அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 9 டிசம்பர், 2020

"தாய்மொழியில் கற்பதே சிறந்தது" -காரக்பூர் ஐ.ஐ.டி[I.I.T.] இயக்குநர்!


"அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளெல்லாம், மருத்துவம், தொழில்நுட்பம் முதலானவை தொடர்பான கல்வியைத் தத்தம் தாய்மொழி வாயிலாகவே கற்பிக்கின்றன. நாமும் அவைகளைப் பின்பற்றுவோம்[உலக அளவிலான தொர்புகளுக்கு ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்கலாம்] என்று மிகப் பல ஆண்டுகளாகவே கல்வியியலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

"தமிழில் அறிவியல் கற்பதற்கான நூல்கள் இல்லை."

"தமிழில் படித்தால் தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்காது; உலகெங்கும் வேலை தேடிச் செல்ல இயலாது."

இப்படி இன்னும் பல காரணங்களைச் சொல்லிச் சொல்லி, உயர் கல்வித்துறையில் தழிழைப் பயன்படுத்தும் நோக்கத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் பெரும்பாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான்.

தமிழ்நாட்டில் அன்று முதல் இன்றுவரை, மருத்துவக் கல்லூரிகளிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களில் பெரும்பாலோர் தமிழ் அறிந்தவர்களே. அவர்களுக்கெல்லாம் மதிப்பு மிக்க ஊக்கத்தொகை வழங்கி செயல்பட வைத்திருந்தால் தேவையான நூல்களை மொழியாக்கம் செய்திருக்கலாம்[தூய தமிழில் மொழியாக்கம் செய்வது கட்டாயமில்லை. காலப்போக்கில், திருந்திய பதிப்புகளை வெளியிடும்போது ஆங்கிலக் கலப்பைக் குறைத்திட முடியும்].

தமிழில் படிப்போருக்கான வேலை வாய்ப்புகளைச் சட்டவியல் அறிஞர்களின் உதவியுடன் இயன்றவரை அதிகரித்திருக்க வேண்டும்[அண்மைக் காலத்தில்தான் ஆட்சியாளர்கள் சற்றே விழிப்படைந்திருக்கிறார்கள்].

அறிவியல் துறை, தொழில்நுட்பத் துறை ஆகியவை பற்றிய நூல்களை விரைந்து மொழியாக்கம் செய்யும் செயல்பாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இத்தகையதொரு சுணக்கமான சூழலில், ஆட்சியாளர்களுக்கும், தாய்மொழியை அலட்சியப்படுத்தும் பெற்றோர்களுக்கும் சொரணையூட்டும் வகையிலானதொரு செய்தி ஊடகம் ஒன்றில்[https://www.hindutamil.in/news/vetrikodi/news/606826-regional-language-policy-needed-in-technical-education-iit-kharagpur-director.htm] வெளியாகியுள்ளது].

*பள்ளிகளில் மட்டுமல்லாது கல்லூரிகளிலும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழிக் கொள்கை அவசியம் என்று ஐஐடி காரக்பூர் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஐஐடி காரக்பூர் இயக்குநரும், பேராசிரியருமான திவாரி, ''தொழில்நுட்பக் கல்வியில் தாய்மொழியைப் பின்பற்றுவது அவசியமான இலக்கு ஆகும். பள்ளிகளில் மட்டுமல்லாது கல்லூரிகளிலும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழிக் கொள்கை அவசியம். இதன்மூலம் கற்றலுக்கு மொழி தடையாக அமைவது தவிர்க்கப்படும்.

இதற்கு முதலில் பிராந்திய மொழியில் பாடம் கற்பிக்கும் வல்லமை வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம். அதேபோல பாடப்புத்தகங்கள், மேற்கோள் நூல்கள் ஆகியவையும் பிராந்திய மொழியில் கிடைக்கவேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் ஆடியோ மொழிமாற்றியையும் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.

சிறுவயதில் இருந்து நாம் சிந்தித்த மொழியில் படிக்கும்போது மனித மூளை இன்னும் வேகமாகச் செயல்படும். ஆங்கிலத்தைப் புகுத்தும்போது கற்றல் செயல்முறை தாமதமாகும்.

இதை ஆய்வகங்களில், செயல்முறை வகுப்புகளின்போது எளிதாக உணர்ந்துகொள்ளலாம். ஆய்வக ஊழியர்கள், மாணவர்களின் மொழியில் உரையாடும்போது அவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவுமுறை எளிதில் வளர்கிறது'' என்று திவாரி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் கல்வி முறைமாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை அறிமுகம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். இதற்காகச் சில ஐஐடி, என்ஐடி உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*

இனியேனும் நம் மக்களின் மனங்களில் 'உண்மையான' தமிழ்மொழிப் பற்று முகிழ்க்குமா?! ஆட்சியாளர்கள் தம் பொறுப்புணர்ந்து செயல்படுவார்களா?! 

===============================================================