மறைந்த கவிஞர் கண்ணதாசனும் எழுத்தாளர் ஜெயகாந்தனும் அந்தரங்க நண்பர்கள். இருவரும்[?] மதுவருந்தி மகிழ்ந்திருந்த ஒரு சூழலில்[அழகுப் பெண்களும் உடன் இருந்ததாக ஜெயகாந்தனே சொல்லியிருக்கிறார்] பிரபல ஜோதிடர்[பிரதமர் இந்திராகாந்தியின் அந்தரங்க ஜோதிடராக இருந்தவர்] ஒருவர் இவர்களைச் சந்தித்தார்.
''இவர் சொல்வது பலிக்கும்'' என்று கண்ணதாசன் உறுதிபடச் சொல்லவே, ஜோதிடரிடம் கை நீட்டினார் ஜெயகாந்தன்.
ஜோதிடர் சொன்னார்: ''நீங்கள் ஒரு சுந்தரி மீது கட்டுக்கடங்காத காதல் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களுக்குப் பல அபவாதங்கள் ஏற்படும். மான நஷ்டமும் பொருள் நஷ்டமும் பந்துமித்திரர்களின் விரோதமும் ஏற்படும். ஒரு உண்மை ஜோதிடன் என்ற முறையில், இந்த உண்மையைச் சொல்லி உங்களை எச்சரிப்பது என் கடமை. நம்புவதும் நம்பாததும் தங்களின் சித்தம்.''
''நீங்கள் சொல்வதென்னவோ உண்மைதான் சாமி. ஆனால், நான் கட்டுக்கடங்காத காதல் கொண்டிருக்கிற அந்தச் சுந்தரி என் மனைவிதான். அவளை நான் என்ன செய்யட்டும்?'' என்றார் ஜெயகாந்தன்.
ஜெயகாந்தனின் பதிலைக் கேட்டவுடன் அதிரடியாக வெடிச் சிரிப்புகளை உதிர்த்துக்கொண்டே அவர்கள் இருந்த அறையிலிருந்து ஓட்டம் பிடித்தாராம் கண்ணதாசன்.
ஜோதிடர் திருதிருவென்று விழித்தார்.
இடத்தைக் காலிசெய்ய முயன்ற ஜோதிடரிடம் ஜெயகாந்தன் சொன்னார்: ''முன்னொரு காலத்தில் சேர நாட்டு அரண்மனைக்கு ஒரு ஜோதிடன் வந்தான். அண்ணனும் தம்பியுமாய் அழகிய இரண்டு அரச குமாரர்கள் அங்கே நின்றிருந்தனர்.
ஜோதிடர் இளைய குமாரனைப் பார்த்து, ''இவனுக்கே அரசாளும் லட்சணங்கள் நிரம்பியிருக்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி இவனே அரசாள்வான்'' என்று மொழிந்தாராம்.
உடனே அந்த இளவரசன், ''நான் சந்நியாசம் மேற்கொண்டு உன் ஜோதிடத்தைப் பொய்யாக்குகிறேன். அண்ணனே அரசாள்வான்'' என்று சொன்னதோடு, துறவறம் பூண்டு ஜோதிடத்தைப் பொய்யாக்கினான். அந்த இளவரசன்தான் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள். இது நடந்தது இன்றைய மலையாள தேசமான சேரநாட்டில்தான்.''
அசடு வழிந்த பிரபல ஜோதிடர், ''ஞான் மலையாளி'' என்று சொல்லி நழுவினாராம்.
வெகு சுவையான இந்த நிகழ்வை, 'ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்'[கவிதா பப்ளிகேஷன், தி.நகர், சென்னை; முதல் பதிப்பு, செப், 2007; பக்கம் 153] என்னும் நூலில் ஜெயகாந்தனே விவரித்துள்ளார்.
========================================================================
ஜெயகாந்தனின் இயற்பெயர் 'முருகன்' <முருகேசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக