வெள்ளி, 7 செப்டம்பர், 2018

''பொறுத்திருந்து பார்ப்போம்'' -நடுவணமைச்சர்...எதை?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு ஆளுநருக்கு உள்ளதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு ஆளுநருக்குத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இச்செய்தி இன்றைய[07.09.2018] நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
''7 பேரையும் விடுவித்தல் வேண்டும் என்பதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை; ஆசையும்கூட. அதற்காகப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி நடுவணரசுக்கு அனுப்பினார்'' என்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர், ''சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசித் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்'' என்றும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு அவர்களும்,  ''தம் தந்தை கொல்லப்பட்டது தங்களைப் பெரும் துயரத்துக்கு உள்ளாக்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் நீண்ட காலத் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். அவர்களை மன்னிக்கலாம்'' என்பதாக ராகுல்காந்தி முன்பு குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியதோடு, ''நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது'' என்று நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பை அவர் எதிர்க்கவில்லை என்பதை அவரின் பேட்டி உய்த்துணர வைக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடத்தக்கது, 'விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; தமிழ்நாடு அரசு பரிந்துரை வழங்கலாம்' என்பதுதான்.

மறைந்த ஜெயலலிதா இவ்விசயத்தில் வழிகாட்டியாக இருப்பதால், தமிழ்நாடு அரசு, ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும் என்பதில் சிறிதும் ஐயத்திற்கு இடமில்லை. ஆனால், 'ஆளுநருக்கு அதிகாரம் இருப்பினும் விடுதலைக்கான ஆணையை அவர் பிறப்பிப்பாரா?[மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றல் வேண்டும் என்பது கட்டாயமில்லை] அதற்கான [வாய்மொழியிலான] இசைவை நடுவணரசிடமிருந்து பெறுவது சாத்தியமா?' என்பவை மிகப் பெரிய கேள்விகள்.

ஆக, எழுவரின் விடுதலை என்பது கேள்விக்குரியதாக உள்ள நிலையில், நடுவணமைச்சர் மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்.....

''மத்தியில் காங்கிரசும் தமிழ் மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சி நடத்தியபோதே இந்த ஏழு பேரும் ஏன் விடுதலை செய்யப்படவில்லை?'' என்றொரு கேள்வியை முன்வைத்திருக்கிறார். 

இந்தக் கேள்வி, ''இப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும் மாநில அ.தி.மு.க.வும் இதைச் செய்தல் தேவையா?'' என்னும் இன்னொரு கேள்வியையும் உள்ளடக்கியிருக்கிறது.

ஏறத்தாழ, விடுதலைக்கு எதிரான[?] தம் கருத்தைக் கோடிட்டுக் காட்டிவிட்ட அமைச்சர், ''பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றும் கூறியிருக்கிறார். 

எதை?

தமிழக அரசின் நடவடிக்கையை; அதாவது, எழுவர் விடுதலைக்கான பரிந்துரையை!?

பரிந்துரைத்தால் அதைப் பா.ஜ.க. அரசு வேடிக்கை பார்க்குமா? 'பார்க்காது' என்பது நம்பத்தகுந்ததெனின்.....

வேறு என்ன செய்யும்?

பொறுத்திருந்து பார்ப்போம்...ஹி..ஹி..ஹி!
------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக