சனி, 22 செப்டம்பர், 2018

காமமே வெல்லும்!!!

ஒரு கத்துக்குட்டிக் கவர்ச்சி நடிகையின் கண்சிமிட்டலை இணையத்தில் கண்டு ரசித்தவர்கள் சில[பல?] லட்சம் பேர்! நெஞ்சை நெகிழவைக்கும் கீழ்க்காணும் கதையை[2012இல் வெளியானது]வாசித்தவர்களின் எண்ணிக்கை சில நூறு மட்டுமே. காரணம்.....

பதிவின் தலைப்பைக் கவனியுங்கள். தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பில்லை என்பதையும் அறிவீராக!

ண்ணுச்சாமி ரொம்பவும் இளகிய மனசுக்காரன்.

மாலை நேரத்தில், வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான் ஒரு வாகன ஓட்டி.

ரத்தக் காயங்களுடன் தார்ச்சாலையில் சரிந்து விழுந்தார் பெரியவர்.

யாரும் உதவாத நிலையில், ஃபோன் செய்தும் உரிய நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வராததால் வாடகைக் கார் பிடித்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தான் கண்ணுச்சாமி. சோதித்த மருத்துவர்கள், “மயக்கமா இருக்கார். பயப்பட ஒன்னுமில்ல” என்றார்கள்; மிகவும் தாமதமாகவே சிகிச்சையளித்தார்கள்.

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவரைப் பார்க்க அவன் அனுமதிக்கப் பட்டான்.

முதியவருக்குச் சுயநினைவு திரும்பியிருந்தது.

அவரை நெருங்கி, “நல்லா இருக்கியா பெரியவரே?” என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டான் கண்ணுச்சாமி.

அவனை உற்றுப் பார்த்த அவர், “நல்லா இருக்கேன்பா. நீ.....நீதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தியா?” என்றார்.

“ஆமா. மோட்டார் சைக்கிளில் அடிபட்டு மயங்கி விழுந்துட்டே. உன்கிட்டே செல்ஃபோன் இல்ல. ஒரு அடையாள அட்டைகூட இல்ல. உன் குடும்பத்தார்க்குத் தகவல் தர முடியல. உனக்கு மயக்கம் தெளியட்டும்னு காத்திருந்தேன்” என்றான்.

“கடவுளாப் பார்த்து உன்னை அனுப்பியிருக்கார். நீ நல்லா இருக்கணும்ப்பா.”  -குரல் தழுதழுக்கச் சொன்னார் முதியவர்.

''பெரியவரே, நீ நினைக்கிற மாதிரி கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கணும். ஆனா, செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பல. இன்னிக்கிப் பாரம் சுமந்து சம்பாதிச்ச பணத்தை உன்னை ஏத்திட்டுவந்த வாடகைக் காருக்குக் கொடுத்துட்டேன். வெறும் கையோட வீட்டுக்குப் போனா, ‘கைப்பிடி அரிசியில்ல; மறக்காம வாங்கிவான்னு சொல்லி அனுப்பிச்சேன். யாருக்கோ உதவி பண்ணினேன்னு இப்படி வெறுங்கையோட வந்து நிக்கிறியே, உனக்கு ஏன்தான் இப்படிப் புத்தி கெட்டுப்போச்சோ’ன்னு என் பெண்டாட்டி கத்துவா. நீ ரூபா ஏதும் வெச்சிருக்கியா?'' என்றான் கண்ணுச்சாமி.
“எனக்கு ஒரே புள்ள. ஒன்னுக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கிழவனை வீட்டோட இருக்க வெச்சி ஒரு வேளைச் சோறு போடுறான். எப்பவாவது அஞ்சோ பத்தோ தருவான்” என்று சொல்லி, சட்டைப் பையைத் துழாவிய முதியவர் கொஞ்சம் சில்லரையை எடுத்துக் காட்டினார்.

''பத்து ரூபாகூடத் தேறாது போலிருக்கு. சில்லரையை நீயே வெச்சிக்கோ. நான் நடந்தே வீட்டுக்குப் போயிடுறேன்'' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான் கண்ணுச்சாமி.
------------------------------------------------------------------------------------------------------------------
இது பழைய கதை. நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டுப் பிழைகளும்[தமிழ்மணம் இணைப்புக்குப் பின்னர்] திருத்தப்பட்டுள்ளன. தலைப்புப் படம் கூகுளின் உதவி.