'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Friday, September 9, 2016

“நான் யார்?”.....பெரியார்.

பெரியார் குறித்த சில தவறான புரிதல்களை அகற்ற இப்பதிவு உதவக்கூடும். தவறாமல் படியுங்கள்.
#எனக்கு மொழி அபிமானம் இலக்கிய அபிமானம் எல்லாம் கிடையாது. வெறும் மனிதாபிமானம்தான் உண்டு. அதுவே எனக்கு அதிமுக்கியம் ஆகும் -பெரியார் ஈ.வெ.ரா. 113ஆவது பிறந்த நாள் பன்மொழிச் சிறப்பு மலர்: சிந்தனையாளரின் வெளியீடு, 1991, பக்.55

[ஒருவருடைய பெயரின் முன்னால் மரியாதை அடைமொழியாக, ‘ஸ்ரீமான்’ என்று குறிப்பிட்டுவந்த பெரியார், 1927க்குப் பின்னர், ‘திரு, திருமதி, செல்வி, தோழர் என்பன போன்ற தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தினார்; ‘அக்கிராசனர் அவர்களே’, ‘சகோதரர்களே...சகோதரிகளே’ என்று விளித்துப் பேசியவர், ‘தலைவர் அவர்களே...தோழர்களே’ என்று பேசத் தொடங்கினார்]

#எனக்குச் சிறு வயது முதற்கொண்டே சாதியோ மதமோ கிடையாது. அதே போல, கடவுளைப் பற்றியும் மனதில் நம்பிக்கையோ பயமோ கொண்டிருந்ததில்லை.

எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி மதத்தையோ கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன்.....எப்போதிருந்து இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்கவே முடியவில்லை#

#நாத்திகன் தன் பகுத்தறிவுக்குச் சரி என்றும், உண்மை என்றும் பட்டதை மட்டும்தான் நம்புகிறான்; அதன் அடிப்படையில், மிக ஒழுங்காக நடக்க விழைகிறான்#

#எமது பத்திரிகையின்[குடியரசு] நோக்கத்தை அறிய விரும்புவோர்க்கு.....
நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்துவருவோம்...[தம் 40ஆவது வயதுவரை{1925களில்} சமய வளர்ச்சியில் அக்கறை கொண்டிருந்திருக்கிறார்]#

#என்னை ராமசாமி நாயக்கர் என்று  சாதிப் பெயரைச் சேர்த்து அழைக்கக் கூடாது. மரியாதைக்காகவோ, மரபாகவோ, ஏன், மறதியாகவோகூட அழைக்கக் கூடாது. தோழர் ராமசாமி என்றுதான் அழைக்க வேண்டும் -குடியரசு, 13.11.1932#

#மோட்சம் எப்படிப் பேராசையின் பிரதி பிம்பமோ, அதுபோலவே நரக உணர்ச்சியும் அடிமைத்தனத்துடையவும் பயந்தாங்கொள்ளித்தனத்துடையவுமான பிரதி பிம்பம் ஆகும்#

#நான் நாத்திகன் அல்லேன். மாறாக, தாராள எண்ணம் உள்ளவன்#

#[கடவுளைக் கைவிட முடியாதவர்கள்] காசு பணம் செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை மூடநம்பிக்கைக்கு இடமில்லாத வகையில் வணங்கலாம்.#

#பக்தியை ஒருவன் இழந்தால் அது தனி மனித இழப்பு. ஒழுக்கத்தை ஒருவன் இழந்தால் அது சமுதாயத்திற்கே இழப்பு#

# எதையும் நன்றாக ஆராய்ச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகும். அதுவே பகுத்தறிவாகும்#

#புத்த தர்மம் என்பது புத்தி தர்மம். அதுதான் மனித தர்மம் ஆகும்#

#ஒருகாலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனித அறிவு வளரவில்லை என்று பொருள்#
===============================================================================
டாக்டர் ஜெரி அவர்களின், ‘மனிதம்...’ என்னும் நூலிலிருந்து தொகுத்தது. நீதி வெளியீடு, சென்னை; முதல் பதிப்பு: 1994.

No comments :

Post a Comment