாக.....

‘ஈவெரா’[ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் மகன் ராமசாமி நாயக்கர்] கன்னடர் ஆயினும், ஆகச் சிறந்த பகுத்தறிவாளரான[குறிப்பாக மூடநம்பிக்கைகளைக் களைய அரும்பாடுபட்டவர்] இவரைப் பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றுவதோடு, 'தந்தை’ என்று சொல்லிப் பெருமைப்படுகிறவன் தமிழன்.

தமிழனின் இம்மாதிரியான உயர் குணங்களைப் பாராட்டி நன்றி செலுத்தும் நல்ல பண்பு கன்னடனுக்கு இல்லை.

இல்லாதது மட்டுமல்ல, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழன் மீது வெறுப்பைக் கக்குகிறான்[தமிழ்நாட்டில் கன்னடர்கள் வாழ்கிறார்கள் என்பதை மறந்து]. 

தமிழனை மிரட்டியும்  ஓட ஓட விரட்டியும் கர்னாடகாவிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறான்[‘1971இல் தமிழருக்கு எதிரான போராட்டம்’ போல் பல உதாரணங்கள் தரலாம்). தமிழன் பதிலடி தராததை எண்ணிப்பார்க்கும் மனப் பக்குவம் அவனுக்கு இல்லை.

அண்மை நிகழ்வுக்கு வருவோம்.

மொழி என்பது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு கருவி மட்டுமே[தாய் என்றும் தெய்வம் என்றும் உருவகித்து வணங்குவது அடி முட்டாள்தனம். ஆனாலும், மொழியின் கட்டமைப்பு குறித்தும், அதன் பழைமை குறித்தும் பயன்பாடு குறித்தும் பெருமைகொள்வதில் தவறில்லை.

பிற மொழி மீது ஆதிக்கம் செலுத்தவோ அதைச் சீர்குலைக்கவோ நம் மொழியை அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கது; எதிர்த்துப் போராடுவதற்குரியது[இந்தியை நாம் எதிர்ப்பது இக்காரணத்தால்தான்].

இதை நினைவில்கொண்டு, கமல்ஹாசன் அவர்கள் “தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்” என்று சொன்னது குறித்துச் சற்றே சிந்திக்கலாம்.

தமிழ் தமிழருக்கான ஒரு கருவி. கன்னடம் கன்னடர்களுக்கான கருவி.

தமிழ் என்னும் கருவியிலிருந்து கன்னடம் என்னும் கருவி பிறந்தது[உருவானது] என்று சொல்வது[தவறான கருத்தாக இருப்பினும்] எவ்வகையிலேனும் கன்னடத்துக்கோ கன்னடர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

இதன் மூலம் கன்னடத்தின் மீது தமிழ் ஆதிக்கம் செலுத்த முடியுமா? அதன் வளர்ச்சியைத் தடுப்பது சாத்தியமா?

இப்படிச் சொன்னது கன்னடர்களை எவ்வகையிலேனும் இழிவுபடுத்துகிறதா? 

கன்னடத்திலிருந்துதான் தமிழ் பிறந்தது என்று கன்னடன் உலகறிய முழங்கலாமே, தமிழனால் தடுக்க இயலுமா?

மேற்கண்டவற்றிற்கான “இல்லை” என்னும் பதில்கள் கர்னாடகத்தை ஆளும் தலைவர்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கும், கமலை மன்னிப்புக் கேட்கச் சொன்ன நீதிபதிக்கும் தெரியும்.

தெரிந்திருந்தும்.....

இவர்களெல்லாம் கமல்காசனை எதிர்ப்பது என்னும் பெயரில் கன்னடன் நடத்தும் போராட்டத்தை உக்குவிப்பதன் உள்நோக்கம் அவர்களுக்குத் தமிழன் மீதான காழ்ப்புணர்ச்சிதான்.