ஒருவன் மீது மற்றொருவன் தாக்குதல் நடத்தி, அவனின் உடலுறுப்பை முடமாக்குவது குற்றம். குற்றத்திற்கு அரசியல் சட்டப்படி தண்டனை வழங்குவது நடைமுறையில் உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை.
உடலுறுப்பைச் சிதைப்பது போலவே, மூடநம்பிக்கைகளைத் திணித்துச் சிந்திக்கப் பயன்படும் அறிவைச் செயலற்றதாக்கும் அட்டூழியமும் இவ்வுலகில் காலங்காலமாக நடைபெறுகிறது.
இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரலாம்.
இப்போதைக்கு ஓர் அண்மை நிகழ்வு மட்டும்[காணொலி காண்க].
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3, 2026 தேதியன்று மூடப்படுகிறது.
இது எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்.
ஏழுமலையான் என்னும் கடவுளைக் கற்பித்து, வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்று பொய்யான பரப்புரைகள் செய்து, அவரைக் கோடீஸ்வரக் கடவுள் ஆக்கிய சூழ்ச்சிக்காரர்களிடம் நாம் கேட்பது.....
அண்டசராசரத்தையும் அதிலுள்ள அத்தனைக் கோள்களையும் நட்சத்திரங்களையும் படைத்து இயக்குபவர் கடவுள்[இப்போதைக்கு ஏழுமலையானாகவே இருக்கட்டும்].
அவற்றுள் சந்திரனும் ஒன்று[சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனை அடையாமல் பூமி தடுப்பதால், பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து, சந்திரனை இருட்டடிப்பு செய்யும் ஒரு வானியல் நிகழ்வாகும்.மேலும், பூமியின் வளிமண்டலத்தால் சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் சந்திரனை அடைவதால் சந்திரன் சிவப்பாகத் தோன்றும்].
இது நிகழ்வதும்[சந்திர கிரகணம்] ஏழுமலையானின் ஆணைப்படிதான்.
சந்திரனைப் படைத்தவனும் அவனே. சந்திர கிரகணம் நிகழக் காரணமானவனும் அவனே.
அந்த அவனை, கிரகணம் நிகழும் பௌர்ணமி நாளில் பக்தர்கள் தரிசிக்கக் கூடாது என்று கோயிலை[திருப்பதி] இழுத்து மூடுவது முட்டாள்தனத்தின் உச்சம் அல்லவா? பக்தன் பாதிக்கப்படுவதை அல்லது, தண்டிக்கப்படுவதை ஏழுமலையான் வேடிக்கை பார்ப்பாரா?
இம்மாதிரியான நடைமுறைகளை உருவாக்கி, அவற்றை மக்கள் மீது திணித்தவர்கள்/திணிப்பவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள்.
திணிப்பவர்கள் மட்டுமல்ல, திணிப்புக்குப் பக்கப் பலமாக இருப்பவர்களும் தண்டனைக்குரியவர்கள்தான்.
தண்டனை வழங்கும் அதிகாரம் படைத்தவர்கள் மக்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் மூடர்களாக இருப்பதையே விரும்புபவர்கள். எனவே, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது இப்போதைக்கு இல்லை.
போதிய ஆதரவாளர்களுடன், ஒரு பகுத்தறிவாளன் சர்வாதிகாரி ஆகி இந்த நாட்டை ஆண்டால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.
