70 வயசாச்சு. இதுநாள் வரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குன்னு இந்த ஆளு ஒரு துரும்பைக்கூட அசைச்சதில்லை. வரப்போற தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகி எல்லார்த்தையும் மாத்தப்போறாராம்.
வெற்றி பெற முடியாதுன்னு இவருக்கு நல்லாவே தெரியும்.
அண்ணன் சத்தியநாராயணாவைத் திருவண்ணாமலைக்கு அனுப்பி, அருணகிரி நாதர் கோயிலில், 'மிருத்யுஞ்சய யாகம்'[கதை கீழே] நடத்தியிருக்காரு நடிகர்.
இதன் மூலம் அளப்பரிய ஆற்றல் கிடைக்குமாம். அனைத்துத் தடைகளையும் தகர்த்து, எதிரிகளை வென்று நினைத்ததைச் சாதிக்கலாமாம்.
ஆமாம், வரவிருக்கும் தேர்தலில் சாதனை நிகழ்த்தி, அரியணை ஏறும் கனவை நனவாக்க இந்த மிருத்யுஞ்சய யாகத்தை நடத்தி முடிச்சிட்டார் 'உச்சம்'.
நடிகர் வெற்றி பெறுவதற்காக மட்டும் இது நடத்தப்படவில்லையாம். நம்மைப் போன்றவர்கள் நல்லா இருக்கவும், ஒட்டுமொத்த உலகின் நன்மைக்காகவும் இது நடத்தப்பட்டதாம். சொன்னவர் நடிகரின் சகோதரர்.
"ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதால்கூட யாகம் நடத்தப்பட்டதாக வைத்து கொள்ளலாம். அவரும் நல்லா இருக்கனும், நீங்களும் நல்லா இருக்கனும்[அடடா, இவருக்குத்தான் எத்தனை நல்ல மனசு. இவரே முதலமைச்சர் ஆவதுகூட நல்லதுதானோ?]. ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். யாருக்கு எந்தப் பதவி கொடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்[எல்லாம் அந்த ஆண்டவன் சொல்வார்]" என்கிறார் சத்தியநாராயணா[எல்லாரும் நல்லா இருக்க இதுவரைக்கும் எத்தனை தடவை இந்த யாகத்தை நடத்தியிருக்கிறது இந்தக் கும்பல்?].
"திராவிடக் கட்சிகளுக்குக் கடைசிக் காலம் வந்துவிட்டது. யாரும் அவர்களை நம்பவில்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள்; ரொம்ப நாள் இருக்க மாட்டார்கள். எல்லா மதத்தினரும் ஒன்றுதான். எல்லா மக்களும் ஒன்றுதான். நல்லது செய்தால் நல்லதே நடக்கும். எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். பகவான் விரும்பினால் திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் போட்டியிடுவார்"[பகவான் ஏற்கனவே நடிகர் கனவில் சொல்லிட்டார்!] என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கார் இந்தச் சத்தியக்கீர்த்தி.
இந்த உத்தமபுத்திரன் சொல்லிட்டாரில்லையா, இனி, கடவுள் இல்லைன்னு சொல்லுற அத்தனை பேரும் ரொம்ப நாள் இருக்க மாட்டாங்க. அதாவது மேலுலகம் போய்ச் சேர்ந்துடுவாங்க.
கட்சிக்கு இன்னும் பெயர்கூட வைக்கல[பகவான் நடிகரின் கனவிலோ அசரீரியாகவோ சொல்லுவார்]. அதுக்குள்ள இத்தனை அலப்பறையா?!
புராணக்கதை:
மிருத்யு என்பது காலதேவனாகிய, யமனைக் குறிக்கும். சிவபெருமான், தனது பக்தனை[மார்க்கண்டேயன்]க் காக்க இந்த மரண தேவனை[இவரைப் படைச்சது யாராம்?] வென்றதால், அவர் மிருத்யுஞ்ஜயர் என போற்றப்படுகிறார். காலனை வென்ற சிவனைக் குறித்துச் செய்யப்படும் ஹோமம்[யாகம்?] மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகும்.
'மகா மிருத்யுஞ்ஜய மந்திரம், ம்ருத சஞ்சீவனி ஸூக்தம், இந்த்ராக்ஷீ சிவ கவசம் போன்ற சக்தி வாய்ந்த மந்திரங்களின் உச்சாடணத்துடன் செய்யப்படும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சிவபெருமானின் அருளாசி பெறுவதற்காக நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாட்டின் மூலம், மரண பயம் அகலும், மோட்சம் அடைய வழி பிறக்கும். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீகக் சக்திகள், நமது ஒவ்வொரு அணுவிலும் கலந்து, நம் மனதிலும், நம்மைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்குகிறது.'
இப்படிச் சொல்லிச் சொல்லியே இப்போதும் நம்மவரை மூடர்கள் ஆக்கிக்கொண்டிருக்கும் இவர்கள் மகா மகாபுத்திசாலிகள்தான்.
===============================================================