வியாழன், 10 டிசம்பர், 2020

இவர்கள் ஞானிகளா, கோமாளிகளா?!

ஞானிகள்[எனப்படுவோர்] குறித்த நடுநிலையான ஆய்வு நூல்களைப் படிக்கும் வழக்கம் நம் மக்களில் பெரும்பாலோரிடம் இல்லை. கேள்வியறிவின் வாயிலாக, அவர்களை மதிக்கக் கற்றிருக்கிறார்கள்.

எப்போதோ எவரோ எழுதி வைத்த அதீதக் கற்பனைக் கதைகளால், இந்த ஞானிகள் கேலிக்குரிய கோமாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். இந்த உண்மையை அறிந்தோ அறியாமலோ ஆன்மிகவாதிகள் சிலர் வாய்ப்பு நேரும்போதெல்லாம் இவற்றைப் பரப்புரை செய்கிறார்கள். 

தினமணி, தீபம் போன்ற இதழ்களில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவரும், 250க்கும் மேலான சிறுகதைகளை எழுதியவருமான திருப்பூர் கிருஷ்ணன் என்னும் எழுத்தாளரும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர்.

2011ஆம் ஆண்டில், கோவையில் அவர் ஆற்றியதொரு ஆன்மிகச் சொற்பொழிவில் இடம்பெற்றிருந்த இம்மாதிரிக் கதைகள் சில இங்கே பதிவு செய்யப்படுகின்றன.

தொடர்புடைய ஞானிகள் மீதான மதிப்பை மட்டுமல்லாது, தரமான எழுத்தாளர் என்று பெயர் பெற்ற திருப்பூர் கிருஷ்ணனின் மதிப்பையும் வெகுவாகப் பாதிக்கின்றன இக்கதைகள்.

*அறுபத்து நாலுவித சாதனைகளில் தோய்ந்திருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், அனுமத் உபாசனைக்காக மரத்திலேயே பலகாலம் தவமிருந்து வாழ்ந்தார். குரங்குகள் போலவே மரத்திலேயே தேங்காய் உண்டார். உபாசனையை முடித்து, மரத்திலிருந்து கீழே வந்தபோது, அவருடைய முதுகுத் தண்டு வால்போல் தொங்கிவிட்டது. சில நாட்கள் கழித்தே முதுகுத் தண்டு சாதாரண நிலைக்குத் திரும்பியது. இவ்வாறு பக்தியில் பரிபூரணமாக ஒன்றிப்போகும் பக்குவ நிலையை அடைந்துவிடும் பரமஹம்சர், காளி கோயிலில் அர்ச்சனை செய்து வாழ்ந்து வந்தார். 

வெறும் கற்சிலையாக இல்லாமல், காளியை உயிர்த் துடிப்போடு கண்டவர் பரமஹம்சர். நிவேதனங்களைக் காளிக்கு அவர் ஊட்டிவிட, காளியும் உண்டு[!!!!!] மகிழ்வாள். கங்கையில் குளித்த மகா காளி, கோவில் கோபுரத்தின் மேல், தன் கூந்தலை உலர்த்தி, முடியைச் சீவுவதை[!!!!!] நேரில் கண்டார் இவர். வள்ளல் மதுர்பாபு என்பவர், பரமஹம்சர் நடந்து செல்லும்போது காளியாகவும், திரும்பி நடந்து வரும்போது பரமசிவனாகவும் காட்சியளித்ததைக் கண்டு நெகிழ்ந்து தன் வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்!

*வள்ளலார், திருவொற்றியூரில் குடிகொண்டுள்ள வடிவுடை அம்மனை நேரில் காணத் தவமிருந்தார். மிகச் சிறுவயதிலேயே இறை நாட்டம் கொண்ட வள்ளலார், ஒருநாள், இரவெல்லாம் ஆலயத்தில் அம்மன் சந்நிதியில் தியானத்தில் இருந்து, நடு இரவுக்குப் பின் வீட்டுக்குவந்து, அன்னை ஸ்தானத்தில் தன்னை வளர்க்கும் அன்பு அண்ணியைத் தொந்தரவு செய்யலாகாது என்று வாசல் திண்ணையிலேயே பசியோடு படுத்துறங்கினார். அந்த நடுநிசியில் ஜொலிக்கும் முகத்தோடு, அன்பு நிறைந்து, அண்ணியின் உருவில் வடிவுடை அம்மன் வந்து, வள்ளலாரை எழுப்பி, தாயாகவே மாறி பசியைப் போக்கினாள்[எதை ஊட்டிப் பசியைப் போக்கினார்? இப்படி எத்தனை எத்தனை ஏழைகளுக்கு உதவினார்?]. மறுநாள் தனக்குக் காட்சியளித்தது அண்ணியல்ல, அம்பிகை எனத் தெரிந்து கொள்கிறார் வள்ளலார்.

*அரவிந்தர், நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டபோது, சிறையிலடைக்கப்பட்டார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட அரவிந்தர் சிறையிலிருந்த ஓராண்டுக் காலமும், கிருஷ்ண பகவானைத் தியானம் செய்தவாறே இருந்தார். சிறையில் கைதிகளுக்குத் தலையில் தடவிக் கொள்ளத் தேங்காய் எண்ணெய் கொடுக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் அரவிந்தரின் தலைமுடிகள் எண்ணெய் தடவிப் பளபளவென்றிருக்கும். இதுபற்றி அரவிந்தரிடம் கேட்டபோது, தனது தியான சக்தியின் பலனாய், இயற்கையிலேயே, காற்றிலிருந்து தேவையானவற்றைத் தன் உடல் பெற்றுக்கொண்டுவிடும் எனக் கூறினார்[தன் தியான சக்தியால் யார் யாருக்கு எதை எதையெல்லாம் பெற்றுத் தந்து உதவினார் இந்த மகான்?]. இந்த அரிய செய்தியை அவருடனிருந்த பண்டித உபேந்திர நாத் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் தியானத்திலிருந்த அரவிந்தருக்கு, கண்ணன் புல்லாங்குழலோடு காட்சியளித்தார்[மற்ற கைதிகளுக்கும் காட்சியளிக்கச் செய்திருந்தால் அவர்கள் மனம் திருந்தி வாழ்ந்திருப்பார்களே?! ஏன் செய்யவில்லை?] தரிசனம் தந்ததோடு மட்டுமில்லாமல், சிறையிலேயே அரவிந்தருக்குக் கீதையும் போதித்தார். பகவான் கிருஷ்ணர். போர்முனையில் அர்ச்சுனனுக்குக் கீதையை விளக்கிய கண்ணன், சிறையில் அரவிந்தருக்கு கீதையைப் போதித்தார். இந்தச் செய்தியை, அரவிந்தர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.*

ஆன்மிகவாதிகளே,

இனியேனும், உங்களின் போற்றுதலுக்குரிய ஞானிகளைப் பகுத்தறிவுக் கண்கொண்டு பாருங்கள்; பக்தர்களுக்கும் அவ்வாறு பார்க்கக் கற்றுக்கொடுங்கள்.

நன்றி.

===============================================================

இருப்பிலிருந்த குறிப்புரைகொண்டு தயாரித்தது இப்பதிவு.