வியாழன், 1 ஏப்ரல், 2021

'விந்து தானம்' குறித்த 'விந்தை'ச் செய்திகள்!!!

வேறு வேறு தளங்களிலிருந்து திரட்டிய, 'விந்தணு தானம்' பற்றிய தகவல்களின் தொகுப்பு இப்பதிவு.

*விந்து தானம் அல்லது விந்துக் கொடை (Sperm donation) என்பது ஆண் தன் மனைவியல்லாத பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யத் தன் விந்தைத் தானம் தருவதாகும். இந்த விந்துவினால் பிறக்கும் குழந்தைக்கு 'விந்து'வை அளித்தவர்தான் தந்தை என்றாலும், சட்டப்படியும் பிற சடங்குகளின்படியும் கருத்தரித்த பெண்ணின் கணவரே அக்குழந்தைக்குத் தந்தையாகக் கருதப்படுவார். 

*விந்தணு தானம் (Semen / Sperm Donation) என்பது உலகளவில் அதிகரித்து வருவது, 'ஆண்மைக் குறைபாடு' உள்ள ஆண்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.  

*'விந்து என்பது இந்தத் தொழிலில் கருப்பொருளாக அல்லது மூலப்பொருளாக இருந்தாலும், இன்றையக் காலகட்டத்தில் தேவை அதிகரித்திருப்பது போல, வழங்குதலும் அதிகரித்து விட்டது' 

*இது சில நாடுகளில் சாதாரணமான ஒரு நிகழ்வாக ஆகிவிட்டது. சில நாடுகளில் மிக அரிதான ஒரு நிகழ்வாக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்படாத குற்றச் செயலாகக் கருதப்படுவதும் உண்டு.

*செயற்கைக் கருத்தரிப்புச் செய்யும் மையங்களே விந்து வங்கிகளையும் தம் வசம் வைத்துள்ளன. பெரிய பெரிய நகரங்கள் என்றில்லாமல், சிறிய நகரங்களிலும் இவ்வகை மையங்கள் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. 

*விந்தணு தானம் செய்ய உரிய முறையில் 'பதிவு' செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் விந்தணு தானம் செய்வதும், அதன் மூலம் குழந்தை பெறுவதும் குற்றச் செயல்கள் ஆகும். 

*இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் ஆண், தனது மனைவிக்குத் தெரியாமல் இல்லீகலாக விந்தணு தானம் செய்து 60 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார். இதுவரை பிறந்த 60 குழந்தைகள் இல்லாமல், இன்னும் 7 பேர், இந்த ஆணின் விந்து தானம் மூலம் குழந்தை பெறவிருக்கிறார்கள்[அசுர சாதனை?!].

முறையாகப் பதிவு செய்த விந்தணு தானம் மூலம் குழந்தை பெற சில லட்சங்கள் சிகிச்சைக்குச் செலவாகிறது. ஆனால், அதைச் செய்யாத நபர் மூலமாக விந்து தானம் பெற்றுக் குழந்தை பெற சில ஆயிரங்கள் மட்டுமே செலவாகிறது என அறியப்படுகிறது. இந்த ஒரு காரணத்தால் இங்கிலாந்தில் பலர் இல்லீகலாக விந்து தானம் செய்து வருகிறார்கள். 

*முறையாக விந்தணு தானம் செய்யாத நபர்கள், தங்களுக்கு என தனி 'முகநூல் குழு'[ஃபேஸ்புக் க்ரூப்] துவங்கி, அதன் மூலமாக விந்து தானம் வேண்டுவோரைத் தொடர்பு கொண்டு, மறை முகமாக விந்து தானம் செய்து பணம் ஈட்டி வருகிறார்கள். இதனால், முறையாக விந்தணு தானம் செய்து குழந்தை பெறுவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும், முறையில்லாத வகையில் விந்தணு தானம் பெற்றுக் குழந்தை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

*குழந்தையில்லாத இணையர் மட்டுமின்றி ஓரினச் சேர்க்கையாளர்களும், திருமணம் செய்து கொள்ளாத பெண்களும் இவ்வகையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

*தன் விந்துவைக் கொடையளிக்க விரும்புபவர் விந்து வங்கியை அணுகுதல் வேண்டும். 

*விந்தினைப் பெற விரும்பும் இணையர் அதை அளித்தவரின் உடற்கட்டு, இனம், தோற்றம், திறமைகள் போன்ற பிற தகவல்களை நாடிப் பெறுவதும் உண்டு. 

*இது விசயத்தில் செயற்கைக் கருத்தரிப்பு முறை பின்பற்றப்படுகிறது. சில நேரங்களில் 'அந்த' ஆண் அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டு கருத்தரிக்கச் செய்தலும் நடைபெறுகிறது. இதற்கு உதவும் அமைப்புகள் அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படுவது அறியத்தக்கது.

*தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையைப் பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை, தந்தையுடைய வருமானம் இன்றி, தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும்... வாழும் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தாலே போதும். தந்தையின் பெயர் அல்லது முதலெழுத்து (இனிஷியல்) சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை. பள்ளிச்சேர்க்கை, சொத்துப் பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். அந்தக் குழந்தைக்கு நிபந்தனை ஏதுமின்றிப் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்” என்பது நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு.

*இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்களின் துணையின்றிப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது மிகமிகக் குறைவுதான். 

*கணவனால் கைவிடப்பட்ட கர்ப்பிணிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் என்று பலரும், பிறக்கும் குழந்தைக்குத் தந்தையின் முதலெழுத்து[இனிஷியல்] இன்றி அல்லாடுகின்றனர். இதனால், தங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க முடியாமல் கூனிக் குறுகி அவமானத்தைச் சந்திக்கின்றனர். மேற்கண்ட தீர்ப்பு அவர்களுக்கு விடிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

*விந்து தானம் செய்யும் வாலிப வயதினரை மதிக்கும் மனப்பக்குவம் பொதுமக்களிடம் இல்லாததால், விந்து தானம் செய்ய முன்வருவோர் மிகுந்த தயக்கத்திற்கு உள்ளாகிறார்கள். எனினும், விந்து தானம் செய்யப் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

*ஒரு முறை செய்யப்படும் விந்து தானத்திற்கு விந்து வங்கியினர் ரூ400/ மட்டுமே வழங்குகிறார்கள். இதன் மூலம் இவர்கள் சம்பாதிப்பதோ மிக மிக அதிகம்.

*ஆண்களிடம் உயிர்ப்புள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், விந்து தானம் செய்வது உலகெங்கும் தடை செய்யப்பட்டால், எதிர்காலத்தில் மனித இனமே அழிந்துபோகும் அபாயமும் உண்டு என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

*தானம் பெறுவதற்கு முன்பே, தானம் செய்பவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, எச்.ஐ.வி., நீரிழிவு, ரத்த அழுத்தம் உட்பட வேறு பிரச்சனைகள் உள்ளனவா என்று பரிசோதனை செய்யப்படுகிறது.

*ரு முறை தானம் கொடுத்த பிறகு அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் விந்து நன்கொடை வழங்கலாம். 

*தானம் செய்பவர், விந்துச் சேகரிப்பு மையத்திற்குச் சென்று 'சுய இன்பம்' மூலம் விந்துவை வெளியேற்றி, உரிய வகையில் சேமித்து வங்கியில் ஒப்படைத்தல் வேண்டும். இதைச் செய்ய விரும்பாத இளைஞர்கள் தானம் செய்வதைத் தவிர்க்கிறார்கள்.

======================================================================================

'விந்தணு தானம்' தொடர்பான ஓர் உண்மைக் கதை!

இங்கிலாந்தில் பிறந்து, தனது இளமைக் காலத்திலேயே ஆஸ்திரேலிய நாட்டுக் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருபவர் அமினா ஹார்ட்.

அவர் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார், அந்த இருவேறு திருமணங்களின் மூலம் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால், அந்த இரண்டு குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்துபோயின. 

தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்துச் செய்து, தனியாக வாழ்ந்துவந்தார் அமினா. இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்க அவர் விரும்பினார். அதன்படி, பிரபல செயற்கைக் கருத்தரிப்பு மையத்தை அணுகினார். அவருக்குப் பலரும் விந்து தானம் அளிக்க முன்வந்தனர்.
 
இந்நிலையில், ஸ்காட் ஆன்டர்சன் என்பவரின் விந்து தானத்தை ஏற்க முடிவு செய்தார். அதன்படி, வெற்றிகரமாக முடிந்த செயற்கைக் கருத்தரிப்பின்படி லைலா என்ற அழகிய பெண் குழந்தையை அமினா பெற்றெடுத்தார்.

அந்தக் குழந்தையைத் தனக்கு விந்து தானம் கொடுத்தவரிடம் காட்ட எண்ணி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுப் பண்ணை தொழில் செய்துவரும் ஸ்காட் ஆன்டர்சனைத் தேடிக் கண்டுபிடித்தார் அமினா ஹார்ட்.
 
இந்தக் குழந்தையால் ஏற்பட்ட இந்த உறவு காதலாகி, திருமணத்தில் முடிந்தது. இந்தத் தம்பதியினர் தற்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.