‘பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. ஹிந்துக் கோவில்களை அரசு நிர்வகிக்காமல் பக்தியுள்ள ஹிந்துக்கள் நடத்த வேண்டிய காலம் இது’ என்று சத்குரு தெரிவித்துள்ளார்[தினமலம்].
சத்துக்குருவுக்கு.....
குருதேவரே,
‘நல்லது கெட்டது’ எல்லோருக்கும் தெரியும். அதென்னங்க புனிதம்?
புனிதம் என்றால் ‘தூய்மை’ என்று பொருள். அந்தத் தூய்மையைத்தான் கடவுளோடு சம்பந்தப்படுத்திப் புனிதம் என்கிறீரா?
புனிதத்திற்குப் பொருள் காண்பது இருக்கட்டும், பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது என்கிறீரே, அதன் மூலம் பக்தி இல்லாதவர்கள் எல்லாம் புனிதர்கள் அல்ல என்கிறீர்.
சரி என்றே கொள்வோம்.
பக்தர்களில், உண்மைப் பக்தர்கள், கோடி கோடியாய் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் போலிப் பக்தர்கள் என்று இரு வகையினர் உள்ளனர்.
உண்மையான பக்தர்களைக் கண்டறிவது எப்படி?
முகம் முழுக்கத்[உம்மைப் போல] தாடி மீசை வளர்த்தவர்களா?
உம்மைப் போல வகை வகையான விதம் விதமான படாடோப ஆடை அணிபவர்களா?
எந்நாளும் காவி உடை உடுப்பவர்களா?
இங்கிலீஸில் கொஞ்சமும் புரியாத தத்துவம் பேசி ஞானி என்று பட்டம் பெற்றவர்களா?
தவறாமல் தினமும் கோயிலுக்குச் செல்பவர்களா? கட்டுக் கட்டாய் உண்டியலில் பணம் போடுபவர்களா?
மாமூலாகக் கோயில்களுக்குப் போய் முடிக்காணிக்கை(மொட்டை) செலுத்துபவர்களா?
இவர்களெல்லாம் அல்ல; அவர்கள் மனப்பூர்வமாய்க் கடவுளை நம்பித் துதிப்பவர்களே[உண்மையான பக்தர்கள்] என்பீரேயாகில், பெரும்பான்மைப் போலிகளுக்கிடையே மிகச் சிறுபான்மையராக உள்ள அவர்களைக் கண்டுபிப்பது எளிதல்லவே.
கணிசமான அளவிலேனும் அவர்களைக் கண்டுபிடித்தால்தானே அவர்களிடம் கோயில்களை ஒப்படைக்க முடியும்.
அது சாத்தியமே அல்ல என்பதால், உலகப் புகழ் பெற்ற கோடீசுவரப் பக்தரான உம்மிடமே அனைத்துக் கோயில்களையும் ஒப்படைத்திட வேண்டும் என்பது உம்முடைய உள்மன ஆசை!
ஆசை நிறைவேற எம் மனம் செறிந்த வாழ்த்துகள் குருநாதரே!!
* * * * *