'நடமாடும் தெய்வம்', 'முக்காலமும் அறிந்த ஞானி'[முன்னணி வார இதழ்], 'அவதார புருஷன்' என்றெல்லாம் வேதம் பயின்ற வித்தகரால் பரப்புரை செய்யப்பட்ட/படும் 'அந்த' மகா.....பெரிய மகான் மறைந்து மகா சமாதியடைந்து ஆண்டுகள் பலவாயின.
அன்னாரின் புகழ் பாடுவதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பருவ இதழொன்றில், வாராவாரம் அவர் நிகழ்த்திய அற்புதங்களை வாசித்து நான் மெய் சிலிர்த்ததுண்டு; புளகாங்கிதப்பட்டு உள்ளம் பூரித்ததுண்டு.
இம்மண்ணின் மனிதர்களுக்கு நேரிட்ட சோதனைகளைத் தாமாகவே முன்னுணர்ந்து அவர்தம் துயர் துடைத்தவர் அந்த மகான்.
அவர் இவ்வுலகில் நடமாடிக்கொண்டிருந்தவரை, சின்னஞ்சிறுசுகள் காலிகளால் கடத்தப்பட்டதில்லை; கன்னிப்பெண்கள் கற்பழிக்கப்பட்டதில்லை; கொலைகள், கொள்ளைகள் என்று எந்தவொரு வடிவத்திலும் இங்கே வன்முறைகள் நிகழ்ந்ததில்லை. பருவ மழை பொய்த்ததில்லை; பஞ்சம் தலைவிரித்து ஆடியதில்லை. பட்டினி கிடந்தோ, தீராத கொடிய நோய்கள் தொற்றியோ மாந்தர் எவரும் மரணித்ததில்லை.
கடும் சூறாவளிகள் இல்லை; சுனாமிகள் இல்லை; நிலநடுக்கங்கள் இல்லை.
காரணம்.....
அவர் முக்காலமும் அறிந்த மகான் என்பதால், நிகழவிருந்த மேற்குறிப்பிட்ட அனைத்து அசம்பாவிதங்களையும் முன்னுணர்ந்து, தம் தெய்வீகச் சக்தியால் தடுத்தாட்கொண்டதுதான்.
அந்த மகான், சில நேரங்களில் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிவிடுதல் உண்டு. அத்தியானம் மிகப் பல நாட்கள்...வாரங்கள் என்று தொடர்வதுண்டு. அம்மாதிரியான நேரங்களில், மேற்குறிப்பிடப்பற்றவற்றுள் பல/சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருத்தல்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்; பொருட்படுத்தத் தேவையில்லை.
மகான், மகா சமாதியடைந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டதால்.....
மக்கள் வாழ்க்கையில் மீண்டும் துயர மேகங்கள் கவியத் தொடங்கியுள்ளன. அவற்றை முற்றிலுமாய்த் தகர்த்து, ஒட்டுமொத்த உலகமும் சுகபோக வாழ்வு வாழ்ந்திட 'மகா.....பெரிய மகான்' மீண்டும் இம்மண்ணில் அவதரித்தல் அவசியத் தேவை.
மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 'பிரார்த்தனை' செய்தால் மட்டுமே அது சாத்தியப்படும். ஆதலினால் மக்களே.....
மகானை நினைந்து, மனம் உருகி அனுதினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக