'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Wednesday, June 21, 2017

காக்கும் கடவுள் விஷ்ணுவா, கர்னாடகக் காவலரா? சிலை யாருக்கு?!

இன்றைய நாளிதழில்[‘தி இந்து’ 21.06.2017]  இருவேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்று இன்புறுத்தியது. மற்றொன்று துன்புறுத்தியது!

#பெங்களூர் சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 17ஆம் தேதி திட்டமிடப்பட்ட தம் பணியை முடித்துக்கொண்டு, பாதுகாப்பு வாகனத்தில் ராஜ்பவன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனங்கள் டிரினிட்டி சதுக்கம் அருகே வந்தன. அதே நேரத்தில், எதிர்த் திசையில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தன் பயணத்தைத் தொடர இயலாமல் திணறி நின்றது.

இதைக் கவனித்த, டிரினிட்டி சதுக்கப் போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் நிஜலிங்கப்பா, நிற்காமல் வந்துகொண்டிருந்த பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்வதற்கு முதலில் வழி ஏற்படுத்தினார். முகர்ஜியின் பாதுகாப்பு வாகனங்களைக் கடந்து சென்றது ஆம்புலன்ஸ்# - இது ஒரு செய்தி.
மற்றொரு செய்தி:
#கர்னாடக மாநிலம் பெங்களூரு தெற்கு, ஈஜிபுரா பகுதியில் கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், 64 அடி உயரத்தில் விஸ்வரூப மகா விஷ்ணு சிலை[பீடத்தைச் சேர்த்து 108 அடி உயரம்] நிறுவுவதற்குக் கோயிலின் அறக்கட்டளை முடிவெடுத்திருந்தது.

இந்தச் சிலைக்காக, வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் பாறையை வெட்டி எடுத்து 400 டன் எடையில் 64 அடி உயரத்தில் விஷ்ணுவின் சிலை செதுக்கப்பட்டுள்ளது[விஷ்ணுவின் முகம், சங்கு சக்கரம் மற்றும் கைகள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன. சிலை, பெங்களூரு கொண்டுசெல்லப்பட்ட பிறகு எஞ்சிய பகுதிகள் செதுக்கப்படும்]. கூடவே, 24 அடி உயரத்தில் ஆதிசேஷன்{7 தலைப் பாம்பு} சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது#
இந்தப் பிரமாண்ட சிலைக்கான கல் செயற்கைக்கோள் மூலம் தேடப்பட்டதாம். பல நாட்கள் தேடித் தேடித் தேடி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாம்.

மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று, கற்களை வெட்டி எடுத்துச் சிலையை வடிவமைக்கும் பணி 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாம்.

அடுத்து வரும் செய்தி வெகு வெகு வெகு சுவாரசியம்.

#சிலைகள், 170 மற்றும் 96 டயர்களைக் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் வந்தவாசி, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு கொண்டுசெல்லப்படும்.

அதிக பாரம் கொண்ட கார்கோ வாகனங்கள் செல்வதற்கான அனுமதியை மத்திய மாநில அரசுகளிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் பெற்றுள்ளனர். செல்லும் வழியிலுள்ள பாலங்களின் உறுதித்தன்மையை வல்லுனர்கள் ஆய்வு செய்துள்ளனர். பாலங்களுக்கு அடியில் கூடுதல் ஜாக்கிகள் பொருத்தப்பட உள்ளன. மணல் மூட்டைகளை அடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது#

காக்கும் கடவுள் எனப்படும் விஷ்ணுபகவான் பற்றிக் கொஞ்சமும் வஞ்சனையில்லாமல் வகை வகையான ஆபாசக் கதைகளை அருளிச் சென்றிருக்கிறார்கள் நம் மூதாதையர்கள். கதைகளை அடிப்படையாகக்கொண்டு நாடெங்கும் நிறுவப்பட்டுள்ள சிலைகளுக்கும் பஞ்சமில்லை.

இப்போது, 108 அடி உயரத்தில் 400 டன் எடையில் பெங்களூருவில் விஷ்ணு பகவானுக்குப் பிரமாண்ட சிலை!

இருக்கிற சிலைகள் போதாவா? இருக்கிற மூடநம்பிக்கைகள் போதவில்லையா?

இந்த அநாவசிய வெற்றுப் பணி[?]க்கு அறிவியல் தொழில்நுட்ப உதவி வேறு!  மத்திய மாநில அரசுகளின் பேராதரவு வேறு.

கேள்வி கேட்பார் இல்லையா?

கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களா விஷ்ணு[கடவுள்] பக்தர்கள்!

இனியேனும் ஆபாசக் கடவுள்களுக்குச் சிலைகள் நிறுவுவதைத் தடுத்தி நிறுத்தி, மனித நேயத்தின் உச்சத்தைத் தொட்ட நிஜலிங்கப்பா[இவர், குடியரசுத் தலைவருக்குப் பதிலாகக் கடவுளே வந்திருந்தாலும் தடுத்து நிறுத்தியிருப்பார். இந்தத் துணிச்சலான செயலுக்கு இவரைத் தூண்டியதே கடவுள்தான் என்று எவரும் குரல் எழுப்ப வேண்டாம்] போன்றவர்களுக்குச்  சிலைகள் நிறுவினால் மக்கள் மனங்களில் மனிதநேயம் வளரும்.

நாடெங்கிலும் உள்ள நற்சிந்தனையாளர்களும் மனிதநேயம் மிக்கவர்களும் ஒருங்கிணைந்து துணிந்து போற்றுதற்குரிய  இம்மாதிரிப் பணிகளை மேற்கொள்ளுதல் உடனடித் தேவை.

செய்வார்களா? மக்களின் ஆதரவு கிடைக்குமா?
===============================================================================

16 comments :

 1. லிங்கப்பாதான் கண்கண்ட கடவுள்

  ReplyDelete
  Replies
  1. ஆறறிவு மனிதர்கள் அத்தனைபேரும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை.

   பதிவு இணைக்கப்பட்டவுடன் கருத்தைப் பதிவு செய்த ராஜிக்கு என் நன்றி.

   Delete
 2. நிஜலிங்கப்பாவுக்கு பெரியதொரு சல்யூட்..!

  விஷ்ணு சிலை......:( :(

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி.

   நன்றி றஜீவன்.

   Delete
 3. இலங்கையிலும் இதுபோல மூலைக்கு மூலை, முழத்துக்கு முழம் புத்தர் சிலைகளை நிறுவி பல்லாயிரம் கோடிகளை அதில் முடக்குகிறார்கள்.

  அங்கு சாப்பிட வழியின்றித் தவிக்கும் மக்களை கவனிக்க ஆள் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. புத்தன் நல்ல சிந்தனையாளன்.

   புத்த மதத்தைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் வெறியர்கள் இவர்கள்.

   நன்றி...நன்றி றஜீவன்.

   Delete
 4. நிஜலிங்கப்பா இவர் பாராட்டப்படக்கூடியவர்.

  நண்பரே நேற்றுதான் சிலைகளைக்குறித்து எனக்கும் ஒருவனுக்கும் வாதம் நித்தியானந்தாவையே அவன் கடவுள் என்று சொல்கிறான் என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கப்போக கடைசியில் என்னை முட்டாள் என்று சொல்லி விட்டான் அந்த அறிவாளி

  என்ன செய்வது அர்த்தமற்றவனிடம் வாதம் செய்தால் இப்படித்தான் இந்தவகை மனிதர் நாட்டில் நிரம்பி வழிகின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. முட்டாள்களைப் புறக்கணித்துவிடலாம். அவர்களுக்கு ஆதரவு தருகிற ஆட்சியாளர்களை என்ன செய்வது?!

   நன்றி கில்லர்ஜி.

   Delete
 5. நிஜலிங்கப்பா மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டார்களே என்று சந்தோஷப் படலாம் :)

  ReplyDelete
  Replies
  1. இனி எடுத்தாலும் எடுப்பார்கள்.

   நன்றி பகவான்ஜி.

   Delete
 6. //இந்தப் பிரமாண்ட சிலைக்கான கல் செயற்கைக்கோள் மூலம் தேடப்பட்டதாம்///
  ஆவ்வ்வ்வ்வ்வ் உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கு.. ஆனாலும் பழைய நம்பிக்கைகளைக் கைவிடுவதாய் இல்லை மக்கள்... எல்லாம் போட்டிதான் கரணம்:)

  ReplyDelete
  Replies
  1. பழைய மூடநம்பிக்கைகளைப் பாதுகாக்கப் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். தடுப்பாரில்லை.

   நன்றி அதிரா.

   Delete
 7. உங்கள் போஸ்ட் மூலம் நிறைய விசயங்கள் தெரிஞ்சுகொண்டேன்ன்.. அதுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. குறைகள் கண்டாலும் தவறாமல் சுட்டிக் காட்டாலாம். தவறே இல்லை.

   நன்றி.

   Delete
 8. லிங்கப்பா போற்றுதலுக்கு உரியவர்
  திருநள்ளாறு சனீசுவர பகவான் கோயிலுக்கு மேல் பறக்கும் பொழுது செயற்கைகோள்கள் கூட சிறிது நேரம் தடுமாறித்தான் செல்கின்றன என்று கூறி பரவசப்படும் மூட நம்பிக்கைக்கு உரியவரகள் அல்லவா நாம்

  ReplyDelete
  Replies
  1. அஞ்சாமல் பொய் சொல்கிறார்கள். பொய் பரப்ப ஊடகங்கள் காத்திருக்கின்றன.

   நன்றி ஜெயக்குமார்.

   Delete