செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சிந்திக்கத் தெரியாதவர்களுக்கான சிறப்பு இடுகை!!!

மூடநம்பிக்கை என்னும் குட்டையில் காலமெல்லாம் ஊறிக் கிடப்பதில் அற்ப சுகம் காணும் அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.....

கீழ்க்காணும் பதிவை நிதானமாகப் படியுங்கள். இந்த வாசிப்பு அனுபவம் உங்களை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும். விளைவு.....

உங்களின் சிந்திக்கும் திறன் நாளும் அதிகரிக்கும். பல்வேறு மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து படிப்படியாய் விடுதலை பெறுவீர்கள்.

இது உறுதி.

நன்றி.

நம் கற்பனைக்கு எட்டாத வகையில், ஒட்டுமொத்த விண்வெளியையையும் ஆக்கிரமித்து, விரிந்து பரந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த வாதப் பிரதிவாதங்கள முற்றுப் பெறாதவை.

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?’ -இது கேள்வி.
‘கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது என்பது ஒரு பதில்.

‘தோற்றுவித்தவர் கடவுள் என்றால், அவரைத் தோற்றுவித்தவர் யார்? அவருக்கும் மேலான ஒரு கடவுள்[கடவுளின் கடவுள்] என்பது பதிலாயின், அந்த மேலான கடவுளைத் தோற்றுவித்தவர் யார்? அவருக்கும் மேலான.....’

இப்படிக் கேள்விகள் தொடர்வதும் அவற்றிற்கு ஆதாரபூர்வமற்ற பதில்களைச் சொல்லிக்கொண்டே போவதும் மிகச் சரியான பதிலை நமக்குப் பெற்றுத் தரா.

பிரபஞ்சம் தோன்றியது எப்படி? -இது கேள்வி.

‘அது தானாகத் தோன்றியது’ என்பது இரண்டாவது பதில்.

பிரபஞ்சம் தானாகத் தோன்றியது என்றால், அதன் தோற்றத்திற்கு முன்பு ‘வெளி’யில் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

எதுவுமே இல்லாத ஒரு நிலை எப்படிச் சாத்தியமாயிற்று?

சூரியன் இல்லை. ஏனைய  நட்சத்திரக் கூட்டங்கள் இல்லை. கோள்கள் இல்லை. துணைக்கோள்கள் இல்லை. எரிகற்கள் இல்லை. இன்னும்...இன்னும்...இப்போது வான வெளியில் இடங்கொண்டிருக்கும் எதுவுமே இல்லை என்றால் அதை, அதாவது, எப்பொருளும்  இல்லாத ஒரு நிலையைக் கற்பனை செய்து உணர முடிகிறது. ஆனால், அங்கே ஒளியோ இருளோ இல்லாத நிலையைப் புரிந்துகொள்வது எளிதாக இல்லையே. ஒளியற்ற இருளுமற்ற எந்தவொரு நிறமும் அற்ற நிலை சாத்தியமா? ஏதாவது ஒன்று[விவரிப்புக்கு அப்பாற்பட்டது] இருந்துதானே தீரும்?

இதை உறுதிப்படுத்துவது சாத்தியப்படாத நிலையில், எதுவுமே இல்லாத ‘வெளி’யிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்னும் கருத்தை ஏற்பது கடினம் என்றாகிறது.

‘பிரபஞ்சம் தோன்றியது எப்படி?’ -இது கேள்வி.

‘அது தானாகத் தோன்றவில்லை; தோற்றுவிக்கப்படவுமில்லை; எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது’ என்பது மூன்றாவது பதில்.

இதை ஏற்பதிலும் ஒரு சிக்கல் உண்டு.

எப்போதும் இருந்துகொண்டே இருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?

இதற்கான பதில்..........

‘இப்போது அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஐம்புலன்களாலும் ஆறாவது அறிவாலும் அதை அறிந்திருக்கிறோம்[இவ்வகையில் கடவுளை அறிவதோ உணர்வதோ சாத்தியப்படவில்லை]. பிரபஞ்சம் என்று ஒன்று இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

‘இப்போது இருக்கிற அது எப்போதும் இருந்துகோண்டே இருந்திருக்கிறது’ 

மிகச் சரியான பதில் கண்டறியப்படுவரை இந்த மூன்றாவது பதிலே ஏற்கத்தக்கது என்பது என் எண்ணம். தங்களுடைய எண்ணம் வேறு எதுவாகவும் இருக்கலாம்.

தங்களின் வருகைக்கும் அசாத்தியப் பொறுமையுடன் இந்த அறுவைப் பதிவை வாசித்தமைக்கும் என் நன்றி.

*****************************************************************************************************************************************************
கைபேசியில் தட்டச்சு செய்தது.