திங்கள், 4 நவம்பர், 2013

எழுத்தாளர் சுஜாதாவும் தமிழும்!

சுஜாதா, எளிய தமிழில் சலிப்புத் தட்டாத  நடையில் அறிவியல் செய்திகளைத் தமிழில் தந்து தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மீது மிகுந்த பற்றும் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் அவர் என்பதை அறியாதவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்காக இப்பதிவு.

'உயிர்மை பதிப்பகம்’ வெளியிட்ட, ‘சுஜாதாவின் பதில்கள்’ என்னும் நூலிலிருந்து சில கேள்விகளும் அவற்றிற்கான சுஜாதாவின் பதில்களும்:


வெ.வாசுதேவன், சேலம்.

தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?

சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது.


ந.ச.மணிமாறன், திருவண்ணாமலை.

தேவாரப் பாடல்களைப் பாடி நம்முடைய துன்பத்தில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபடலாம் என்று முனைவர் சாரதா நம்பி ஆரூரன் கூறியிருப்பது பற்றி?

திருமதி நம்பி ஆரூரன் கூறுவது நம்பிக்கையின் பாற்பட்டது. விடுபட முடிகிறதோ இல்லையோ, துன்பத்தையும் நோயையும் மறக்கச் செய்யும் ‘இனிமை’ பழந்தமிழ்ப் பாடல்களில் உண்டு. பெரியாழ்வாரின் ‘நெய்க்குடத்தை’ என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் பலர் வியாதிகளையும் துன்பங்களையும் தடுத்திருக்கின்றன.


எஸ்.அகிலா, தென்கடப்பந்தாங்கல்.

ஔவை, திருவள்ளுவர், கபிலர் என்போர் உடன் பிறந்தவர்களா?

அப்படியும் ஒரு கதை. உண்மையில் அவர்கள் தமிழுடன் பிறந்தவர்கள்.


கே.எல்.சுபாகனி, மதுரை.

உலக இலக்கியங்களில் தலை சிறந்தது எதுங்க?

எனக்குத் தெரிந்தவரை திருக்குறளுங்க.


ரெவீ, சென்னை.

கம்ப்யூட்டர் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தமிழ்படுத்துவது தமிழரை ஒரு வட்டத்திற்குள் சுருக்கும் முயற்சியாகத் தெரியவில்லையா உங்களுக்கு? எனில், உலக அரங்கில் நம்மால் எவ்விதம் முன்னேற முடியும்?

இதே கேள்வியை ஜப்பானியரும் சைனாக்காரரும் கேட்பதில்லை. அவர்கள் கம்ப்யூட்டர் படிப்பதெல்லாம் அவரவர் தாய்மொழியில்தான். இன்று ‘சிலிக்கன் வேலி’யில் இந்தியர்களைவிடச் சைனாக்காரர்கள் அதிகம். உலக அரங்கில் முன்னேறுவதையும் தாய்மொழியில் கற்பதையும் போட்டுக் குழப்பாதீர்கள். நம் தாய்மொழியில் முறையாகக் கற்றுச் சாதனைகள் புரிந்தால், வெள்ளைக்காரர்கள் அதைப் புரிந்து கொள்ளத் தமிழ் கற்றுக்கொள்வார்கள்.


ஜெயாசரண், இராமநாதபுரம்.

கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி தமிழ் என்கிறார்களே, அது எப்படி?

எழுத்துகள் குறைவு. ஒத்தாட்சரம், சம்யுக்தாட்சரம் என்று கூட்டெழுத்துகள் இல்லாமல் நேராக எழுதப்படும் மொழி. வரிவடிவ எளிமை. வட்டங்களும் சதுரங்களும் கொண்டது. குழப்பங்கள் அதிகம் இல்லை. இதனால், கணிப்பொறியால் பிழை திருத்துவதும் அடையாளம் காண்பதும், அதனுள் தமிழை உள்ளிடுவதும் சுலபம்.


சி.எஸ். சரவணகுமார், வேம்படிதாளம்.

வங்காள, மலையாள இலக்கியங்கள் வளர்ந்தது போல் தமிழ் இலக்கியங்கள் வளராதது ஏன்?

படிக்காமல் சொல்கிறீர்கள்.


அய்யை சி.முருகேசன், கடவூர்.

ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறள்களில் எந்த ஒரு குறளிலும் “தமிழ்” என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்தாதது ஏன்?

தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்தினாலும் தமிழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத காரணம், திருக்குறள் தமிழ் பேசும் தமிழர்களுக்கான நீதிகளை மட்டும் சொல்வதல்ல என்பதுதான். உலகப் பொதுமறை அது. அனைத்து மொழியினருக்குமான பொதுச் சொத்து. மொழி கடந்த மனித நீதி.


சுஜாதாவின், ‘கடவுள்’ என்னும் நூலிலிருந்து...........

‘செத்த பின் என்ன என்று தெரிந்துகொள்வதால் என்ன லாபம்? நான் செத்த பிறகு நானாக இருந்தால்தான் எனக்குப் பிரயோசனம். என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும். செத்தாலும், ஆத்மா தொடர்ந்து பாஸ்னியாவிலோ இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.

நான் நானாகத் தொடர வேண்டும். அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும். முத்தாரம் வேண்டும். கட்டுரை அனுப்பினால் அதை விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும். அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம் நினைவுகளின் அழிவு.........”

“சாம்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும்...” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

“செத்த பிறகும் தமிழ் வேண்டும்” என்றார் சுஜாதா.

தமிழைப் போற்றுவதில் எவருக்கும் சளைத்தவரல்ல எழுத்தாளர் சுஜாதா.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>