மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டை ஆளுவோரின் கடமை மக்களின் உயிர் காப்பதும் நலம் காப்பதும்தான். மறந்தும் ஆன்மிகத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்களாயின், அது பேரழிவின் அறிகுறியாகும்.
ஒரு நிறுவனத்தின் பெண் ஊழியர் அளவு கடந்த பணிச் சுமையால், கட்டுக்கடங்காத மன அழுத்தத்திற்கு உள்ளாகி உயிரிழக்கிறார்[ஆதாரம் கீழே*].
அவரின் விலைமதிப்பற்ற உயிர் பறிபோகக் காரணம் நிறுவனத்தின் நிர்வாகிகள் மட்டுமல்ல, இது போன்ற நிறுவனங்களின்[நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை] செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்களைத் தண்டிக்கத் தவறிய நடுவண் ஆட்சியாளர்களும்தான்.
மன வலிமை என்பது முறையான மனப் பயிற்சியால் பெறத்தக்கது. கடவுள், ஆன்மா எல்லாம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவற்றின் மூலம் மன வலிமை பெறுவது சாத்தியமே இல்லை[காலங்காலமாகத் தொடர் பரப்புரையின் மூலம் இந்தவொரு மூடநம்பிக்கையை மக்கள் மனங்களில் வெகு ஆழமாகப் பதித்துவிட்டார்கள் பாவிகள்].
குற்றம் புரிபவர்களைத் தேடிப் பிடித்து உரிய தண்டனை வழங்காமல், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பகுத்தறிவைக் கருவறுக்கும் வகையில் அறிவுரை வழங்குவது அடாத செயலாகும்.
அம்மா நிர்மலா மட்டுமல்ல, இவரணைய நாட்டை ஆளும் கும்பலும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு, அறிவியல்பூர்வமாகத் தீர்வு காண்பதைத் தவிர்த்து, ஆன்மிகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
துன்பங்களைத் தாங்குவதற்கான மன வலிமையைப் பெற ஆன்மிகம் பயன்படும் என்ற நிர்மலாவின் ஆலோசனை அபத்தமானதாகும்.
ஒரு கயவன் பெண்ணொருத்தியை வன்புணர்வு செய்ததால் கடும் வேதனைக்குள்ளான அவள் தற்கொலை செய்துகொள்வதாக ஓர் நிகழ்வு[அவ்வப்போது நடைபெறுகிற ஒன்றுதான்].
இந்தக் கொடூர நிகழ்வை முன்னிறுத்தி நிர்மலா அம்மையாரிடம் நாம் கேட்கும் கேள்வி.....
சூழ்நிலை காரணமாகவோ, உயரிய சிந்தனையின் மூலமாகவோ அதீத மன வலிமையைப் பெறாத நிலையில், வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றால், உங்கள் ஆன்மிகம் அதைத் தடுத்து நிறுத்துமா?
அமைச்சர் என்னும் ஒரே ஒரு தகுதியை மட்டும் உரித்தாக்கி, நிர்மலாவோ பிற அமைச்சர்களோ எளிதில் தீர்க்க இயலாத பிரச்சினைகளுக்கு ஆன்மிகமே தீர்வு என்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல!
* * * * *
*#எர்னஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 26 வயது அண்ணா செபஸ்டியன் பணிச்சுமையால் உண்டான மன அழுத்தம் காரணமாகக் கடந்த வாரம் உயிரிழந்தார்[https://tamil.goodreturns.in]
இந்நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
அன்னாவின் மரணம் தொடர்பாகக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார், “சிஏ படித்து முடித்த ஒரு இளம் பெண் பணிச்சுமை காரணமாக[உண்டான மன அழுத்தத்தால்] இறந்து விட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது” என்று குறிப்பிட்ட அவர்.....
பொத்தாம்பொதுவாக, “நீங்கள் என்ன படித்தாலும், எந்த வேலையைச் செய்தாலும் அவற்றால் உண்டாகும் அழுத்தத்தைத் தாங்கும் மனவலிமை இருக்க வேண்டும்[அழுத்தம் ஏற்படக் காரணமானவனைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?] அந்த வலிமை ஆன்மீகத்தால் மட்டுமே சாத்தியம்" என்று கூறினார்#
* * * * *