அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 9 நவம்பர், 2013

நீங்கள் முட்டாளா என்பதைச் சோதிக்க... ஒரே ஒரு கேள்வி!!!

நாத்திகர்கள் வேண்டாம். “கடவுள் இருக்கார்னு நம்பவும் முடியல; நம்பாம இருக்கவும் முடியல” என்று பூசி மெழுகுகிற ‘ரெண்டும் கெட்டான்கள்’ எட்டி நின்று வேடிக்கை பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமேயான கேள்வி இது.

மகான்களையும் அவதாரங்களையும் ஆன்மீகங்களையும் மகா மகா பெரியவர்களையும் துணைக்கு அழைக்காமல் உங்கள் சுய அறிவுகொண்டு பதில் சொல்லுங்கள்.

கடவுளை 100% நம்புகிறவரா நீங்கள்?

“ஆம்” என்றால் மேலே தொடருங்கள்.

அனைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் கடவுள்.

கணக்கிட இயலாத கோடானுகோடி உயிர்களில் ஆறறிவு படைத்த நீங்களும் ஒருவர். எனவே, நீங்களும் கடவுளால் படைக்கப்பட்டவர் என்றாகிறது.

நீங்கள் வேண்டிக்கொண்டதால் கடவுள் உங்களை மனிதனாகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, உங்கள் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து  இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாது.

அவர் படைத்துவிட்டார்.

வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்.

வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் செத்தொழிவது  100% உறுதி.

இது தெரிந்திருந்தும் நம்மில் எவரும் செத்து மடியத் தயாராயில்லை.

ஆசை...‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசைதான் காரணம். [ஆசைப்பட வைத்தவரும் அந்தப் பேரருளாளன்தான்!]

இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், சாவு நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்ளத் தவறுவதே இல்லை.

இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?

நீங்கள் நம்புகிற...நாள்தோறும் போற்றித் துதி பாடுகிற கடவுள்தானே?

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த உங்கள் கருணை வடிவான  கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார்.

இவர் மட்டும் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.

ஆனால், மானுடப் பதர்களான நமக்கு மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.

இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?

படைப்புத் தொழிலைக் கைவிட்டு, வெறும் சூன்யத்தில் கலந்து மோனத் தவத்தில் ஆழ்ந்து கிடக்கலாமே?

உயிர்களைப் பரிதவிக்கச் செய்யும் பாவச் செயலை ஏன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்?

தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த வஞ்சகரையா நீங்கள் இத்தனை காலமும் வழிபட்டீர்கள்? இனியும் வழிபடப் போகிறீர்கள்?

இதுதான் நான் உங்கள் முன் வைக்கும் ஒரே ஒரு கேள்வி.

இதற்கான பதிலில்தான் உங்கள் ஒட்டு மொத்த புத்திசாலித்தனம் அடங்கியிருக்கிறது!