''நான் ஓய்வில்லாமல் உழைத்து வாழ்நாளில் சாதனைகள் நிகழ்த்த நினைப்பவன். வயிற்றுக்கு உணவு தேடி அலைவதும், ஓய்ந்துபோய் உறங்கிக் கிடப்பதும் இதற்குத் தடைகளாக உள்ளன. ஆகவே, நான் உண்ணாமலும் உறங்காமலும் உழைத்து வாழ்ந்திட அருள்புரிவாய் கடவுளே.''
''நான் உன் பக்தன்; 100% உண்மையான பக்தன். உன்னைத் துதிபாடி உவப்பதுடன், தரணியெங்கும் நின் புகழ் பரப்பி மகிழ்ந்திட ஒரு நூறாண்டு வாழ்க்கை போதாது. ஆகவே ஐயனே, அருள்கூர்ந்து நீ எனக்கு மரணமில்லாப் பெருவாழ்வைத் தந்தருள வேண்டும்.''
பக்தனொருவன் மேற்கண்டவாறு கடவுளிடம் வேண்டுதல் வைப்பானாகில் அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?
உணவு, உறக்கம், மரணம் என்ற இம்மூன்றும் இல்லாமல் எந்தவொரு உயிரினமோ மனித இனமோ வாழ்தல் என்பது இயற்கை நெறியல்ல என்பதை நாம் புரிந்துகொண்டிருப்பதுதான்.
உண்டு உறங்கி வாழ்ந்து முடித்து மரணத்தைத் தழுவுகிற நாம், வாழும் சூழலுக்கேற்ப இன்பதுன்பங்களையும் அனுபவிக்கிறோம். அதுவும் இயற்கையே.
கடவுள் என்று ஒருவர் இருப்பினும்.....
அவரைப் போற்றிப் புகழ்ந்து வழிபட்டு, நம்மை வருத்தும் துன்பங்களைப் போக்குமாறு வேண்டிக்கொள்வதால் அத்துன்பங்கள் அகன்றுவிடா. உண்டு உறங்கி வாழ்ந்து சாவது எவ்வாறு இயற்கை நிகழ்வோ, அது போன்றதுதான் வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிப்பதும்.
அவரை வேண்டிக்கொள்வதால், உண்ணுதல் உறங்குதல் இறத்தல் என்பனவற்றிலிருந்து எவ்வாறு விடுபட இயலாதோ, அவ்வாறே துன்பங்களிலிருந்தும் விடுபட இயலாது என்பது உறுதி.
அவரை வேண்டிக்கொள்வதால், உண்ணுதல் உறங்குதல் இறத்தல் என்பனவற்றிலிருந்து எவ்வாறு விடுபட இயலாதோ, அவ்வாறே துன்பங்களிலிருந்தும் விடுபட இயலாது என்பது உறுதி.
சக மனிதர்களின் ஆறுதல் மொழிகளையும், மனப்பூர்வமான உதவிகளையும் பெறுவதன் மூலமும், எதையும் தாங்கும் மன உறுதியை வளர்த்துக்கொள்வதன் மூலமும் துன்பங்களின் தாக்கத்தை இயன்றவரை குறைக்கலாம். மற்றபடி.....
கடவுளை நம்பி ஏமாறுவதும், அவர் பெயரால் நிறுவப்பட்டிருக்கும் சிலைகளைக் காணப் பல மணி நேரங்களை வீணடிப்பதும் அவரவர் விருப்பம்!
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.