''கடவுள் உண்டா, இல்லையா?'' என்னும் கேள்விக்கு 'ஞான சூனியன்' ஆன நான் மிகப் பல்லாண்டுகளாக விடை காணும் வகையறியாமல் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தேன். தவிப்புக்குக் காரணம்.....
கடவுளின் 'இருப்பை' ஆறறிவால் அறியவோ, மனதால் உணரவோ எனக்கு வழிகாட்ட எவருமில்லை; கடவுள் குறித்த ஆன்மிகவாதிகளின் அனுமானங்களும் கற்பனைகளும் என்னளவில் ஏற்புடையனவாக இல்லை என்பதே.
அகவை ஏற ஏற என் தவிப்பும் அதிகரித்துக்கொண்டே போனது.
'மரணத்தைத் தழுவும்வரை அந்தப் பரம்பொருளை உணர்ந்தறியும் பேறு வாய்த்திடாதோ?' என்னும் அளப்பரிய கவலை என்னை அரித்தெடுக்கலாயிற்று. இந்த அவல நிலையில்.....
தமிழின் 'அந்த'ப் 'பலசரக்கு' வார இதழை, பல வாரங்களாக வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
'நடமாடும் கடவுள்' என்று ஒரு மனிதரை முன்னிலைப்படுத்தியதோடு, அவர் தொடர்பான பேரதிசய நிகழ்வுகளைப்[மனிதர்களுக்கான குறைகளைத் தம் மெய்ஞானத்தால் அறிந்து நிவர்த்தி செய்தல்] பட்டியலிட்டார்கள். 'அவரே கடவுள்' என்று ஒட்டுமொத்த உலகுக்கும் பறையறைந்து சொன்னார்கள்.
முக்காலமும் அறிந்த அந்த ஞானி, அடுக்கடுக்காய் மக்களுக்கு ஆற்றிய நற்பணிகளைப்[ஆதாரங்களுடன்!!!] பட்டியலிட்டார்கள்.
இந்த வார இதழ்க்காரர்களின் போற்றுதலுக்குரிய இப்பணி பக்தர்களைப் பரவசப்படுத்தியது; என் போன்ற பரம நாத்திகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. 'இவரே கடவுள்' என்று எண்ண வைத்தது!
'மண்ணில் நடமாடும் கடவுளாக அருள்பாலித்த இவர் மட்டுமே கடவுள். பிரபஞ்ச வெளியில் பிறிதொரு கடவுள், அல்லது கடவுள்கள் இல்லை...இல்லவே இல்லை' என்று நம்ப வைத்தது!!
மண்ணில் நடமாடிய... இஞ்ஞான்றும் எஞ்ஞான்றும் விண்ணில் நடமாடும் இந்த 'மகா.....பெரிய' கடவுள் வாழிய வாழியவே!
------------------------------------------------------------------------------------------------------------------